மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை
மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை (1880 - 1940) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் நட்டுவனார் சாமிநாதப் பிள்ளையின் மகனாக 1880-ம் ஆண்டு நாராயணஸ்வாமி பிள்ளை பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் கண்ணம்மாள், வேணுகோபாலன், தையலை அம்மாள்.
நாராயணஸ்வாமி பிள்ளை மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் மாணவராக பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
நாராயணஸ்வாமி பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர் திருவாரூர் சாமியப்ப பிள்ளையின் மகள் மீனாக்ஷியம்மாளை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு பெண்கள்:
- மன்னார்குடி சாரநாத பிள்ளை (18ஆம் வயதிலேயே மறைந்த சிறந்த நாதஸ்வரக் கலைஞர்)
- வெங்கட கோபாலன்
- ஆறுமுகம் பிள்ளை (தவில் கலைஞர், பின்னர் கஞ்சிரா, வாய்ப்பாட்டு, கொன்னக்கோல் முதலியவை கற்றுத் தேர்ந்தவர்)
- நாகரத்தினம்
- நீலாம்பாள்
இசைப்பணி
நாராயணஸ்வாமி பிள்ளை நாதஸ்வரக் கச்சேரியுடன் அவ்வப்போது வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் நடத்தும் வழக்கம் இருந்தது. சிறந்த நாதஸ்வரக் கலைஞர் எனப் பெயர் பெற்றிருந்த நாராயணஸ்வாமி பிள்ளை, அப்போது இளைஞராக இருந்த அரியக்குடி ராமானுஜ அய்யங்காரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சில பாட்டுக் கச்சேரிகள் செய்திருக்கிறார்.
மாணவர்கள்
மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள் இருவர்:
- மன்னார்குடி பொன்னுஸ்வாமிப் பிள்ளை
- கோவிந்தஸ்வாமி பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளைடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை (நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையை சேர்வதற்கு முன்னர் இவருக்கு வாசித்தார்)
- மன்னார்குடி நடேச பிள்ளை
- திருமாகாளம் மகாதேவ பிள்ளை
- வேதாரண்யம் வேணுப் பிள்ளை
- சிக்கல் ருத்ராபதி பிள்ளை (இவர் தவில்காரர், இதே பெயரில் நாதஸ்வரக் கலைஞரும் உண்டு)
- திருக்கண்ணமங்கை அப்பாக்கண்ணு பிள்ளை
மறைவு
மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை 1940-ம் ஆண்டு சீதபேதியால் மரணமடைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 07:07:57 IST