under review

என்.ஸ்ரீராம்

From Tamil Wiki

To read the article in English: N. Sriram. ‎

N.Shreeram 292x269.jpg

என்.ஶ்ரீராம் (ஆகஸ்ட் 7,1972) பிறந்த இவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.தற்போது சென்னையில் ஊடகவியலாளராக பணியில் உள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நல்லிமடம் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் மா.நாட்டராயசாமி, தாய் ஜானகி, விவசாயக் குடும்பம். இளங்கலை கூட்டுறவியல் படித்துள்ளார்.

திருமணமான ஆண்டு 2005. சென்னை அண்ணாநகரில் மனைவி ராதா மற்றும் மகன் அபிஷேக் உடன் வசித்துவருகின்றார்.

இலக்கிய வாழ்க்கை

1999-ல் முதல் சிறுகதை நெட்டுக்கட்டு வீடு கணையாழியில் பிரசுரமானது.கடந்த இருபது வருடங்களாக நகரத்தில் வேலைச்சூழலுக்காக வாழ்ந்து வந்தாலும் இயற்கையோடு இருந்த பரிச்சயத்தையும், சிறுவயதில் வசீகரித்த தொன்மக் கதைகளையும், 'இளம்பிராயத்தில் ஊரில் வசித்த ஒவ்வொரு சனங்களின் வாழ்வையும்தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என என்.ஸ்ரீராம் தன் இலக்கிய பயணம் பற்றி குறிப்பிடுகிறார்.

வாழ்வில் நாம் எதிர்கொண்ட மனிதர்களை, அனுபவங்களை அதிபுனைவு மேலிடாமல் நிலக்காட்சிகளின் மூலம் வாசகனுக்கு நெருக்கமாக நின்று சொல்லிச் செல்பவை என்.ஸ்ரீராமின் கதைகள்.

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் முன்னோடிகளாக வண்ணதாசன்,நாஞ்சில் நாடன்,எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

வெளிவாங்கும் காலம் இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு கனவு பட்டறை பதிப்பகம் மூலம் வெளியானது.

இலக்கிய இடம்

தமிழகத்தின் மேற்குப் பகுதியின் இலக்கியப் பங்களிப்பில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறக்கூடிய படைப்புகள் இவை. வாசகரிடம் பெருஞ்சலனத்தை ஏற்படுத்திவிட்டுச் சிற்றோடையின் நீரோட்டமாகச் சலனமின்றி அந்தப் படைப்பு நெறி செல்கிறது என எழுத்தாளர் பால்நிலவன் இவரது படைப்புகளை பற்றிக் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீராமின் பெரும்பாலான கதைகள் எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்தாலும், அவை வாழ்க்கை குறித்து எழுப்புகிற கேள்விகள் ஆழமானவை. புனைவை எழுதுகிறபோது ஸ்ரீராம் தான் பிறந்து வளர்ந்த தாராபுரம் மண்ணின் இருப்பையும், தான் சார்ந்த இனக்குழு வாழ்க்கையையும், தொன்மத்தையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் வாய்மொழி வரலாற்றையும் கவனப்படுத்தியுள்ளார் என எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

 • "சீமை அம்பத்தாறு தேசம்" என்னும் குறுநாவல் கணையாழி சம்பாநரேந்தர்குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது
 • தாமரை நாச்சி" என்னும் கதை கணையாழி வாசகர் வட்டம் பரிசு பெற்றது
 • அருவி என்னும் சிறுகதை இலக்கியசிந்தனைப் பரிசு பெற்றது
 • "மீதமிருக்கும் வாழ்வு" சிறந்த சிறுகதைத்தொகுப்பு என 2014-ஆம் ஆண்டின் சுஜாதா விருது பெற்றது
 • 2017-ல் கோவை விஜயா பதிப்பகம் வழங்கிய சிறந்த சிறுகதையாசிரியர்க்கான புதுமைப்பித்தன் விருது பெற்றுள்ளார்
 • 2020 இலக்கியவீதி அன்னம் விருது இவருக்கு வழங்கப் பட்டது

நூல் பட்டியல்

சிறுகதைகள்
 • வெளிவாங்கும் காலம் (2004) - கனவு பட்டறை பதிப்பகம் (லீனா மணிமேகலை)
 • வெளிவாங்கும் காலம் (2013) - பாதரசம் பதிப்பகம்
 • மாட வீடுகளின் தனிமை (2011) - தோழமை பதிப்பகம்
 • கெண்டை மீன்குளம் (2012) - தோழமை பதிப்பகம்
 • மீதமிருக்கும் வாழ்வு (2013) - டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
 • என்.ஶ்ரீராம் படைப்புகள் (2016) - தோழமை பதிப்பகம்
 • என்.ஶ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2018) - தொகுப்பு ந.முருகேச பாண்டியன்- டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
நாவல்
 • அத்திமரச் சாலை (2010) - தோழமை பதிப்பகம்

உசாத்துணை


✅Finalised Page