under review

கூறைநாடு நடேச பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: Koorainadu Natesa Pillai. ‎

கூறைநாடு நடேச பிள்ளை - நன்றி: மங்கல இசை மன்னர்கள்
கூறைநாடு நடேச பிள்ளை - நன்றி: மங்கல இசை மன்னர்கள்

கூறைநாடு நடேச பிள்ளை (1830-1925) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர். பல தானவர்ணங்களை இயற்றியிருக்கிறார்.

இளமை, கல்வி

மயிலாடுதுறை அருகே உள்ள கூறைநாடு என்னும் ஊரில் 1830-ல் ராமஸ்வாமி பிள்ளை - சுகந்தம்மா இணையருக்குப் பிறந்தார். இவரது தந்தை கூறைநாடு பரதம் ராமஸ்வாமி பிள்ளை என்று பெயர் பெற்ற இசை மற்றும் பரத நாட்டிய ஆசிரியர், முத்துஸ்வாமி தீட்சிதரின் மாணவர்.

குழந்தைப்பருவத்தில் இருந்தே தந்தையிடம் இசைப் பயிற்சி பெற்று, ஒன்பதாவது வயதிலேயே நூற்றுக்கணக்கான வர்ணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். பின்னர் பரத நாட்டியத்தையும் அதற்குரிய பாடல்களையும் கற்று பத்தொன்பதாவது வயதில் நட்டுவனாராக ஆனார். திருவிழந்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடமும், கோட்டை சுப்பராய பிள்ளையிடமும், இஞ்சிக்குடி குமரப்பிள்ளையிடமும் நாதஸ்வரம் கற்றார்.

தனிவாழ்க்கை

நடேச பிள்ளை இருபத்தாறாம் வயதில் நாதஸ்வர கலைஞர் திருவிழந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வாலாம்பாள் என்பவரை மணந்தார்.

இரண்டு மகன்கள் - சொக்கலிங்கம் பிள்ளை, சுப்பையா என்ற ஷண்முகம் பிள்ளை

ஒருமுறை திருவாரூர் அருகே ஒரு கிராமத்தில் நிகழ்ந்த நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு அவ்வூரின் ஜமீந்தார் நடேச பிள்ளையை அழைத்து நடனக் கலைஞரில் ஒருவரைத் தான் இரவு தனித்துச் சந்திக்க விழைவதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டார். மிகவும் ஆத்திரமடைந்த நடேச பிள்ளை கச்சேரிக்கான எந்த சன்மானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அன்றிரவே தனது குழுவை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினார். இச்சம்பவத்துக்குப் பிறகு நட்டுவனார் கலையில் ஈடுபடாது, நாதஸ்வரம் கற்றுக் கொள்வதென முடிவு செய்தார். முப்பது வயதில் புதிதாக நாதஸ்வரம் கற்றுக்கொள்வது கடினமென பலரும் கூறினர். ஆனால் நடேச பிள்ளை அம்முடிவில் உறுதியாக இருந்து தன் மாமனார் திருவிழந்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார். பின்னர் கோட்டை சுப்பராயப் பிள்ளையிடம் இரண்டு வருடங்களும் இஞ்சிக்குடி குமரப்பிள்ளையிடமும் இரண்டு வருடங்களும் சீடராக இருந்தார்.

முப்பத்து நான்காவது வயது முதல் நடேச பிள்ளை நாதஸ்வரக் கலைஞராக புகழ்பெற்றார்.

இசைப்பணி

நடேச பிள்ளை பல்லவி வாசிப்பதில் தனித்திறன் கொண்டவர். குறிப்பிட்ட தாளத்தில் அமைந்த பல்லவியைத் திடீரென வேறொரு தாளத்தில் வாசிப்பது இவரது வழக்கம். திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆஸ்தான நாதஸ்வரக் கலைஞராக இருந்தார். திருவாரூர் ஆலயத்தில் நாதஸ்வரத்துக்கென எந்தெந்த நாளில் என்னென்ன ராகம், பல்லவி வாசிக்கப்பட வேண்டுமென ஒரு இசை மரபு தொன்மைக்காலம் முதல் இருந்து வந்தது. அதுபோல் ஒரு இசைத்திட்டத்தை திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கும் பின்னர் சிதம்பரம் கோவிந்தராஜர் ஆலய ஆஸ்தான வித்வானாக ஆனபோது அங்கு ஒரு நாதஸ்வர இசை மரபைத் துவக்கிவைத்தார். இன்றுவரை இது பின்பற்றப் படுகிறது.

116 தானவர்ணங்களை தெலுங்கு சாஹித்யங்களோடும், சாஹித்யமில்லாத ஸ்வர அமைப்போடும் இயற்றியிருக்கிறார். சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தபோது இவ்வர்ணங்கள் குறித்துக் கேள்விப்பட்டு அவரும் திருப்பாம்புறம் சுவாமிநாத பிள்ளையும் கூறைநாடு சென்று நடேச பிள்ளையை சந்தித்து சுவடிகளைப் பெற்று, அவற்றுக்கு தமிழ் சாஹித்யங்கள் எழுதித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். ஆனால் அந்நூலில் நடேச பிள்ளையின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. அதற்கு முன்னரே பல ஏடுகள் எரிபொருளாக எரிக்கப்பட்டுவிட்டன.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கூறைநாடு நடேச பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

மறைவு

’கூறைநாட்டுத் தாத்தா" என அழைக்கப்பட்ட கூறைநாடு நடேச பிள்ளை 1925-ல் தன்னுடைய 96-வது வயதில் மறைந்தார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:45 IST