காருகுறிச்சி அருணாசலம்
காருகுறிச்சி அருணாசலம் (1921 - 8 ஏப்ரல், 1964) நாதஸ்வரக் கலைஞர். ராஜரத்தினம் பிள்ளையின் விருப்பத்திற்குரிய சீடர். இவர் ’கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் வாசித்த "சிங்காரவேலனே" பாடல் பிரபலமானது.
வாழ்க்கைக் குறிப்பு
திருநெல்வேலி சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள காருகுறிச்சியில் பலவேசம்பிள்ளை, செல்லம்மாள் இணையருக்கு அருணாசலம் 1921-ல் பிறந்தார். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் இவரின் நண்பர்கள். ராமலஷ்மியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஏழு வருடங்கள் குழந்தை இல்லாததால் குருமலை கந்தசாமிப்புலவரின் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவியின் மூலம் ஐந்து மகள்கள், ஒரு மகனும் பிறந்தனர். மூன்றாவது மனைவிக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். தன் வீட்டிற்கு ராஜரத்தின விலாஸ் என்று பெயர் சூட்டினார். எழுத்தாளர் கி. ராஜநாராயணன் இவரின் நெருங்கிய நண்பர்.
இசை வாழ்க்கை
தந்தை பலவேசத்தின் தூண்டுதலால் நாதஸ்வரம் கற்றார். காருகுறிச்சி கோயிலில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். பத்து வயதில் களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயின்றார். தொடர்ந்து சுத்துமல்லி சுப்பையா கம்பரிடம் நாதஸ்வரம் பயின்றார். காருகுறிச்சியில் உள்ள கு.எ. பண்ணையில் நாதஸ்வரம் வாசிக்க வந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையுடன் வாசிக்க வந்த "காக்காயி" நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்று கேட்டபோது மணிசர்மா என்பவர் மூலம் அருணாச்சலம் அறிமுகமானார். அன்றிலிருந்து ராஜரத்தினம் பிள்ளையின் சீடரானார். ராஜரத்தினம் பிள்ளையுடன் தங்கி நாதஸ்வர நுணுக்கங்களைக் கற்றார். தன்னுடைய குருவைப் போலவே இவரும் 72 மேளகர்த்தாவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேளகர்த்தா 36 தான் என்ற கொள்கையுடையவர்.
ராக ஆலாபனைகள், அரிய கீர்த்தனைகளை விரிவாக வாசித்தும் புகழ் பெற்றார். கனகாங்கி, ரத்னாங்கி, சந்திரஜோதி, வகுளாபரணம், நாமநாராயணி, போன்ற அரிய ராகங்களை வாசிப்பதில் வல்லவர். நாதபைரவி, கரஹரப்ரியா, பந்துவராளி, சண்முகப்ரியா, நாதா, கெளளை ஆகியவை அருணாசலம் விரும்பி வாசிக்கும் ராகங்கள். கு. அழகிரிசாமி, பெரியசாமித்தூரன், கல்கி, புல்லாங்குழல் மெளலி, கி. ராஜநாராயணன் ஆகியோர் இவரின் வாசிப்பை நேரில் கண்டு பாராட்டியவர்கள்.
