திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- திருவாரூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவாரூர் (பெயர் பட்டியல்)
திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை (அக்டோபர் 12, 1854 -பிப்ரவரி 18, 1925) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், பலமொழிகளில் புலமை பெற்றவர்
இளமை, கல்வி
திருவாரூரில் பரம்பரையாக இறைவனுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் 'நயினாரடியார்’ குடும்பத்தில் பழனிவேல் பிள்ளை - சுந்தரநாயகி அம்மாள் இணையருக்கு அக்டோபர் 12, 1854-அன்று ஸ்வாமிநாத பிள்ளை பிறந்தார்.
தன் தந்தை பழனிவேல் பிள்ளையிடம் முதல் இசைப்பயிற்சி பெற்றார். பின்னர் பழனிவேல் பிள்ளையின் சகோதரியின் கணவராகிய கோட்டை சுப்பராய பிள்ளை என்னும் நாதஸ்வரக் கலைஞரிடம் பயின்றார்.
இசை இலக்கணம் பற்றிய நூல்களும், பல கீர்த்தனைகளும் பிற மொழிகளிலேயே இருந்ததால் தமிழோடு வடமொழி, தெலுங்கு ஆகியவையும் கற்றார். ஆர்வம் காரணமாக சுய முயற்சியில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 'ஸப்த பாஷா ப்ரவீண’ என்ற விருதும் பெற்றிருக்கிறார்.
தனிவாழ்க்கை
திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளையின் முதல் மனைவி அம்மணியம்மாள், இவர் இளமையிலேயே காலமானார். பின்னர் கிடிகிட்டிக் கலைஞர் திருக்குவளை வீராஸ்வாமி பிள்ளையின் மகள் வண்டாள் அம்மாளை மணந்தார்.
ஸ்வாமிநாத பிள்ளைக்கு எட்டு மகன்கள், எட்டு மகள்கள் (பார்க்க படம்).
இசைப்பணி
வழிவழியாக வந்த ஆலய இசைக் கைங்கர்யத்தோடு வெளி ஊர்களிலும் கச்சேரிகள் செய்தார். சாகித்ய சுத்தம், இலக்கண நெறி தவறாத இசை இவருடைய தனிச்சிறப்பு. இவரது இசைத்திறனைப் போற்றி மைசூர் மன்னர் தங்க நாதஸ்வரம் போன்ற பல பரிசுகள் அளித்திருகிறார்.
ஒரு முறை, நாகப்பட்டணம் நீலாயதாக்ஷி அம்மன் கோவில் புஷ்பப் பல்லக்கில் 18 மேளக் குழுவினர் கலந்து கொண்டு, சிறப்பாக வாசிப்பவர்களுக்கு 85 சவரன் எடையுள்ள தங்க நாதஸ்வரம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருமருகல் நடேச பிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை, மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை போன்ற பல பெரிய விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே சிறப்பாக வாசித்த அந்நிகழ்வில் திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளைக்கு தங்க நாதஸ்வரம் பரிசாக அளிப்பதாக கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை தீர்ப்பு வழங்கினார். அனைவரும் அதை ஏற்றனர்.
மற்றொரு முறை, மணலி முதலியார், காவாலக்குடி முதலியார், திருக்கொட்டாரம் முதலியார், வயலூர் ரெட்டியார் என்னும் செல்வந்தர்கள் சேர்ந்து வெள்ளியில் நாதஸ்வரம் செய்து ஸ்வாமிநாத பிள்ளைக்கு வழங்கினார்கள்.
மாணவர்கள்
திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- திருப்பாம்புரம் சுந்தரம் பிள்ளை
- செல்வகணபதி பிள்ளை
- திருவாரூர் தியாகப்பா பிள்ளை
- டி.என். சின்னத்தம்பி பிள்ளை
- டி.என். லக்ஷப்பா பிள்ளை
- திருவாரூர் ராஜாயி அம்மாள்
- திருவாரூர் சௌந்தரவல்லி அம்மாள்
- சந்தானம் ஐயர்
- பிச்சுகுருக்கள்
- கண்ணு குருக்கள்
- நாகப்பட்டணம் 'பிளேட்’ வெங்கடராமையர்
- ஸ்ரீரங்கம் அய்யங்கார் சகோதரர்கள் (முதலில் நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் பயின்றனர்)
- காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை (கீர்த்தனைகள் பாடம்)
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை
- அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை
- வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை
- காவாலக்குடி சோமுப்பிள்ளை
- வழிவூர் முத்துவீர் பிள்ளை
- கரந்தை ரத்தினம் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- திருவாரூர் முத்துக்கண்ணுப் பிள்ளை
- மன்னார்குடி நடேச பிள்ளை
- திருவாரூர் வைத்தியலிங்கம் பிள்ளை
- திருவாரூர் பெரியசாமி பிள்ளை
- வேலுப்பிள்ளை
மறைவு
திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை பிப்ரவரி 18, 1925 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Jul-2023, 06:31:39 IST