under review

சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை

From Tamil Wiki

சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை (ஆகஸ்ட் 17, 1906 - நவம்பர் 25, 1993) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

நாகப்பட்டிணம் மாவட்டம் நல்லடை என்ற ஊரில் ஸ்வாமிநாத பிள்ளை - யோகாம்பாள் இணையருக்கு ஆகஸ்ட் 17, 1906 அன்று ராதாகிருஷ்ண பிள்ளை பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தார்.

ராதாகிருஷ்ண பிள்ளை தந்தை ஸ்வாமிநாத பிள்ளையிடம் நாதஸ்வர இசை பயின்றார். பின்னர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் துணை நாதஸ்வரக்காரராகவும் சீடராகவும் இருந்து பல்வேறு ரக்திகள், கடினமான மல்லாரிகள் போன்றவற்றைக் கற்றார். வழிவூர் சுந்தரம் பிள்ளையிடம் பல கீர்த்தனைகளைக் கற்றார்.

தனிவாழ்க்கை

ராதாகிருஷ்ண பிள்ளை ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளையின் தங்கை பாப்பாம்மாளை மணந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். இப்பெண் பின்னர் கருப்பையா பிள்ளையின் தம்பி ஆண்டாங்கோவில் செல்வரத்தினம் பிள்ளையின் மனைவியானார்.

பாப்பம்மாள் காலமான பிறகு ராதாகிருஷ்ண பிள்ளை தன் மூத்த சகோதரியின் மூத்த மகளை மணந்து இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.

இசைப்பணி

ராதாகிருஷ்ண பிள்ளையின் வாசிப்பைக் கேட்ட கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை தன்னுடன் சேர்ந்து வாசிக்க அவரை அழைத்துச் சென்றார்.

பிழைகளற்ற காலப்பிரமாணம் ராதாகிருஷ்ண பிள்ளையின் சிறப்பாக இருந்தது. சின்னத்தம்பி பிள்ளையின் மாமனார் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை ஒரு கச்சேரியில் தன் மாப்பிள்ளையோடு இணைந்து வாசிக்கும் சிறுவன் ராதாகிருஷ்ண பிள்ளையின் ராக ஞானம், அழுத்தமான காலப்பிரமாணம் ஆகியவற்றைக் கண்டு தன்னுடன் ராதாகிருஷ்ண பிள்ளையை அனுப்பி வைக்குமாறு கோரி அழைத்துச் சென்றார். அன்றுமுதல் நல்லடை ராதாகிருஷ்ண பிள்ளை சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளையாக ஆனார்.

தவில்காரர்களைத் திணற வைக்கும் 'பல்லவி மேதை’ எனப் போற்றப்படுபவரான சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையிடம் தன்னை இரண்டாம் நாயனக்காரராக மட்டும் அல்லாது சீடனாகவே ஏற்றுக் கொள்ளுமாறு ராதாகிருஷ்ண பிள்ளை கோரினார். ராதாகிருஷ்ண பிள்ளையை தனக்கு இணை நாதஸ்வரக்காரராகவும் சீடராகவும் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோவில், கோவிந்தராஜ கோவில் போன்றவற்றில் ஆஸ்தான விசேஷ மேளமாக வாசிக்க வேண்டிய மரபான இசை, பத்ததிகள் போன்றவற்றை வைத்தியநாத பிள்ளை கற்பித்தார். வைத்தியநாத பிள்ளை தன் இறுதிக்காலத்தில் , ராதாகிருஷ்ண பிள்ளையே தன் இசை வாரிசென அறிவித்தார்.

தன் குருவைத் தந்தையாகவே போற்றிய ராதாகிருஷ்ண பிள்ளை இறுதிவரை சிதம்பரத்தில் நடராஜர் , கோவிந்தராஜர் மற்றும் இளமையாக்கினார் கோவில்களில் ஆஸ்தான விசேஷ நாதஸ்வர சேவையை மேற்கொண்டார். இதனால் அவர் வெளியூர் கச்சேரிகளை ஏற்றுக் கொண்டதில்லை.

ராதாகிருஷ்ண பிள்ளையின் ரக்திகளும், மல்லாரிகளும் அற்புதமானவை. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளையிடம் மாணவராகவோ துணை நாதஸ்வரக்காரராகவோ இருந்து கற்றவர்கள்:

  • ஆச்சாபுரம் சின்னத்தம்பிப் பிள்ளை
  • சிவபுரி பத்மநாப பிள்ளை
  • திருநாகேஸ்வரம் ராஜகோபால பிள்ளை
  • தென்னலக்குடி சுப்பிரமணியம்
  • விளநகர் ஸ்ரீநிவாஸ பிள்ளை
  • ஆண்டாங்கோவில் செல்வரத்தினம் பிள்ளை

மறைவு

சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை நவம்பர் 25, 1993 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page