under review

சிறுவாணி வாசகர் மையம்

From Tamil Wiki
சிறுவாணி வாசகர் மையம்

சிறுவாணி வாசகர் மையம் கோயம்புத்தூரிலிருந்து செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஜனவரி 1, 2017-ல் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. மாதம் ஒரு நூல் என்பதை நோக்கமாகக் கொண்டு, சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களுக்கு கலை, இலக்கிய, வரலாற்று நூல்களை அறிமுகம் செய்கிறது.

தோற்றம்

எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் வ. ஸ்ரீநிவாசன் ஆலோசனையின்படி, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் இலக்கிய அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, கோவையில், ஜனவரி 1, 2017-ல், சிறுவாணி வாசகர் மையம் தோற்றுவிக்கப்பட்டது.

நோக்கம்

சிறுவாணி வாசகர் மையம் கீழ்க்காணும் கொள்கைகளைத் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

  • எழுத்துலக மேதைகளின் படைப்புகளை இளைய தலைமுறைக்குக் குறைந்த வருடக் கட்டணத்தில் கிடைக்கச் செய்தல்.
  • மறுபதிப்பு இல்லாத நூல்களை மீண்டும் பதிப்பித்தல்
  • வணிக நோக்கில்லாமல் சிறந்த படைப்புகளை வாசிப்பவரின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்தல்.
  • வாசிப்பின் ருசியைப் பரவலாக்குதல்.
  • தேச விரோதமான எழுத்துகளை வெளியிடாதிருத்தல்
  • சாதி, மத, இனம் முதலிய வேற்றுமைகளை உருவாக்கும் படைப்புகளை வெளியிடாதிருத்தல்
  • பெண்களை இழிவுபடுத்தும் விதமான எழுத்துகளைத் தவிர்த்தல்
சிறுவாணி வாசக மைய அமைப்பாளர்கள்
ஒருங்கிணைப்பாளர் - ஜி.ஆர். பிரகாஷ்

அமைப்பாளர்கள்

எழுத்தாளரும், காந்தியவாதி T.D.திருமலை அவர்களின் மகளுமான திருமதி சுபாஷிணி, சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவராக உள்ளார். நாஞ்சில்நாடன் இம்மையத்தை வழிநடத்துகிறார். கோவையில் RAAC அமைப்பின் செயலர் திரு. ஆர். ரவீந்திரன், சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு.வ. ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு ஆலோசகர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஓவியர் ஜீவா, சிறுவாணி வாசகர் மைய நூல்களுக்கான அட்டைப் படங்களை வடிவமைக்கிறார்.

சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பேரர் சிவசுப்ரமணியம், மூத்த எழுத்தாளர் சி.என். மாதவன் மற்றும் அவரது மகள் சுஜாதா சஞ்சீவி, எழுத்தாளர் வே. முத்துக்குமார், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறுவாணி மையத்தின் ஆலோசகர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஜி.ஆர். பிரகாஷ் சிறுவாணி வாசகர் மையத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

உறுப்பினர்கள்

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுமாக 17 வயது முதல் 94 வயதுள்ள மூத்த வாசகர்கள் வரை, வாசக நண்பர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் சிறுவாணி மையத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகள்

நூல் வெளியீடு

’மாதம் ஒரு நூல்’ என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு சிறுவாணி வாசகர் மையம் செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் 23, 2017 உலகப் புத்தக தினத்தன்று, சிறுவாணி வாசகர் மைய வெளியீட்டின் முதல் புத்தகமான ‘நவம்’ வெளியானது. நாஞ்சில்நாடன் இதன் ஆசிரியர். தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கன், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் தொடங்கி, இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை, 80 நூல்களை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டது.

பல்லாண்டுகளாக பதிப்பிலில்லாத க. சுப்ரமணியன் எழுதிய ‘வேரும் விழுதும்’, பரணீதரன் எழுதிய ‘கஸ்தூரி திலகம்’, க.ரத்னம் எழுதிய ‘கல்லும் மண்ணும்’, டி.கே.ஜெயராமன் எழுதிய ‘குஜராத்திச் சிறுகதைகள்’ போன்ற பல அரிய நூல்களைச் சிறுவாணி மையம் வெளியிட்டது. ஜனவரி 2024 -ல் இச்சங்கம் ஏழுஆண்டுகளை நிறைவு செய்து எட்டாம் ஆண்டைத் துவங்குகிறது.

சிறுவாணி வாசக மையம் வெளியிடும் நூல்கள் கடைகளில் விறபனையில் இல்லை. கோவை புத்தகக் கண்காட்சியின் போது மட்டும் பார்வைக்கும், விற்பனைக்கும் கிடைக்கின்றன. இந்நூல்கள் பவித்ரா பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன.

