நற்றிணை
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915).
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
|
|
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் அமைப்பு
நற்றிணை கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
பாடல்அடிகள் | பாடல்கள் | திணை | பாடல்கள் | |
---|---|---|---|---|
7 | 1 | குறிஞ்சித் திணை | 132 | |
8 | 1 | முல்லைத் திணை | 30 | |
9 | 106 | மருதத் திணை | 32 | |
10 | 96 | நெய்தல் திணை | 102 | |
11 | 110 | பாலைத் திணை | 104 | |
12 | 77 | |||
13 | 8 |
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
பாடப்பட்ட அரசர்கள்
குறுந்தொகைப் பாக்களில் குறிக்கப்பட்டாற் போலவே சேர சோழ பாண்டியர் தமக் குரிய பொதுப் பெயர்களால் நற்றிணைப் பாக்களில் குறிக்கப் பட்டுள்ளனர்.
அரசர்கள் | ||
---|---|---|
|
|
|
ஊர்களின் பெயர்கள்
- தொண்டி - சோனுக்குரிய துறைமுக நகரம் {8, 195),
- போர் - பழையன் என்ற சிற்றரசனுக்கு உரியது (10),
- கொற்கை - பாண்டியர் துறைமுக நகரம் (23)
- மாந்தை - சேர நாட்டுக் கடற்கரை ஊர் (35, 395)
- காண்ட வாயில் - கடற்கரை ஊர்
- கூடல் - பாண்டியர் தலைநகரம் (39, 298)
- கிடங்கில் (65)
- சாய்க்காடு(73)
- பொறையாறு (131)
- அம்பர் (141)
- ஆர்க்காடு (190)
- மருங்கூர்ப்பட்டினம் - பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் (358)
- புனல்வாயில் (260)
- இருப்பையூர் (260)
- பாரம் (265)
- ஆறேறு (265)
- குன்றூர் (280}
- கழாஅர் (281)
- முள்ளூர் (291)
- ஊனூர் (300)
- வாணன் சிறுகுடி (340)
- அருமன் சிறுகுடி (357)
- குடந்தைவாயில் (379)
- வெண்ணி (390).
- நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.
- நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
- யாமக் காவலர் இரவில் ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்.குறிஞ்சிநில ஊர்களில் ஊர்க்காவல் இருந்தது. காவலர் குறிஞ்சி என்னும் பண்ணைப் பாடிக்கொண்டு இரவு முழுமையும் தூங்காமல் ஊரைக் காவல் காத்தனர் (255), நெய்தல் நில ஊர்களிலும் காவலர் யாமந்தோறும் மணியடித்து ஓசை யெழுப்பி, “தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்று கூறிச்சென்றனர் (132).
- பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
- மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
- மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
- நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
- ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
- கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)
- பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
- நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் (160)
- காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
- திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்தது (2)
உவமைகள்
உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது
சிறப்புகள்
பாடல் நடை
கடவுள் வாழ்த்து
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.
குறிஞ்சி
பாடியவர் - பெருங்குன்றூர்கிழார்
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.
முல்லை
பாடியவர் - இடைக்காடனார்
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், . . . . [05]
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க - பாக! - நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் . . . . [10]
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.
மருதம்
பாடியவர் - மாங்குடி கிழார்.
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, . . .
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, . . . .
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.