பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- சுப்பிரமணிய பிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணிய பிள்ளை (பெயர் பட்டியல்)
பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை (1886-1958) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
சுப்பிரமணிய பிள்ளை, காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தானக் நாதஸ்வரக் கலைஞராக இருந்த ஆராவமுத பிள்ளையின் மகனாக 1886-ம் ஆண்டு பிறந்தார். தாய் நாகம்மாள். கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தின் நாதஸ்வர சேவையை பரம்பரையாக செய்த குடும்பம் இவருடையது. சுப்பிரமணிய பிள்ளைக்கு கோமளவல்லி என்ற தமக்கையும், ஸ்ரீனிவாஸ பிள்ளை என்ற தம்பியும் இருந்தனர்.
சுப்பிரமணிய பிள்ளை, ஆராவமுத பிள்ளையின் தம்பி நாராயண பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். இதே நாராயண பிள்ளையிடம் மதுரை பொன்னுச்சாமி பிள்ளையும் சிறிது காலம் பயின்றார்.
தனிவாழ்க்கை
சுப்பிரமணிய பிள்ளை திருக்கருகாவூர் மாரிமுத்தம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை ஐந்து வயதில் மரணம் அடைந்தது.
சுப்பிரமணிய பிள்ளை பெரும் செல்வந்தர். பெண் தொடர்பில் சிறிது சிறிதாக சொத்துக்களை இழந்த போதும் இறுதிவரை வசதியுடன் வாழ்ந்தார்.
இசைப்பணி
சுப்பிரமணிய பிள்ளை எந்தக் கீர்த்தனையையும் அதி விளம்ப காலத்திலோ அதி துரித காலத்திலோ வாசிக்கும் போதும் இனிமை குறையாது வாசிப்பவர். நீண்ட நேரம் வாசிக்கும் போதும் உற்சாகத்துடன் வாசிக்கும் திறன் கொண்டிருந்தார். அரியக்குடியில் இவருக்கு அளிக்கப்பட்ட வைரப்பதக்கத்தை வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்தார்.
சுப்பிரமணிய பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சிகளில் தோடி ராக ஆலாபனையும் 'எந்துகு தயராதுர’ என்ற கீர்த்தனையும் தவறாமல் வாசிப்பார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை
- வேதாரண்யம் வேணுகோபால் பிள்ளை
- வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை
- பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை (2 ஆண்டுகள்)
- கும்பகோணம் சிங்காரம் பிள்ளை (8 ஆண்டுகள்)
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை
- விராலிமலை முத்தையா பிள்ளை
மறைவு
பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை 1958-ம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:37:06 IST