under review

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
சோமசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சோமசுந்தரம் (பெயர் பட்டியல்)

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை [காவாலக்குடி சோமுப் பிள்ளை] (மே 16, 1882 - டிசம்பர் 20, 1952) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

கடலூர் மாவட்டத்தில் காவாலக்குடி என்னும் கிராமத்தில் கிருஷ்ணஸ்வாமி தவில்காரர் - கண்ணம்மாள் இணையருக்கு மே 16, 1882 அன்று சோமசுந்தரம் பிள்ளை பிறந்தார். காவாலக்குடி என்னும் ஊர் சோமசுந்தரம் பிள்ளையின் அன்னையின் கிராமம். தந்தை கிருஷ்ணஸ்வாமி பிள்ளை திருக்கண்ணமங்கையை சேர்ந்தவர்.

ஆறு வயதில் தன் பெரிய தந்தை காளிகுஞ்சான் பிள்ளையிடம் தவில் கற்கத் துவங்கினார் சோமசுந்தரம் பிள்ளை. எட்டு ஆண்டுகள் கடும் பயிற்சிக்குப் பிறகு திருக்கண்ணமங்கை வேணுகோபால பிள்ளையின் நாதஸ்வரக் குழுவில் முதலில் வாசிக்கத் துவங்கினார்.

தனிவாழ்க்கை

புதுப்புத்தூர் கோவிந்தஸ்வாமி பிள்ளை என்பவரின் பெண் மாணிக்கத்தம்மாளை திருமணம் செய்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (சிக்கில் நாதஸ்வரக் கல்லூரியில் ஆசிரியர்), வாசுதேவன் (தவில்) என்ற இரு மகன்களும் ராஜலக்ஷ்மி (தவில் கலைஞர் கள்ளிமேடு செல்லையா பிள்ளையின் மனைவி) என்ற மகளும் பிறந்தனர்.

இசைப்பணி

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை பிற கலைஞர்கள் எவ்வளவு கடினமான ஜதி அல்லது கோர்வையை வாசித்தாலும் அதை அப்படியே வாசித்து விடும் திறன் பெற்றவர் என்று திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளையால் பாராட்டப் பெற்றவர். பிற கலைஞர்கள் குறித்து பேசும் போது அவர்களது வாசிப்பின் தனித்திறமையை அடையாளம் கண்டு, அவர்கள் எந்தக் கச்சேரியில் எவ்விதம் சிறப்பாக வாசித்தனர் என்று குறிப்பிட்டு சொல்வது சோமசுந்தரம் பிள்ளையின் தனிச்சிறப்பு என நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் குறிப்பிட்டிருக்கிறார்.

மாணவர்கள்

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளையிடம் கற்ற மாணவர்கள் சிலர்:

  • யாழ்ப்பாணம் கந்தஸ்வாமி
  • கனகசபாபதி
  • கோவிலூர் சுந்தரேச பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை டிசம்பர் 20, 1952 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Feb-2023, 06:11:16 IST