உடன் வாசித்த தவில் கலைஞர்கள்
- திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை
- வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை
- வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
- பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
- கரந்தை சண்முகப் பிள்ளை
- நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை
சிறப்பு
காருகுறிச்சி அருணாசலத்தின் இசை மேதைமை குறித்து, "நாயனம் வாசிக்க சீவாளி உதட்டில் உட்கார்ந்தவுடன், காந்தம்போல் ஒட்டிக்கொள்ளும் கொஞ்ச சத்தமும் வெளியில் போகாமல், பிசிறு இல்லாமல் வாசிப்பார். அவர் நாதஸ்வரத்தை வைத்துக்கொள்கிற பாங்கே பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும். அவர் எந்தச் சுரத்தைத் தொட்டாலும் ஜீவன் பேசுகிற மாதிரிதான் அமைந்தது. வயலின் வீணைக்குரிய இசையை நாதஸ்வரத்தில் மீட்டுவார். அந்த வாசிப்பு ஷெனாய் வாசிக்கிற மாதிரி, பிஸ்மில்லா கான் வாசிப்பதுபோல் மெல்லினமாக வாசித்து மக்களை மயக்கி உட்கார வைத்துவிடுவார்" என்று கிளாரிநெட் ஏ.கே.சி நடராஜன் குறிப்பிடுகிறார். திநகரில் கோவிலில் நடந்த கச்சேரியின்போது அருணாசலம் வாசித்த ஹுசேனி ராக ஆலாபனையைக் கேட்க ராஜரத்தினம் சாலையிலேயே அமர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை சென்னை தமிழிசைச் சங்க இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர் வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு 12 மணிவரையிலும் நேரடியாக ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு
"இசை உருக்களை முறையான பாடாந்திர அமைப்பில் வாசிப்பது. விறுவிறுப்புடன் ஆலாபனையை அமைத்துக் கொள்வது; அடிக்கடி குழைவு சங்கதிகள் கொடுத்து வாசிப்பது; ஒவ்வொரு ராகத்திலும் ஒரு சுரத்தை மெல்லிய ஒலி வெளிப்பாட்டில் வாசிப்பது. இசை உருக்களில் சில பகுதிகளைக் காலப்ரமாணம் கூட்டி வழங்குவது; கற்பனை சுரப்பகுதியில் இடையிடையே காலப்ரமாணத்தைக் கூட்டி வாசிப்பது" ஆகியவை இவரின் இசையின் சிறப்பு என இசை ஆசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.
"அவருடைய வாத்தியத்தில், ராக ஆலாபனையில் சில இடங்களில் விசேஷ அழுத்தம் – அமித அழுத்தம் – கொடுத்து வாசிக்கக் கூடாது என்றும், அது உப்பைக் கூடக் கொஞ்சம் போட்டது போல் இருக்கும். நடிப்பில் "ஓவர் ஆக்ட்" என்று சொல்கிறோமே அது போல. இவருடைய வாத்தியத்தில் குழலிலிருந்து வருகிற இசை பீச்சிக் கொண்டு வருகிற மாதிரி வருகிறது. அது சாதாரண வேகமாக இயற்கை நீரோட்டம் மாதரி இருந்தால் போதும் என்று கூறியிருக்கிறேன். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் பலமாகச் சிரிப்பதின் மூலம் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார். "நீங்கள் எழுத்தாளர்கள்; என்னெல்லாமோ சொல்லுகிறீர்கள்" என்று சொல்லிவிடுவார். ஆனாலும் அதைப் பற்றி சிந்தனை செய்வார்." என்றும் "அவருடைய கச்சேரியின் கடேசிப் பகுதிகளை நான் மிகவும் விரும்புவேன். 'துக்கடாக்களை வாசிக்கு முன்னதாக ராகங்களை ஷெனாய் பாணியில் வாசிப்பார். மனங்கள் அப்படியே அந்த இசை மழையில் நனைந்து குதூகலிக்கும். துள்ளும். ஊஞ்சலாடும். கனவு காணும். பூர்வஜென்ம ஞாபகங்கள் நினைவுக்கு வருவது போலிருக்கும்." என்றும் அவருடன் நேரில் பழகிய எழுத்தாளர் கி.ரா கூறுகிறார்.
திரைப்படம்
அருணாசலம் தனது நாதஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்தார். சில திரைப்படங்களுக்கு அவற்றை வழங்கியுள்ளார். ’கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள "சிங்காரவேலனே" பாடல் பிரபலமானது.
மறைவு
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், ஏப்ரல் 8, 1964-ல் தன் 43-ஆவது வயதில் காலமானார். கோவில்பட்டி கடலையூர் சாலையில் அரசு அளித்த நிலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவரது நினைவாக சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
உசாத்துணை
- காருகுறிச்சி அருணாசலத்துடனான நினைவுகள் பற்றி: கி.ரா
- காருகுறிச்சி அருணாசலம்: தென்றல்: tamilonline
- காருகுறிச்சி அருணாசலம்: சொல்வனம்
- நாகஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு: thehindu tamil
- காருக்குறிச்சி அருணாச்சலம்: instanews.city
- `தாத்தா இறந்து 50 வருடம் கழித்தும் இவ்ளோ செல்வாக்கு': vikatan
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Feb-2023, 07:06:08 IST