under review

திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை

From Tamil Wiki
சிவக்கொழுந்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவக்கொழுந்து (பெயர் பட்டியல்)
திருவிடைமருதூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவிடைமருதூர் (பெயர் பட்டியல்)
திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை (1887- டிசம்பர் 13, 1913) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

சிவக்கொழுந்து பிள்ளை மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்துக்கு அருகில் உள்ள செம்பொன்னார் கோவில் என்ற ஊரில் அப்பாசாமி பிள்ளை என்ற தவில்காரரின் ஒரே மகனாக 1887-ம் ஆண்டு பிறந்தார். இவரது தாயார் கனகம்மாள் கஞ்சனூர் குருஸ்வாமி பிள்ளை என்ற தவில்காரரின் சகோதரி.

பத்து வயதில் திருவாவடுதுறை மார்க்கண்ட பிள்ளை என்னும் நாதஸ்வரக் கலைஞரிடம் பயிற்சியைத் தொடங்கினார். உறங்கும் நேரம் போக மீதி நேரமெல்லாம் சாதகத்தில் செலவழித்தார் சிவக்கொழுந்து பிள்ளை.

அவ்வப்போது திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர், கோட்டுவாத்தியம் ஸகாராம் ராவ் ஆகியோரிடம் கீர்த்தனைகளைக் கற்றார்.

தனிவாழ்க்கை

சிவக்கொழுந்து பிள்ளையின் சகோதரியை தாய்மாமா கஞ்சனூர் குருஸ்வாமி பிள்ளை திருமணம் செய்துகொண்டார்.

சிவக்கொழுந்து பிள்ளை 1907-ம் ஆண்டு பந்தணைநல்லூர் 'கிடிகிட்டி’ வாத்தியக் கலைஞர் கோவிந்தப் பிள்ளையின் மகள் நாகம்மாளை மணந்தார். 1911-ம் ஆண்டு சிவக்கொழுந்து பிள்ளைக்கு நடராஜசுந்தரம் என்ற மகன் பிறந்தார்.

இசைப்பணி

திருவாவடுதுறை மார்க்கண்ட பிள்ளையிடம் கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருநாள் அவர் புறப்படத் தாமதாமாகவே, சிவக்கொழுந்து பிள்ளையை மடத்துக்கு வாசிக்க அனுப்பி வைத்தார் மார்க்கண்ட பிள்ளை. அப்போது சிவக்கொழுந்து பிள்ளை வாசித்த கல்யாணி ராக ஆலாபனையை ஆதீனத்தலைவர் அம்பலவாண தேசிகர் மிகவும் வியந்து பாராட்டினார். அன்றுமுதல் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கைங்கர்யத்துக்கு சிவக்கொழுந்து பிள்ளையை நாதஸ்வரம் வாசிக்கும்படி சன்னிதானம் கூறிவிட்டார்.

கொச்சி மன்னர் தங்க நாதஸ்வரமும், தில்லை தீக்ஷிதர்கள் நடராஜப் பெருமாள் சந்நிதியில் தங்கத்தோடாவும் சிவக்கொழுந்து பிள்ளைக்கு வழங்கி பாராட்டியிருக்கிறார்கள்.

மாணவர்கள்

நரசிங்கன்பேட்டை குழந்தைவேல் பிள்ளை என்பவர் திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளையின் முக்கியமான மாணவர்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை, மேலகரம் சுப்பிரமணிய தேசிகரின் குரு பூஜையில் வாசித்துவிட்டுத் திரும்பும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டிசம்பர் 13, 1913 அன்று தன் இருபத்தாறாவது வயதிலேயே காலரா நோயால் மரணமடைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 04:43:19 IST