under review

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை

From Tamil Wiki
காளிதாஸ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காளிதாஸ் (பெயர் பட்டியல்)
குழிக்கரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குழிக்கரை (பெயர் பட்டியல்)

To read the article in English: Kulikarai Kalidas Pillai. ‎

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, புகைப்பட உதவி: மங்கல இசை மன்னர்கள்
குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, புகைப்பட உதவி: மங்கல இசை மன்னர்கள்

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை (1913 - மார்ச் 10, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாரூர் மாவட்டம் குழிக்கரை என்னும் கிராமத்தில் பெருமாள் பிள்ளை - கமலாம்பாள் அம்மாள் இணையருக்கு 1913-ம் ஆண்டில் மூத்த மகனாக காளிதாஸ் பிள்ளை பிறந்தார். பெருமாள் பிள்ளையின் தந்தை அய்யாஸ்வாமி பிள்ளையும் ஒரு நாதஸ்வரக்காரர், பெருமாள் பிள்ளையின் சகோதரி கௌரியம்மாள் திருமருகல் நடேச பிள்ளையின் மனைவி.

காளிதாஸ் பிள்ளை முதலில் தந்தை வழிப்பாட்டனார் அய்யாஸ்வாமி பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்று, பின்னர் தந்தை பெருமாள் பிள்ளையிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளையிடம் இரண்டு வருடங்கள் குருகுலவாசமாகக் கற்றார். பின்னர் தன் பெரிய தந்தை சேது நாதஸ்வரக்காரரின் மகன் குழிக்கரை பிச்சையப்பா பிள்ளையுடன் இணைந்து கச்சேரி செய்யத் தொடங்கினார்.

தனிவாழ்க்கை

குழிக்கரை அய்யாஸ்வாமி பிள்ளை வம்சாவளியினர், நன்றி - மங்கல இசை மன்னர்கள்
குழிக்கரை அய்யாஸ்வாமி பிள்ளை வம்சாவளியினர், நன்றி - மங்கல இசை மன்னர்கள்

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை என்ற தவில்காரரின் மகள் கமலாம்பாளை முதலில் மணந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்னர் ஆலங்குடி சுந்தரேச நட்டுவனாரின் மகள் செல்லமணி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஷண்முகசுந்தரம், ஸந்தானகிருஷ்ணன், கிருஷ்ணவேணி ஆகியோர் பிறந்தனர்.

இசைப்பணி

குழிக்கரை காளிதாஸ் பிள்ளையின் ராக ஆலாபனை புகழ் பெற்றது. ஒரு ராகத்தை எடுத்துகொண்டு பல மணி நேரங்கள் ராக ஆலாபனையில் ஈடுபடுவார். திருச்செந்தூர் ஆலயத்தில் ஒருமுறை நடபைரவி ராக ஆலாபனையைத் தொடங்கி வாசித்து முடிப்பதற்குள் விடிந்து விடவே, ஸ்வாமி புறப்பாட்டுக்காக பாதியில் நிறுத்த நேர்ந்தது. மறுநாள் நடபைரவி ராக ஆலாபனையை விட்ட இடத்தில் தொடர்ந்து விடியும் வரை வாசித்த சம்பவம் பலராலும் நினைவு கூறப்படுவது.

நடபைரவி, ஷண்முகப்ரியா, சாருகேசி, நாடகப்ரியா, பைரவி, தோடி, பந்துவராளி, பேகடா, தர்பார் இவற்றில் ஒரு ராகத்தை விரிவாக ஆலாபனை செய்வது காளிதாஸ் பிள்ளையின் வழக்கம். பல்லவி ஸ்வரம் வாசிப்பதிலும் தனிச்சிறப்பு கொண்டிருந்ததால் கடினமான பல்லவிகளை 'காளிதாஸ் பல்லவி’ என்றே சக கலைஞர்கள் குறிப்பிடுவார்கள். ஆலாபனைக்கும் பல்லவிக்கும் இடையே தானம், நிரவல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

காளிதாஸ் பிள்ளை யாழ்ப்பாணத்தில் பல கச்சேரிகள் செய்து சிறப்புப் பட்டங்கள் பெற்றவர். ராமநாதபுரம் மன்னர் பல பரிசுகளை வழங்கியுள்ளார். தமிழக அரசு காளிதாஸ் பிள்ளைக்குக் கேடயம் வழங்கி கௌரவித்தது.

மாணவர்கள்

குழிக்கரை காளிதாஸ் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • அம்பல் ராமச்சந்திரன்
  • குழிக்கரை தக்ஷிணாமூர்த்தி
  • திருச்செந்தூர் ராஜாமணி
  • தூத்துக்குடி கைலாஸக் கம்பர்
  • குழிக்கரை கண்ணப்பன்
  • ரத்தினவேல்
  • திருக்கண்ணமங்கை துரை
  • செம்பியன்மாதேவி குஞ்சிதபாதம்
  • காவாலக்குடி தக்ஷிணாமூர்த்தி
  • நாகூர் பக்கிரிஸ்வாமி
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

குழிக்கரை காளிதாஸ் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை நாதஸ்வரம் வாசிக்க முடியாமல் சிலகாலம் நோயுற்றிருந்தார். மார்ச் 10, 1973 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:43 IST