வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 3, 1920 - ஏப்ரல் 21, 1984) ஒரு தவில் இசைக் கலைஞர்.
இளமை, கல்வி
ஷண்முகசுந்தரம் பிள்ளை திருவாரூருக்கு அருகே உள்ள சேகல் மடப்புரம் என்ற கிராமத்தில் ஏப்ரல் 3, 1920 அன்று பிறந்தார். இரண்டாவது வயதில் தந்தை ஆறுமுகம் பிள்ளை வசித்து வந்த யாழ்ப்பாணத்துக்கு சென்றார். தாய் இறந்துவிடவே தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஷண்முகசுந்தரம் பிள்ளைக்கு ஏழு வயதில் தந்தை ஆறுமுகம் பிள்ளையிடம் தவில் பயிற்சி துவங்கியது. பத்து வருடங்கள் அக்கலையைக் கற்று கச்சேரிகளில் வாசித்து வந்தார். ஷண்முகசுந்தரம் பிள்ளை பதினேழாவது வயதில் தமிழகம் வந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகே தண்டலைச்சேரி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த தனது பெரிய தந்தை ஸீதாராமப் பிள்ளையிடம் மேற்பயிற்சியைத் தொடங்கினார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையிடம் கற்கத் தொடங்கி தேர்ச்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
ஷண்முகசுந்தரம் பிள்ளை ஆண்டான்கோவிலை சேர்ந்த கர்ணாம்பாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர்.
இசைப்பணி
ஷண்முகசுந்தரம் பிள்ளை சிலகாலம் தமிழகத்தில் கீரனூர் சகோதரர்கள், ஆண்டாங்கோவில் கருப்பைய்யா பிள்ளை, குழிக்கரை காளிதாஸ் பிள்ளை ஆகியோருக்கு வாசித்து விட்டு, பின்னர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்றார். யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞரான நல்லூர் முருகையா பிள்ளையின் குழுவில் நிரந்தர தவில் கலைஞராக இருந்தார். 'யாழ்ப்பாணம் ஷண்முகசுந்தரம்’ என்றழைக்கப்பட்ட ஷண்முகசுந்தரம் பிள்ளை சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பி வந்து வலங்கைமானில் வசிக்க ஆரம்பித்த பின்னர் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை என்றே புகழ் பெற்றார்.
மாணவர்கள்
வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- குழிக்கரை ராமகிருஷ்ணன்
- திருக்கண்ணமங்கை பத்மநாபன்
- திருவொற்றியூர் பாலசுந்தரம்
உடன் வாசித்த கலைஞர்கள்
வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- கீரனூர் சகோதரர்கள்
- ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை
- காருகுறிச்சி அருணாசலம்
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- ஷேக் சின்ன மௌலா
- கும்பகோணம் ராமையா பிள்ளை
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
நாதஸ்வரக் கலைஞர்கள் தவிர,
- டி.ஆர். மஹாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்)
- எல். சுப்பிரமணியம் சகோதரர்கள் (வயலின்)
- மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
போன்ற பிற வாத்திய இசைக் கலைஞர்களுக்கும் ஷண்முகசுந்தரம் பிள்ளை தவில் வாசித்திருக்கிறார்.
விருதுகள்
- தமிழக அரசின் 'கலைமாணி’ - 1974
- சங்கீத நாடக அகாதமி விருது - 1985 (இவ்விருது பெற்ற முதல் தவில் கலைஞர்)
- தமிழக அரசின் அரசவைக் கலைஞர் - 1979
மறைவு
வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 21, 1984 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 09:06:51 IST