under review

வீரமாமுனிவர் கலம்பகம்

From Tamil Wiki
வீரமாமுனிவர் கலம்பகம்

வீரமாமுனிவர் கலம்பகம் (முதற்பதிப்பு: 1977), வீராமாமுனிவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர், துரை. சுந்தரமூர்த்தி.

வெளியீடு

வீரமாமுனிவர் கலம்பகம் நூலை, திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகம், 1977-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர் எழில்வண்ணன் என்னும் துரை. சுந்தரமூர்த்தி. வீரமாமுனிவர் கலம்பகம் நூல், ச.வே. சுப்ரமணியன் தொகுத்து, 2015-ல், மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-3 நூலில், பிற கலம்பக நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது.

ஆசிரியர் குறிப்பு

துரை. சுந்தரமூர்த்தி, 'சுவைமணிக் கவிஞர்' என்று போற்றப்பட்டவர். எழில்வண்ணன் என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதினார். சிறுகதை ஆசிரியர். பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில், விலங்கியல் துறையில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 'பண்ணை முருகன் பாமாலை', 'முத்துநகை' (காப்பியம்), 'அன்னை அந்தாதி', 'மேடையில் கலைஞர்', 'மலர்ப் பந்தல்', 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வளம்' போன்றவை இவரது பிற படைப்புகள்.

நூல் நோக்கம்

வீரமாமுனிவர் குறித்த கலம்பகம் நூல் இயற்றியதற்கான காரணம் குறித்து நூலின் என்னுரையில் துரை. சுந்தரமூர்த்தி பின்வருமாறு குறிப்பிட்டார். "வீரமாமுனிவர் பலவகைகளில் முதன்மை' பெறுகிறார். முதன் முதல் கதை எழுதியவர்; முதன்முதலில் நகைச்சுவை உரைநடைக்கு வித்திட்டவர்; புனைபெயர் வைக்கும் முறைக்கு வழிகாட்டியாக அமைந்தவர்; நெடில், குறில் சீர்திருத்தத்தை முதன்முதலில் செய்தவர்; அகராதி முதன்முதலில் கண்டவர்; எல்லாவற்றிக்கும் மேலாக வேற்று நாட்டுக்காரராயிருந்தும் தமிழ் மொழியிலே காப்பியம் யாத்த திறம் வாய்க்கப் பெற்றவர். இப்படிப் பல முதன்மைகளைப் பெற்றமையாலும், வேற்று நாட்டாராயினும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் என்பதாலுமே அவரைப் பற்றி ஒரு கலம்பகம் பாடிட விழைந்தேன்."

நூல் அமைப்பு

கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த வீரமாமுனிவர் கலம்பகம், திருக்காவலூர் கலம்பகம் தேம்பாவணி போன்ற நூல்களைப் பாடி, தமிழில் சதுரகராதியைத் தொகுத்த வீரமாமுனிவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல். இந்நூலில் பின் வரும் கலம்பக உறுப்புகள் இடம்பெற்றன.

விருத்தம், வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறைகளால் அந்தாதித் தொடையில் இந்நூல் பாடப்பட்டுள்ளது. வீரமாமுனிவர் கலம்பகத்தில் 100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

வீரமாமுனிவர் கலம்பகம் நூல் புய வகுப்பு முதலான 26 கலம்பக உறுப்புக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. வீரமாமுனிவரின் பிறப்பு, தமிழின் மீது அவர் கொண்ட பற்று, வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட பனுவல்கள், உரை நூல்கள், இலக்கண, இலக்கிய நூல்கள், தமிழ் எழுத்திலக்கண அமைப்பில் அவர் செய்த சீர்த்திருத்தங்கள், அவரது சமயத்திறன் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டதாக வீரமாமுனிவர் கலம்பக நூல் அமைந்துள்ளது.

வீரமாமுனிவர் பாட்டுடைத் தலைவராயினும், அவர் துறவியென்பதால் அகத்துறைப் பாடல்களில் அவரை நேரடியாக விளிக்காமல், தலைவி ஒருத்தி, தேம்பாவணி கற்றறிந்த தலைவனை எண்ணித் தூது விடுவதாக, இரங்குவதாக பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாடல்

புயவகுப்பு

புயந்தரும் கருத்தொரு புதையலே
புதுவறம் அளித்திடும் படையலே
செயந்தரும் எனுமிவன் தமிழணி
திருவரும் எனுமிவன் திருப்பணி
வியந்திடும் மொழிநடை புரிந்ததும்
விளக்கிடும் அருள்நெறி உரைத்ததும்
நயந் தரும் தமிழிவன் தமிழினி
நறுமணஞ் செறிந்துறை புயத்தனே

இடும்பை போம் வழி

எழுந்தன புள்ளும் பாடி
இயம்பின முரசம் வண்டு
அழுந்தின தொல்லை யெல்லாம்
அரும்பின மலரின் கூட்டம்
செழுந்திகழ் தமிழி னாக்கம்
திகழ்ந்திடும் முனிவன்றாளைத்
தொழுதிட இடும்பை போமே
தொடங்கிடும் புதிய பாதை

அம்மானை

தேம்பும் மாந்தருக்குத் தெம்புதந்த முனிவனார்
தேம்பா வணி தந்த தேன்மலரோன் அம்மானை.
தேம்பா வணியென்றால் தேன்வருமே யாமாயிற்
சோம்பா தும்பிகளும் சூழ்ந்திடுமோ அம்மானை
சூழ்ந்திடுவோர் தும்பிகளாய்ச் சுவைப்பவரே அம்மானை

ஊசல்

'கல்லூரி' எனுஞ்சொல்லைக் கண்டோன் நீயே
கற்கண்டுப் புதுப்பேர்கள் புனைந்தோன் நீயே
நல்லூரா மேலக்கு ரிச்சி யன்னை
நாயகிக்குக் கலம்பகமி சைத்தோன் நீயே
எல்லாரு முன்னன்பர் என்றே யாக்கி
'இஸ்மாத்தி சந்நியாசி' யானோன் நீயே
கல்லாரும் போற்றிடவே நேர்ந்த நல்லோய்
கனிந்திந்த வூசலமர்ந் தாட வேண்டும்

தவம்

கண்டாய்ந்த இலக்கணத்தில் புதுமை காட்டி
கற்பனைக்கும் அணிதேம்பா வடிவ மூட்டி
பண்டாய்ந்த வழிக்கெல்லாம் மாற்றங் காட்டி
பணியெல்லாம் தமிழுக்கே வடித்துக் கூட்டி
செண்டாய்ந்த சுரும்பாகித் தமிழக் காட்டில்
சித்தமுறக் களித்தோங்கி நட்புப் பாடி
விண்டோய்ந்த புகழுக்கே உரிமை யேற்று
வீரமுனி யாகவினி நின்ற நல்லோய்

மதிப்பீடு

வீரமாமுனிவர் கலம்பகம், வீரமாமுனிவர் மீது எளிய தமிழில் இயற்றப்பட்ட கலம்பக நூல். உவமை, உருவகம், தொடை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நயங்களுடன் இயற்றப்பட்டது. வீரமாமுனிவர் மீது பாடப்பட்ட முதல் கலம்பக நூலாகவும், கிறித்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:52:08 IST