மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை (1869 - ஜனவரி 16, 1915) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
மன்னார்குடியில் பரம்பரையாக நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் நிறைந்த குடும்பத்தில் நாதஸ்வரக் கலைஞர் ராமநாத பிள்ளை - காமாக்ஷியம்மாவுக்கு ஒரே மகனாக 1869-ம் ஆண்டு சின்னப்பக்கிரிப் பிள்ளை பிறந்தார். மன்னார்குடியிலேயே பக்கிரி எனப் பெயர்கொண்ட இன்னொரு நாதஸ்வரக் கலைஞர் இருந்ததால் சின்னப்பக்கிரி என்றழைக்கப்பட்டு அப்பெயர் நிலைத்துவிட்டது.
உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளையிடமும் நீடாமங்கலம் சிவக்கொழுந்து பிள்ளையிடமும் நாதஸ்வரம் கற்றார்.
தனிவாழ்க்கை
நாதஸ்வரக் கலைஞர் தாராசுரம் சக்ரபாணி பிள்ளையின் மகள் பக்கிரியம்மாளை மணந்து கொண்டார். பக்கிரியம்மாள் இரண்டாண்டுகளில் மரணம் அடைந்துவிட பிறகு நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் சகோதரி தேனாம்பாளை மணந்தார். இரு மனைவிகள் மூலமும் குழந்தைகள் இல்லை. தேனாம்பாள் தன் சகோதரியின் பேரன் கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளையை வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்.
இசைப்பணி
சின்னப்பக்கிரிப் பிள்ளை பொருளியல் தேவைகளுக்காக முதலில் சில நாதஸ்வரக் கலைஞர்களிடம் ஒத்து ஊதுபவராக இருந்திருக்கிறார். தானும் நாதஸ்வரம் கற்க வேண்டுமென்ற ஆவலில் முதல் மூன்று மாத சம்பளம் பெற்றவுடன் அவர் பெரிதும் மதித்த உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளையிடம் சென்று சீடராக சேர்ந்தார். முத்துவீருஸ்வாமி பிள்ளை வீட்டுப் பெண்கள் ஓயாமல் வேலை ஏவிக் கொண்டே இருப்பதைப் பொறுக்க முடியாமல் ஒரு வருட காலம் கழித்து அங்கிருந்து விலகிவிட்டார். பின்னர் நீடாமங்கலம் சிவக்கொழுந்து பிள்ளையிடம் கற்றார். சிவக்கொழுந்து பிள்ளைக்கு பதிலாக அவ்வப்போது கோவிலில் வாசிக்கும் சின்னப்பக்கிரிப் பிள்ளையின் இசையறிவைக் கண்ட ஆசிரியர், அவரை ஆசீர்வதித்து தனியாகக் கச்சேரிகள் செய்யுமாறு அனுப்பி வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் இவருக்கு பக்கிரிப் பிள்ளை என்பவர் தவில் வாசித்தார். இவர்தான் பிற்காலத்தில் மன்னார்குடி 'பல்லு’ப் பக்கிரிப்பிள்ளை என்றறியப்பட்ட கொன்னக்கோல் விற்பன்னர்.
நாதஸ்வரத்துக்கென்று உள்ள சில வாசிப்பு முறைகளான துத்துக்காரம், தன்னக்காரம், அகாரம், பிருகா, விரலடி போன்றவை அனைத்திலும் திறமை பெற்றவர் என திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையால் பாராட்டப்பட்டவர் சின்னப்பக்கிரிப் பிள்ளை. "மேல்காலஸ்வரம் வாசிப்பதில் அவருக்கிணையாகப் பிறந்தவர் எவருமேயில்லை; அவர் ஒரு யுகபுருஷர்" என்று நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் சின்னப்பக்கிரிப் பிள்ளையின் வாசிப்பைப் புகழ்ந்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி வாசிப்புக்கு இவருக்குக் கிடைத்த சன்மானமான யானையை மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி ஆலயத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
மாணவர்கள்
மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள் இருவர்:
- மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை
- சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை - 'கீரனூர் சகோதரர்’களில் ஒருவர்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை
- அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை
- வழிவூர் முத்துவீர் பிள்ளை
- கரந்தை ரத்தினம் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- சிக்கல் நாராயணப் பிள்ளை
- இலுப்பூர் நல்லகுமார் பிள்ளை
- பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை
மறைவு
மன்னார்குடியில் டெபுடி கலெக்டராக இருந்த இசை ரசிகர் ஒருவர் மாற்றலாகிப் போனபோது சின்னப்பக்கிரிப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டுவிட்டுப் புறப்பட வேண்டுமென ஆசைப்பட்டார். அப்போது மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமியின் திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஸ்வாமி வீதியுலா துவங்கியதும் சின்னப்பக்கிரிப் பிள்ளை வாசித்தார். தனது சிறப்பு ராகமான பேகடாவை இரண்டரை மணி நேரம் ஆலாபனை செய்தவர், வயிற்றில் ஏதோ தொந்தரவென வீடு வரை சென்றார். காலரா நோய்தாக்கி மறுநாள் ஜனவரி 16, 1915 அன்று காலை மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 07:10:57 IST