under review

மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை

From Tamil Wiki
மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை (1898 -1947) இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் வாழ்ந்த நாதஸ்வர கலைஞர்.

இளமை, கல்வி

மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை மெய்கண்ட பிள்ளை - ருக்மணி அம்மாள் இணையருக்கு 1898-ம் ஆண்டு பிறந்தார். மெய்கண்ட பிள்ளை சாலை செப்பனீட்டைக் கண்காணிக்கும் வேலையில் இருந்தார். ஐந்து சகோதரர்கள் இளமையிலேயே இறந்துவிட்டார்கள். ஒரு சகோதரி சேஷம்மாள் (கணவர்: நாதஸ்வர கலைஞர் திருக்களம்பூர் மகாதேவ பிள்ளை)

மெய்கண்ட பிள்ளையின் விருப்ப்படி பள்ளிப்படிப்பை கவனித்துக்கொண்டே நாதஸ்வரப் பயிற்சியிலும் ஈடுபட்டார். வடபாதிமங்கலத்தில் இருந்த எலந்துரை சகோதரர்களில் நாராயண ஸ்வாமி பிள்ளையிடம் பயற்சி தொடங்கியது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்துக்கும் நாதஸ்வரத்தின் மேல் இருந்த ஆர்வத்துக்கும் இடையில் மனப்போராட்டத்தில் இருந்தார். மகனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட தந்தை மாணிக்கம் பிள்ளையை கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் குருகுலவாசத்துக்கு அனுப்பிவைத்தார்.

தனிவாழ்க்கை

நாதஸ்வர கலைஞர் அத்திக்கடை சுப்பையா பிள்ளையின் மகள் அஞ்சுகம் அம்மாளை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்:

  1. கிருஷ்ணமூர்த்தி (நாதஸ்வரம்)
  2. பத்மாவதி
  3. தக்ஷிணாமூர்த்தி (தவில்)
  4. கணேசன்

இசைப்பணி

நாதஸ்வர இசையில் மிக சிறப்பாக விளங்கிய மாணிக்கம் பிள்ளைக்கு பல ஊர்களில் கச்சேர் செய்யும் வாய்ப்புகள் அமைந்தன. சாதரா, பதக்கங்கள் என பல பரிசுகள் பெற்றார். ராக ஆலாபனையில் மிகவும் சிறப்புப் பெற்றிருந்த மாணிக்கம் பிள்ளை ஓரிரு நிமிடங்களிலேயே ராகத்தின் ஸ்வரூபத்தை, ஜீவனை வெளிப்படுத்தும் திறமை கொண்டிருந்தார்.

மாணிக்கம் பிள்ளை ஹூசேனி, அடாணா ராகங்களை மணிக்கணக்கில் விரிவாக வாசிப்பதில் வல்லவர்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

குன்னியூர் பண்ணையில் ஒரு திருமண நிகழ்வு முடிவில் ஒரு ரசிகர் மேளம் முடியவிருக்கும் சமயம் வந்து ஹூசேனியும், அடாணாவும் வாசிக்குமாறு கேட்டார். மாணிக்கம் பிள்ளை வேறொரு சமயம் வாசிப்பதாக சொன்னதை அந்த ரசிகர் கேட்காது சிறிது நேரமாவது வாசிக்கும்படி கோரினார். மாணிக்கம் பிள்ளை அதன்படியே வாசித்துவிட்டு ஒரு வீட்டுத் திண்ணையில் சென்று நெஞ்சுவலி எனப் படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது, இவ்வாறு நவம்பர் 27, 1947அன்று குன்னியூர் அக்கிரகாரத்தில் மாணிக்கம் பிள்ளை காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 07:17:55 IST