அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை
- பக்கிரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பக்கிரி (பெயர் பட்டியல்)
To read the article in English: Ammapettai Pakkiri Pillai.
அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை (அம்மாப்பேட்டையார்) (1874 - 1920) ஒரு புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர்.
இளமை, கல்வி
அம்மாப்பேட்டைக்கு அருகே உள்ள தீபாம்பாள்புரம் என்னும் சிற்றூரில் 1874-ம் ஆண்டில் நாதஸ்வரக் கலைஞர் குருமூர்த்தி - நாடியம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பக்கிரிப் பிள்ளை பிறந்தார்.
தீபாம்பாள்புரத்துக்கு அருகில் திருக்கருகாவூரில் இருந்த சிவகுருநாதத் தவில்காரரிடம் தவில் கற்றார். மேளக் கச்சேரிகளில் வாசிக்கும் அளவு திறமை பெற்ற பின்னர் ஸ்ரீவாஞ்சியம் கோவிந்த தவில்காரரிடம் மேற்பயிற்சியாக லயநுட்பங்களைக் கற்றார்.
தனிவாழ்க்கை
பக்கிரிப் பிள்ளைக்கு அருணாசலம் (தவில்), சுந்தரம் (நாதஸ்வரம்) என்ற இரு தம்பிகளும் ரத்தினம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை) என்ற தங்கையும் இருந்தனர்.
பரதநாட்டியக் கலைஞர் திருவாரூர் ஞானத்தம்மாளுக்கு மிருதங்கம் வாசித்த மன்னார்குடி கோபால முட்டுக்காரரின் மகள் செங்கம்மாள் என்பவரை 1897-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண்கள்:
- ருக்மணி (கணவர்: சாவேரி கந்தஸ்வாமி பிள்ளையின் மகன் முருகையா பிள்ளை - நாதஸ்வரக் கலைஞர்)
- ரதியம்மாள் (திருவாரூரில் திருமணமானவர்)
- ஸம்பூர்ணம் (இளமையில் இறந்துவிட்டார் - இவரை திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளைக்கு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கு முன்னரே இவர் மறைந்துவிட, முத்துக்கிருஷ்ண பிள்ளை அதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை)
இசைப்பணி
பக்கிரிப் பிள்ளை திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையுடம் பதினைந்தாண்டுகள் வாசித்து முழுமையான தவில் வித்வான் எனப் பெயர் பெற்றார். பின்னர் மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையுடன் வாசிக்கத் துவங்கியதும் ’நாதஸ்வரத்துக்கு ஒரு பக்கிரி, தவிலுக்கொரு பக்கிரி’ என இருவரும் பெரும் புகழ் பெற்றனர். பின்னர் ஒரு மனவருத்தத்தால் இந்த இணையர் பிரிந்தனர்.
அதிதுரித காலத்தில் மேலிருந்து கீழ்நோக்கியும், கீழிருந்து மேல்நோக்கியும் வாசிக்கும் திறனைக் கொண்டிருந்ததை பக்கிரிப் பிள்ளையின் 'அறங்கை புறங்கை’ பேசும் எனப் புகழப்பட்டது.
உடன் வாசித்த கலைஞர்கள்
அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை
- உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- திருமருகல் நடேச பிள்ளை
மறைவு
அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை 1920-ம் ஆண்டு சங்கரனார்கோவில் உற்சவத்தில் வாசிப்பதற்கு திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளையுடன் சென்றிருந்தார். அங்கு நான்காவது நாள் கடுமையான காய்ச்சலும் அம்மை நோயும் கண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
- https://solvanam.com/2019/02/09/இசைவேளாளர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:06 IST