under review

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை

From Tamil Wiki
மதுரை பொன்னுச்சாமி பிள்ளை
மதுரை பொன்னுச்சாமி பிள்ளை

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை (1877 - நவம்பர் 27, 1929) ஒரு முன்னோடி நாதஸ்வர இசைக்கலைஞர். பூர்விக சங்கீத உண்மை என்ற இசைநூலை எழுதியவர்.

இளமை, கல்வி

பொன்னுச்சாமிப் பிள்ளை மதுரையில் முத்துக்கருப்பப் பிள்ளை - அலமேலு அம்மாள் இணையருக்கு 1877-ல் பிறந்தார். மதுரை அருகே உள்ள திருமங்கலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் பரம்பரையாக நாயக்க மன்னர்களின் அவையில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்கள். பொன்னுச்சாமிப் பிள்ளையின் தந்தை முத்துக்கருப்பப் பிள்ளையின் நாதஸ்வர இசையைப் பாராட்டி எட்டாம் எட்வர்ட் மன்னர் நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசளித்திருக்கிறார். இவருடன் பிறந்த மூன்று தமையன்கள் - ராமநாதபுரம் சம்ஸ்தான வித்வான் அய்யாஸ்வாமி பிள்ளை, வழக்கறிஞர் சின்னஸ்வாமி பிள்ளை, தவில் கலைஞர் செல்லையா பிள்ளை.

பொன்னுச்சாமிப் பிள்ளை பரம்பரையாக தொடர்ந்த நாதஸ்வரக் கலையை முதலில் தன் தந்தையிடமே பயின்றார். பின்னர் மதுரையில் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞராக இருந்த சௌந்தரபாண்டியனிடமும் கும்பகோணம் நாராயணனிடமும் இசை பயின்றார். எட்டையபுரம் ராமச்சந்திர பாகவதரிடம் வாய்ப்பாட்டும், வீணையும் பயின்றார்.

தனிவாழ்க்கை

இவருடைய மனைவி மாரியம்மாள். நடேச பிள்ளை, ஷண்முகம் பிள்ளை என இரு மகன்கள். நடேச பிள்ளையின் இரு மகன்களாகிய எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுஸ்வாமி சகோதரர்கள் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள்.

இசைப்பணி

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை 1895 முதல் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.

முதலில் ராமநாதபுர அரசவை இசைக்கலைஞராக இருந்தவர். ஒருமுறை ராமேஸ்வரத்துக்கு வந்த மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார் பொன்னுச்சாமிப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவரை தன்னுடன் மைசூருக்கு அழைத்துச் சென்று ஆஸ்தான அவைக்கலைஞர் ஆக்கினார். கிரஹ பேதம் செய்து ராகங்களை இசைக்கும் முறையை முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் பொன்னுச்சாமிப் பிள்ளை. மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையின் ஹிந்தோள ராக வாசிப்பு பெரும் புகழ் பெற்றது. இவரது நாதஸ்வர இசை பல இசைத்தட்டுகளாக வெளிவந்திருக்கின்றது. கரந்தை ரத்தினம் பிள்ளையும் திருமங்கலம் சுந்தரேச பிள்ளையும் அனேக இசைத்தட்டுக்களில் உடன் தவில் வாசித்திருக்கிறார்கள்.

இவரது வீணை வாசிப்புத் திறனை வீணை தனம்மாள் மிகவும் பாராட்டியிருக்கிறார்.

பூர்விக சங்கீத உண்மை

கர்னாடக இசையில் 22 சுருதிகளின் அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள்(சம்பூர்ண ராகங்கள்) என வரையறை செய்தவர் வேங்கடமகி. சில ஸ்வரங்கள் இரு வேறு பெயர் கொண்டிருந்தாலும் ஒரே ஒலியைத்தான் கொண்டவை என்பதால், மேளகர்த்தா ராகங்கள் 72-ல்லை என மறுத்து, 32 மேளகர்த்தா ராகங்களே இருக்கின்றன என்னும் கருத்தை மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை கொண்டிருந்தார். இக்கருத்தை 'பூர்வீக சங்கீத உண்மை' என்னும் நூலாக எழுதி வெளியிட்டார்.

இந்நூல் ஐந்து பகுதிகளைக்(இயல்கள்) கொண்டது.

  1. நூல் மரபு
  2. கர்த்தா ராகத்தின் நிர்ணயம்
  3. மூர்ச்சை பிரசுரம்
  4. கர்த்தா ராகங்களும் அனுபவத்தில் இருக்கிற ஜன்ய ராகங்களும்
  5. இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்

கூறைநாடு நடேச பிள்ளை போன்ற சில புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கினார்கள். ஆனால் இக்கலைஞர்கள் தங்கள் கச்சேரிகளில் பொன்னுச்சாமிப் பிள்ளை மேளகர்த்தா ராகங்கள் அல்ல என்று ஒதுக்கிய 40 ராகங்களிலும் வாசித்திருக்கிறார்கள்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை நவம்பர் 27, 1929-ல் காலமானார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page