under review

திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை

From Tamil Wiki
திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை (1883-1967) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

மாணிக்கம் பிள்ளை திருவலஞ்சுழியில் இசைக் கைங்கர்யம் செய்த பெத்தான் தவில்காரர் - கமலத்தம்மாள் மகனாக 1883-ம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஒரு தங்கை

சிறந்த ஆசிரியராக விளங்கிய கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் சீடனாகச் சேர்ந்து, பன்னிரண்டு ஆண்டுகள் குருகுல முறையில் கற்றார். தினந்தோறும் இடைவிடாத சாதகமும் நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை போன்றோரின் வாசிப்பை அடிக்கடிக் கேட்கும் வாய்ப்புகளும் மாணிக்கம் பிள்ளையைச் சிறந்த கலைஞர் ஆக்கின.

தனிவாழ்க்கை

கீவளூர் முகவீணைக் கலைஞர் பக்கிரிப்பிள்ளை என்பவரின் மகள் அகிலாண்டத்தம்மாளை மாணிக்கம் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண்கள், ஒரு மகன்:

  • முத்துலக்ஷ்மி (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருவிடைவாசல் ராதாகிருஷ்ண பிள்ளை)
  • திருவலஞ்சுழி பசுபதி பிள்ளை (நாதஸ்வரம்)
  • அஞ்சம்மாள் (கணவர்: தவில்காரர் திருக்குவளை கோதண்டபாணிப் பிள்ளை)
  • சுந்தராம்பாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருவிடைமருதூர் கோவிந்தராஜ பிள்ளை)

பசுபதி பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கு காலமானார்.

இசைப்பணி

சிக்கல் அருகே இருந்த திருக்கண்ணங்குடி ஆலயத்தில் வருடந்தோறும் நிகழ்ந்து வந்த மண்டகப்படியில் மாணிக்கம் பிள்ளை கச்சேரி செய்வது வழக்கம். கீவளூர் (கீழ்வேளூர்) ரசிகர்கள் இவரை தங்கள் ஊருக்கு வந்து வாசிக்கும்படி கோரவே கீவளூரில் குடியேறினார்.

இருபத்தேழாம் வயதில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கந்தஸ்வாமி கோவிலில் சிறப்பாக நாதஸ்வரம் வாசித்ததற்காக மாணிக்கம் பிள்ளைக்கு 125 பவுனில் தங்க நாதஸ்வரம் பரிசாக வழங்கப்பட்டது. பல வருடங்கள் அக்கோவிலுக்குச் சென்று வாசித்து வந்தார். இதனால் 'நல்லூர் மாணிக்கம்’ என்றே அழைக்கப்பட்டார். வேதாரண்யம் கோவிலில் தொடர்ந்து 26 ஆண்டுகள் வாசித்திருக்கிறார். திருவிடைமருதூர் தைப்பூச விழாவில் வருடந்தோறும் இவரது கச்சேரியை திருவாவடுதுறை ஆதீனத்தார் ஏற்பாடு செய்தனர்.

மேல் கால ஸ்வரம் வாசிப்பதிலும், அதிக நேர ஆலாபனை செய்வதிலும், சுருள் சுருளான பிருகாக்களும், விரலடிகளும் இசைப்பதிலும் பெரும் திறமை கொண்டிருந்தார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை முதுமையில் வறுமையிலிருந்தார். 1967-ம் ஆண்டு திருவிடைமருதூரில் தன் மகள் இல்லத்துக்குச் சென்று இரண்டு நாட்களில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2023, 06:27:54 IST