under review

வசந்தம் (இந்திய இதழ்)

From Tamil Wiki
வசந்தம் இதழ் - தொகுப்பு

வசந்தம் : (1942 -1968) இலக்கிய இதழ். 1942 முதல் கோவையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியர் ஆர். திருஞானசம்பந்தம். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்புகளுக்கு இவ்விதழ் முக்கியத்துவம் அளித்தது. ஆர். கே. சண்முகம் செட்டியார் மற்றும் டி.கே. சிதம்பரநாத முதலியார் இருவரும் ‘வசந்தம்’ இதழின் கௌரவ ஆசிரியர்களாகச் செயல்பட்டனர்.

பார்க்க வசந்தம் (இலங்கை)

பதிப்பு, வெளியீடு

ஏப்ரல் 1942 முதல், கோவையிலிருந்து வசந்தம் இதழ் வெளிவந்தது. தமிழ்ப் புத்தாண்டு அன்று இவ்விதழ் தொடங்கப்பட்டது. ஆர். கே. சண்முகம் செட்டியாரின் ஆதரவில் இவ்விதழ் வெளிவந்தது. ஆர். கே. சண்முகம் செட்டியார் மற்றும் டி.கே. சிதம்பரநாத முதலியார் இருவரும் இவ்விதழின் கௌரவ ஆசிரியர்களாக இருந்தனர். ஆர். சண்முகசுந்தரத்தின் சகோதரரும் மொழிபெயர்ப்பாளருமான ஆர். திருஞானசம்பந்தம் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். ஆரம்ப காலங்களில் ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் ’வசந்தா மில்’ அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட இவ்விதழ், பின்னர் ‘புதுமலர் பிரஸ்’ மூலம் வெளிவந்தது. கே.சி.எஸ். அருணாசலம், டி.சி. ராமசாமி , தா. நாகலிங்கம், விஜயராகவன் போன்றோர் வசந்தம் இதழின் உதவி ஆசிரியர்களாகச் செயல்பட்டனர்.

உள்ளடக்கம்

புதினத் தொடர்கள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவை ‘வசந்தம்’ இதழில் இடம் பெற்றன. கையெழுத்துப் பத்திரிகைகளில் வெளிவந்த தரமான கவிதை, கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு, இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்கப்படுத்தியது. கொங்கு வட்டார இலக்கியங்களும், ஆர். சண்முகசுந்தரத்தின் தொடர் சித்திரங்களும், மொழிபெயர்ப்புகளும் இவ்விதழில் இடம் பெற்றன. ஆர். கே. சண்முகம் செட்டியாரின் 'சிலப்பதிகாரம் - புகார் காண்டம் - எளிய தமிழ் உரை' 1945 முதல் வசந்தத்தில் வெளிவந்தது. 1946-ல், புதுமலர் நிலையம் மூலம் இத்தொடர் நூலாக வெளியானது. ஆர். சண்முகசுந்தரம் எழுதிய 'பூவும் பிஞ்சும்’, கவியோகி சுத்தானந்த பாரதியின் 'ஆத்ம சோதனை', ‘கலைக்கோயில்', சரத்சந்திரரின் 'ஸ்ரீ காந்தன்' உள்ளிட்ட பல படைப்புகள் வசந்தம் இதழில் தொடராக வெளிவந்தன. கவிதை மற்றும் சிறுகதை உலகிற்குப் பல புதியவர்களை அறிமுகப்படுத்தியது வசந்தம். நா. நஞ்சுண்டன், விமலா ரமணி போன்றோர் ‘வசந்தம்’ இதழ் மூலம் பரவலான கவனம் பெற்றனர். டி.சி. ராமசாமியின் கதை, கட்டுரை, மொழியாக்கங்கள் வசந்தம் இதழில் இடம் பெற்றன. கோவையில், 1944 மற்றும் 1949-களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் வரவேற்புக் கமிட்டியின் செயலாளராக வசந்தம் இதழின் ஆசிரியர் ஆர். திருஞானசம்பந்தம் செயல்பட்டார். செப்டம்பர் 11, 12 ,1949 தேதிகளில் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் ’கோபால்பாக்’ மாளிகையில் பாரதிக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றிய செய்திகள் வசந்தம் இதழில் வெளியாகின. பெரியசாமித் தூரன், கரிச்சான் குஞ்சு, சுகி சுப்பிரமணியன், விமலா ரமணி போன்றோரின் ஆரம்பகாலப் படைப்புகள் வசந்தம் இதழில் வெளிவந்தன.