சிறுவாணி வாசகர் மைய நூல்கள்
நூல் தேர்வு

சிறுவாணி வாசகர் மையத்தின் ஐவர் குழு, நூல்களைப் பரிசீலனை செய்து பரிந்துரைப்பதன் பேரில், நாஞ்சில்நாடன் வெளியிட வேண்டிய நூல்களை இறுதிக்கட்டமாகச் தேர்வு செய்கிறார். ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதிக்குள், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான அடுத்த ஆண்டுக்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

விருதுகள்

சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகள் பல விருதுகளை வென்றுள்ளன.

நூல் எழுத்தாளர் பரிசு/விருது
தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை வே.முத்துக்குமார் நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்பட்ட தினமலர் ராமசுப்பையர் விருது (2019)
கம்பம் பாரதி இலக்கிய பேரவை சார்பில் வழங்கப்பட்ட சிறந்த நூலுக்கான முதல் பரிசு (2019)
சிகரம் காலாண்டிதழ் நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த நூலுக்கான முதல் பரிசு (2021)
பாதை காட்டும் பாரதம் ஜி.ஏ.பிரபா திருப்பூர் சக்தி விருது
கிணற்றுக்குள் காவிரி - ஜெ. பாஸ்கரன் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான முதற் பரிசு (உரத்த சிந்தனை - என் ஆர் கே விருது 2020)
சிறந்த நூலுக்கான ‘கவிதை உறவு’ இலக்கியப் பரிசு (2020)
திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2021)
ஒரு பீடியுண்டோ சகாவே ஓவியர் ஜீவா சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான வாசகசாலை விருது (2022)
நாஞ்சில் நாடன் விருது

நாஞ்சில்நாடன் விருது

சிறுவாணி வாசகர் மையம் கலை, இலக்கியம் சமூகம் போன்ற துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு, 2018 முதல், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெயரில் நாஞ்சில்நாடன் விருது வழங்கி வருகிறது. இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/-, கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது. ஓவியர் ஜீவா (2018), முனைவர் ப. சரவணன் (2019), பத்திரிகையாளர், எழுத்தாளர் கா.சு. வேலாயுதன் (2020), மணல்வீடு ஹரிகிருஷ்ணன் (2021), சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' செல்வராஜ் (2022), மொழிபெயர்ப்பாளர் அருட்செல்வப் பேரரசன் (2023) ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

பிற பணிகள்

சிறுவாணி வாசகர் மையம், நூல் வெளியீட்டோடு தொடர்புடைய பிற பணிகள் சிலவற்றையும் முன்னெடுத்தது.

  • எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்தி, போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டது.
  • நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரைகளின் மாணவர் பதிப்பான ‘அஃகம் சுருக்கேல்’ நூலை, 10000 பிரதிகளுக்கு மேல் அன்பளிப்பாக அளித்தது.
  • சிறுவாணி மைய உறுப்பினர்கள் அனைவருக்கும், ‘மாதம் ஒரு நூல்’ தவிர்த்து, கடந்த ஏழாண்டுகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தது.
  • பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவையொட்டி ஓவியர் ஜீவா வரைந்த பாரதி ஓவியம் சுமார் 13000 பேருக்கு மேல் அன்பளிப்பாகக் அளித்தது.

நூல்கள்

சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகள் (ஜனவரி 2024 வரை)

