under review

வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை

From Tamil Wiki

வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை (1890 - மே 31, 1931) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

வேதாரண்யத்தில் சுப்பிரமணிய நாதஸ்வரக்காரர் - காமாட்சியம்மாள் இணையருக்கு மார்ச் 2, 1890-ல் பொதுச்சாமி பிள்ளை பிறந்தார்.

தந்தை சுப்பிரமணிய பிள்ளை பொதுச்சாமி பிள்ளையை நாதஸ்வரம் கற்கவென கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் அழைத்துச் சென்றார். அவர் பார்த்தவுட்னேயே பொதுச்சாமி பிள்ளைக்கு நாதஸ்வரம் வருமெனத் தோன்றவில்லை என்றும், கற்றுத்தர முயற்சித்துப் பார்ப்பதாகவும் கூறினார். பொதுச்சாமி பிள்ளை எந்நேரமும் தவிலை வைத்துக் கொண்டு வாசிக்க முயல்வதைப் பார்த்த சௌந்தரராஜ பிள்ளை யாரிடமாவது தவில் கற்கச் சொன்னார். தவிலை முதன்முதலாகத் தட்ட கற்பித்த சௌந்தரராஜ பிள்ளையே தன் குருவென்றும் வேறொரு குருவைத் தேடிப் போக மாட்டேன் என பொதுச்சாமி பிள்ளை மறுத்துவிட்டார். சௌந்தரராஜ பிள்ளையின் ஆசிகளுடன் வேதாரண்யம் திரும்பிய பொதுச்சாமி பிள்ளை தவில் ஒன்று வாங்கித் தானே சாதகம் செய்யத் தொடங்கினார்.

வேதாரண்யம் ஸ்வாமிநாத நட்டுவனார் பொதுச்சாமி பிள்ளைக்கு ஜதிகள், மோஹராக்கள் மற்றும் லய நுணுக்கங்கள் சிலவற்றைக் கற்பித்தார்.

தனிவாழ்க்கை

பொதுச்சாமி பிள்ளைக்கு மகாலட்சுமி, கோவிந்தலட்சுமி, அஞ்சுகம், நாகம்மாள் என நான்கு சகோதரிகள் இருந்தனர்.

தவில்கலைஞர் சித்தாய்மூர் அப்பாகுட்டிப் பிள்ளையின் மகள் வேலம்மாளை பொதுச்சாமி பிள்ளை திருமணம் செய்தார். இவர்களுக்கு சிவசுப்பிரமணியம் என்றொரு மகன்.

இசைப்பணி

பொதுச்சாமி பிள்ளை முதலில் சித்திரை முதல் ஆவணி வரை ஐந்து மாதங்களுக்கு முன்னூறு ரூபாய் சம்பளத்தில் கும்பகோணம் பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளைக்குத் தவில்காரராக இருந்தார். பின்னர் டி. என். ராஜரத்தினம் பிள்ளையிடம் தவில்காரராக இருந்தார். ராஜரத்தினம் பிள்ளை பல கச்சேரிகளுக்குப் பொதுச்சாமி பிள்ளைக்குப் பணம் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கவே ஒருமுறை கத்தியை எடுத்துக்கொண்டு ராஜரத்தினம் பிள்ளையை மிரட்டிப் பணம் பெற்றார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளையிடம் சேர்ந்து பதினோரு ஆண்டுகள் அக்குழுவில் வாசித்தார் பொதுச்சாமி பிள்ளை. பொதுச்சாமி பிள்ளை திருவாவடுதுறை சன்னிதானத்திலும் யாழ்ப்பானத்திலும் சாதராக்களும் பல சன்மானங்களும் பெற்றிருக்கிறார்.

பொதுச்சாமி பிள்ளை பலமுறை யாழ்ப்பாணம் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார். தலை சிறிதும் அசையாமல் தவில் வாசிப்பவர் என்ற பெருமை பொதுச்சாமி பிள்ளைக்கு இருந்தது. ஒருமுறை பொதுச்சாமி பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மலைக்கோட்டை பஞ்சாமி பிள்ளை மூவரும் தலையில் எலுமிச்சை வைத்துக் கொண்டு அது கீழே விழாமல் வாசிக்க வேண்டுமெனப் போட்டி வைத்துக்கொண்டனர். மற்ற இருவரது பழங்களும் விழுந்துவிட்டாலும் கச்சேரி இறுதிவரை தலையில் இருந்து பழம் விழாமல் வாசித்தார் பொதுச்சாமி பிள்ளை .

மாணவர்கள்

வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • சித்தாய்மூர் கணேச பிள்ளை (மைத்துனர்)
  • சாக்கோட்டை செல்லையா பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்

வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை மே 31, 1931 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page