வசந்தம் இதழ் தொகுப்பு

வசந்தம் இதழில் வெளியான படைப்புகளிலிருந்து சிலவற்றைத் தேர்த்நெடுத்து ‘வசந்தம் இதழ் தொகுப்பு’ என்ற பெயரில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. இதன் தொகுப்பாசிரியர்களாக சிட்டி பெ.கோ. சுந்தர்ராஜன், வ. விஜயபாஸ்கரன், நா. நஞ்சுண்டன், ப. முத்துக்குமாரசுவாமி ஆகியோர் இருந்தனர். 2003-ல் இதன் முதல் பதிப்பு வெளிவந்தது.

வசந்தம் இதழ்த் தொகுப்பு உள்ளடக்கம்

வசந்தம் இதழ் தொகுப்பு உள்ளடக்கம்

வசந்தம் இதழ்த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தேர்ந்தெடுத்த கதை, கவிதை, கட்டுரை, நாடகம் மற்றும் மொழிபெயர்ப்புகளின் பட்டியல்:

படைப்பு எழுத்தாளர்கள்
கவிதைகள்
குழலின்பம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
எழிற்கு எவர் இணையே ச.து.சு. யோகி
எழில் கே.சி.எஸ். அருணாசலம்
விடிவெள்ளி தே.ப. பெருமாள்
பிரயாணி கு.மா. பாலசுப்ரமணியம்
நாணித் திரை மறைதல் விசாகன்
யார் சொல்லாய்? விஜூ
ஏக்கத்தின் குரல் மு. பெரியசாமி
மகிழுலகம் செந்தாமரை
உவமையிலாள் கே.டி. தேவர்
இயற்கை உல்லாசன்
வசந்த மழை சோன்
என் அன்னை அம்பலவாணன்
இழந்த விண் ரா.பு. தங்கராஜன்
அவள் மகிழ்ந்தாள் கா.மு. ஷெரீப்
அன்னியன் கே. ஸ்ரீனிவாசன் எம்.எஸ்ஸி.
தேன்கூடு கே.சி.எஸ். அருணாசலம்
கட்டுரைகள்
மாப்பிள்ளை தேடுதல் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்
ஆனந்தரங்கம் பிள்ளை சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்
மலரூடு நீயே இருத்தி மு. அருணாசலம்
ஏன் முடியாது? ரா.நா.
நிருபர்கள் பல ரகம் ரா.நா.
விமர்சன இலக்கியம் ரா.நா.
மறுமலர்ச்சி வித்வான் அ. கிருஷ்ணமூர்த்தி
செய்யுளும் வசனமும் சி.ஆர். ராமசுவாமி
தமிழில் சிறுகதைகள் கே. விஜயராகவன்
திருவள்ளுவரும் வையையும் அ. கிருஷ்ணசாமி நாயுடு
ஹம்பி ரா. ஆறுமுகம்
நமது சங்கீதம் ராவ்பகதூர் டி.எஸ். திருமூர்த்தி
தமிழ் நாவல்கள் கே. விஜயராகவன்
ரஷ்யாவும் குழந்தைகளும் கே.சி.எஸ். அருணாசலம்
உடல், பொருள், ஆவி சுகி
டாம் மாமாவின் குடில் வில்லன்
வசனமும் கவிதையும் கே. ஸ்ரீனிவாசன் எம்.எஸ்ஸி.
கலையும் ரசிகரும் ரா.சு. மணி
பெண்கள் விளையாட்டு தா. நாகலிங்கம்