படைப்பு நூல்கள் எழுத்தாளர்
நாவல்கள் விளிம்பில் லா.ச.ராமாமிருதம்
மண்ணாசை சங்கரராம்
கஸ்தூரி திலகம் பரணீதரன்
ஆட்கொல்லி க.நா.சுப்ரமணியம்
கல்லும் மண்ணும் க.ரத்னம்
வேர்ப்பற்று இந்திரா பார்த்தசாரதி
வேரும் விழுதும் க. சுப்ரமணியன்
போக்கிடம் விட்டல்ராவ்
சில நெடுங்கதைகள் யுவன் சந்திரசேகர்
புனலும் மணலும் ஆ. மாதவன்
கல் மண்டபம் வழக்கறிஞர் சுமதி
சோழர்குலச் சூரியன் சி.என். மாதவன்
ஆத்துக்குப் போகணும் காவேரி
சிறுகதைத் தொகுப்புகள் பிராது கண்மணி குணசேகரன்
உருமால்கட்டு சு. வேணுகோபால்
தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை வே. முத்துக்குமார்
தாகூர் கதைகள் (மொழிபெயர்ப்பு) பாரதியார்
திசையறியாப்புள் ரமேஷ் கல்யாண்
முழு மனிதன் உஷாதீபன்
அர்த்தங்கள் ஆயிரம் ஆர்.சூடாமணி
கிணற்றுக்குள் காவிரி ஜெ.பாஸ்கரன்
காற்றின் திசை சத்தியப்பிரியன்
நிலைநிறுத்தல் கி.ரா.
சிறுவாணி சிறுகதைகள்-2020 பல்வேறு எழுத்தாளர்கள்
வடம்போக்கித்தெரு வீடு ரிஷபன்
இதழ்கள் லா.ச.ராமாமிருதம்
மங்கையர்க்கரசியின் காதல் வ.வே.சு.ஐயர்
பூலோக ரகஸ்யம் முதலிய கதைகள் அரவிந்த் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்)
உயிரளபெடை எஸ். சங்கரநாராயணன்
மயக்கம் தெளிந்தது கே.பி. நீலமணி
கடவுளுக்கென ஒரு மூலை(மொழிபெயர்ப்பு) அனுராதா கிருஷ்ணசாமி
உடுக்கை விரல் என். ஸ்ரீராம்
ஒரு பறவையின் நினைவு எஸ். வைதீஸ்வரன்
குஜராத்திச் சிறுகதைகள் டி.கே.ஜெயராமன்
அமர வாழ்வு கல்கி
அம்மா அம்மா பூர்ணம் விஸ்வநாதன்
இன்னொரு கனவு சுப்ரமணிய ராஜு
வென்றிலன் என்றபோதும் தொ.மு.சி. ரகுநாதன்
கட்டுரைக் கதைகள் பாதை காட்டும் பாரதம் ஜி.ஏ.பிரபா
ஒன்பது குன்று பாவண்ணன்
லீயர் அரசன் தமிழில் ஜஸ்டிஸ். மகராஜன் (நாடகம்)
கால்போன போக்கிலே நந்து சுந்து (பிரயாண நூல்)
கட்டுரைத் தொகுப்புகள் நவம் நாஞ்சில் நாடன்
பூங்கொத்து அசோகமித்திரன்
தேவார மணி தமிழ்க் கடல் ராய.சொ.
தமிழ்க் களஞ்சியம் ரசிகமணி டி.கே.சி.
எதைப் பற்றியும் (அ) இதுமாதிரியும் தெரிகிறது வ.ஸ்ரீநிவாசன்
கதாரசனை கீரனூர் ஜாகிர் ராஜா
நினைவில் நின்ற கவிதைகள் எம்.கோபாலகிருஷ்ணன்
காணக் கிடைத்தவை வ.ஸ்ரீநிவாசன்
நாமமும் நாஞ்சில் என்பேன் நாஞ்சில் நாடன்
ரா.கி.ர. டைம்ஸ் ரா.கி.ரங்கராஜன்
நவில்தொறும் எம்.ஏ.சுசீலா
ஆனந்த வெள்ளம் கி.வா.ஜகந்நாதன், முனைவர் ப. சரவணன் (பதிப்பாசிரியர்)
பல நேரங்களில் பல மனிதர்கள் பாரதி மணி
எண்ணும் எழுத்தும் மது ஸ்ரீதரன்
இலக்கியப் படகு திருலோக சீதாராம்
என் இலக்கிய நண்பர்கள் எம்.வி. வெங்கட்ராம்
ஊற்றுக்கண் இயகோகா சுப்பிரமணியம்
பிஞ்ஞகன் நாஞ்சில் நாடன்
ஒரு பீடியுண்டோ சகாவே ஓவியர் ஜீவா
நிலை பெற்ற நினைவுகள் கு. அழகிரிசாமி, வேலாயுத முத்துக்குமார் (தொகுப்பாசிரியர்)
மழையும் புயலும் வ.ரா.
மனிதன் எப்படி வாழவேண்டும்? வெ.சாமிநாத சர்மா
வாழ்க்கை வரலாறு தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா தி. சுபாஷிணி
நண்பர்கள் நினைவில் பாரதி இளசை மணியன்
வினோபா டி.டி. திருமலை
கருணாகரத் தொண்டைமான் குடவாயில் பாலசுப்பிரமணியன்
மகாதேவ தேசாய் - காந்தியின் நிழல் தி.விப்ரநாராயணன்
பிற வெளியீடுகள் அஃகம் சுருக்கேல் நாஞ்சில் நாடன் (மாணவர் பதிப்பு)
நாம் ஆர்க்கும் குடியல்லோம் தமிழ்க்கடல் ராய.சொ.
தம்பியர் இருவர் அ.ச. ஞானசம்பந்தன்
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான்
இந்தியக் கலைச் செல்வம் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான்
மனமும் அதன் விளக்கமும் பெ. தூரன்
கவிக்குயில் பாரதியார் சுத்தானந்த பாரதியார்
கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம் லா.ச.ராமாமிருதம்
அச்சமேன் மானுடவா? நாஞ்சில் நாடன் (கவிதைகள்)
ஸ்ரீமத் பகவத் கீதை; தமிழ்ச் செய்யுள் வடிவில் ரா. பத்மநாபன்
ஆன்மிகமும் அரசியலும் ம.பொ. சிவஞானம்
காஞ்சிரங்காய் உணவில்லை நாஞ்சில் நாடன் (கவிதைகள்)
கழுகு லா.ச.ராமாமிருதம்

மதிப்பீடு

சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகள் பல்வேறு நிகழ்வுகளில் பேசுபொருளாகி உள்ளன. பலரால் பாராட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள இலக்கிய அமைப்புகளில், நோக்கம் பிறழாது சீரிய முறையில் செயல்பட்டு வரும் அமைப்பாக, சிறுவாணி இலக்கிய மையம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page