வழிவூர் முத்துவீர் பிள்ளை
- வழிவூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வழிவூர் (பெயர் பட்டியல்)
- முத்துவீர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துவீர் (பெயர் பட்டியல்)
வழிவூர் முத்துவீர் பிள்ளை (1888 - 1923) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்.
இளமை, கல்வி
மாயூரத்துக்கு அருகே உள்ள வழிவூர் என்னும் கிராமத்தில் பொன்னுஸ்வாமி பிள்ளை - பொன்னம்மாள் இணையருக்கு 1888-ம் ஆண்டு முத்துவீர் பிள்ளை பிறந்தார். முத்துவீர் பிள்ளைக்கு ஐந்து வயதாவதன் முன்னரே தாய் இறந்துவிடவே தந்தை கஞ்சனூர் சொக்கலிங்கம் பிள்ளையின் மகள் மீனாக்ஷி அம்மாளை மணந்துகொண்டார்.
முத்துவீர் பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே, தந்தை மாணவர்களுக்குத் தவில் கற்பிப்பதைப் பார்த்து அக்கருவி மேல் ஆர்வம் கொண்டார். எட்டு வயதில் கஞ்சனூர் சொக்கலிங்கம் பிள்ளையிடம் தவில் பயிற்சியைத் துவக்கினார். ஏழாண்டுகள் பயிற்சிக்குப் பின் கச்சேரிகளில் வாசிக்கும் திறன் பெற்றார்.
தனிவாழ்க்கை
முத்துவீர் பிள்ளைக்கு மாற்றாந்தாய் வழியாக ராஜம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் வழிவூர் வீராஸ்வாமி பிள்ளை), ஜகதாம்பாள்(கணவர்: வழிவூர் கர்ணம் கோவிந்தஸ்வாமி பிள்ளை) என்ற இரு தங்கைகளும் பக்கிரி ஸ்வாமி (தவில்) என்ற தம்பியும் இருந்தனர்.
முத்துவீர் பிள்ளை நாகூர் அ.த. சட்டையப்ப பிள்ளையின் மகள் அமிருதவல்லி என்பவரை மணந்தார். இவர்களுக்கு குஞ்சம்மாள் (கணவர்: திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை), ஜானகி (கணவர்: பெருஞ்சேரி ராமலிங்கம்) என்ற மகள்களும், முருகேசன் (தவில்), அழகர், ரங்கையன் என்ற மகன்களும் இருந்தனர்.
இசைப்பணி
நாகூர் சுப்பையா பிள்ளையின் குழுவில் நிரந்தரத் தவில்காரராக இருந்த முத்துவீர் பிள்ளை சிறந்த கைநாதமும், விரல் வேகமும் கொண்டவர்.
தவிற் கலைஞர்களுக்கு முக்கியமான சாதனமாக விளங்கும் கூடு என்னும் விரலுக்கு அணியும் பொருளை முதன்முதலாகத் தவிலுக்கு அறிமுகப்படுத்தியவர் முத்துவீர் பிள்ளை.
உடன் வாசித்த கலைஞர்கள்
வழிவூர் முத்துவீர் பிள்ளை பின்வரும் கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- நாகூர் சுப்பையா பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
- திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வழிவூர் முத்துவீர் பிள்ளையைத் தன் ஆதர்ச குருவாகக் கொண்டிருந்தார்.
மறைவு
வழிவூர் முத்துவீர் பிள்ளை 1923-ம் ஆண்டு தன் முப்பத்தாறாவது வயதில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 09:47:31 IST