under review

மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை

From Tamil Wiki

மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை (இலுப்பூர் பஞ்சாமிப் பிள்ளை/ இலுப்பூர் பஞ்சாபகேசப் பிள்ளை/ மலைக்கோட்டை பஞ்சாபகேசப் பிள்ளை) (1905 - மார்ச் 23, 1935) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

புதுக்கோட்டை அருகே உள்ள இலுப்பூர் என்ற ஊரில் பாடுவனார் வீராசாமிப் பிள்ளை (இசைக்கலைஞர்) மகள் தைலம்மாளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1905-ம் ஆண்டு பஞ்சமி நாளில் பஞ்சாபகேசன் பிறந்தார்.

பிக்ஷாண்டார்கோவில் மேளத்தில் மூத்த சகோதரர்களுடன் தாளம் போடுவதற்காக ஆறு வயதான பஞ்சாமிப் பிள்ளை அழைத்துச் செல்லப்பட்டார். பட்டீஸ்வரம் வீராஸ்வாமி நாதஸ்வரக்காரர் கடினமான பல்லவியை வாசிக்க லால்குடி அங்கப்ப பிள்ளை சற்று சிரமப்படுவதைப் பார்த்த சிறுவன் பஞ்சாமி தான் வாசித்துக் காட்டட்டுமா எனக் கேட்டான். அங்கப்ப பிள்ளையும் தன் தவிலைக் கழற்றி சிறுவன் முன் வைத்தார். எல்லாரும் ஆச்சரியப்படும் விதம் பஞ்சாமி தரையில் அமர்ந்தபடி தவிலை வாசித்துவிட, அதைக் கண்ட மலைக்கோட்டை வெங்கடாசலத் தவில்காரர் தான் பஞ்சாமிக்குத் தவில் கற்பிக்க விழைவதாக அவரது தாய் தைலம்மாளிடம் சொன்னார்.

தவில் கற்கச் செல்லாமல் சிறுவர்களுடன் விளையாடச் சென்று கொண்டிருந்த பஞ்சாமியைப் பின்னர் லால்குடி அங்கப்ப பிள்ளையிடம் குருகுலமாக இருந்து தவில் கற்க அனுப்பி வைத்தனர்.

தனிவாழ்க்கை

பஞ்சாமிப் பிள்ளையின் தாயார் தைலம்மாள் திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் உயர் குடும்பங்களுக்குப் வாய்ப்பாட்டு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்தார். பஞ்சாமிப் பிள்ளையின் மூத்த சகோதரர்கள் அப்பாத்துரை (நாதஸ்வரம்), நடேசன் (நாதஸ்வரம்), சுந்தரேசன், மூத்த சகோதரி மீனாம்பாள்.

பஞ்சாமிப் பிள்ளை லால்குடியைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸரஸ்வதி (கணவர்: முத்தையா பிள்ளை), சாரதா (கணவர்: வெங்கடேச பிள்ளை) என்று இரு மகள்கள்.

இசைப்பணி

தவில்

பஞ்சாமிப் பிள்ளையின் எட்டாவது வயதில் ஒரு முறை மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நிதியில் நடேசபிள்ளை மேளத்தில் தவில்காரரைக் காணாத போது பஞ்சாமிப் பிள்ளை தவில் வாசிக்கத் தொடங்கினார். பின்னர் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையிடம் ஐந்து வருட ஒப்பந்த முறையில் பஞ்சாமிப் பிள்ளை தவில் வாசித்தார். அவருடன் மைசூரில் வாசித்து தங்கத் தவிற்சீலையும் பதக்கங்களும் பரிசாகப் பெற்றார். ஒப்பந்த காலத்துக்குப் பிறகு வெளியேறிவிட்டார்.

பதினெட்டாவது வயதில் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையிடம் சேர்ந்து மூன்றாண்டுகளில் விலகி விட்டார். பின்னர் பஞ்சாமிப் பிள்ளை லால்குடி அங்கப்ப பிள்ளையுடனேயே வாசித்து வந்தார்.

வாய்ப்பாட்டு, கஞ்சிரா

பஞ்சாமிப் பிள்ளை தன் இருபத்தி இரண்டாவது வயதில் தவில் வாசிப்பதை நிறுத்துவிட்டு பாட்டுக் கச்சேரி செய்ய ஆரம்பித்தார். குரல் வளம் கொண்ட பஞ்சாமிப் பிள்ளை சுமார் இரண்டு வருடங்கள் தவில் வாசிப்பதை நிறுத்தியிருந்தார். மீண்டும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சொல்லுக்கு இணங்க தவில் வாசிக்க ஆரம்பித்தார்.

பஞ்சாமிப் பிள்ளை வாய்ப்பாட்டு மட்டுமன்றி கச்சேரிகளில் கஞ்சிராவும் வாசித்திருக்கிறார். முதன்முதலாக மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின் கச்சேரியில் கஞ்சிரா வாசித்தார்.

பாடல்கள்

இசைக்கருவிகள் வாசிப்பதைத் தவிர பஞ்சாமிப் பிள்ளை பல பாடல்களும் இயற்றியிருக்கிறார். 'நிவரதிஸுகத '(ராகம் ரவிசந்திரிகா), 'மரியாதகாதுரா' (ராகம் சங்கராபரணம்), 'பலுகவேமினா' (ராகம் பூர்ணசந்திரிகா) போன்ற பல கீர்த்தனைகளுக்கு சிட்டைஸ்வரங்கள் அமைத்திருக்கிறார்.

'நின்னுஜூசி', 'பலுகவேமினா', 'மரகதமயில்', 'சரவணபவ', 'பாவட்டஞ் சோலையிலே'', 'உன்னை மறந்திடுவேனோ' முதலிய பாடல்களைப் பாடி ஓடியன் இசைத்தட்டுக்களில் பதிவு செய்துள்ளார்.

உடன் வாசித்த கலைஞர்கள்

மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை பின்வரும் கலைஞர்களுக்கு வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளையிடம் கற்ற முக்கியமான மாணவர்கள்:

  • திருபுவனம் சோமுப்பிள்ளை
  • அத்திக்கடை கண்ணுப்பிள்ளை
  • சிங்காரம் பிள்ளை

மறைவு

1932-ம் ஆண்டு சென்னை இசை விழாவில் தவிலும் கஞ்சிராவும் தொடர்ந்து வாசித்து இருதய நோய் வந்து குணமாகி இருந்த மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை ஓராண்டு தவில் வாசிக்கமாலிருந்தார்.

1935-ல் நண்பர்களாகிய மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி சிவகிரியில் வாசிக்கச் சென்று ஏழாவது நாள் வாசித்துக் கொண்டிருந்தபோதே ரத்த வாந்தி எடுத்து மயக்கமுற்ற பஞ்சாமிப் பிள்ளை மார்ச் 23, 1935 அன்று 8.30 மணிக்கு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 06:47:16 IST