நன்னூல் அ. கிருஷ்ணமூர்த்தி
தமிழ் இலக்கியம் வித்வான் அ. கிருஷ்ணமூர்த்தி
மகேந்திரன் மகன் அ. கிருஷ்ணமூர்த்தி
கோவை 'கோபால் பாக்கில்' நா. நஞ்சுண்டன்
கலைக் கோயில் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்
சிலப்பதிகார ஆராய்ச்சி புகார்க்காண்டம் (அந்திமாலைச் சிறப்புச்செய் காதை) டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்
ஆத்ம சோதனை யோகி சுத்தானந்தபாரதியாரின் அனுபவங்கள்
சிறுகதைகள்
கண்கண்ட தெய்வம் ஆர். திருஞானசம்பந்தம்
எப்போ வருவாரோ? சரஸ்வதி ராம்நாத்
வெற்றியா? தோல்வியா? ஆர்.கே. பார்த்தசாரதி எம்.ஏ.எல்.டி.
ஏய் ரிக்ஷா சுகி
ஒரு ரங்ரோட்டுக் கதை சி.ஆர். ராமசுவாமி
வழிகாட்டி கே. விஜயராகவன்
எதிரொலி கரிச்சான்
தாலிக் குண்டு கி.ரா. கோபாலன்
செந்நிலத்துக் குப்பன் டாக்டர் அ. சிதம்பர நாதச் செட்டியார், எம்.ஏ.
கசந்த இனிப்பு பூவாளூர் சுந்தரராமன்
மூன்று மணி பெ. தூரன்
பரிசு ராஜம் ராமமூர்த்தி
நிரந்தர விடுமுறை கோமதி சுவாமிநாதன்
மனச்சாட்சி பொ. கிருஷ்ணசுவாமி
நாகா நந்தினி சி. கண்ணன்
தூய்மைச் சித்திரம் பி. கணபதி சுப்பிரமணியம்
கலைஞன் முருகன்
அவன் க. பஞ்சாபகேசன்
ராக்காச்சி கே.வி. துரைசாமி ராஜா
ஜடைபில்லை கோமதி சுப்ரமண்யம்
காதற் கதை ஆர். ஆறுமுகம்
மியாகியின் கடிதம் ர.சி. டேவிட்
சூரசம்மாரம் து. ராஜகோபால்
விதியின் செயலா? சரஸ்வதி தியாகராஜன்
நெஞ்ச அரங்கிலே அரு.பாபநாசம்
தாகம் தணிந்தது கு.ப.சேது அம்மாள்
மறுமலர்ச்சி நா. நஞ்சுண்டன்
நிலவு வெள்ளத்திலே டி.சி. ராமசாமி
அமைதி விமலா ரமணி
பிற மொழிக் கதைகள்
இசைக் காதலி (வங்காளக் கதை) மூல ஆசிரியர்: ஸ்வஜேந்திரநாத டாகுர்; தமிழாக்கம்: ரகுநாதன்
தபாலாபீஸ் (குஜராத்திக் கதை) மூல ஆசிரியர்: தூமகேது; தமிழாக்கம்: ஹரிவி
தீபாவளிப் பண்டிகை (கன்னடம்) மூல ஆசிரியர்: மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்; தமிழாக்கம்: ஜெயலட்சுமி ஆர். ஸ்ரீனிவாசன்
பெண் (கன்னடம்) மூல ஆசிரியர்: ஆனந்தா; தமிழாக்கம்: ஜெயலட்சுமி ஆர். ஸ்ரீனிவாசன்
பலி (கன்னடம்) மூல ஆசிரியர்: திருமதி பி.டி.ஜி. கிருஷ்ணா; தமிழாக்கம்: ஜெயலட்சுமி ஆர். ஸ்ரீனிவாசன்
காதலுக்குப் பின்(அமெரிக்கா) மூல ஆசிரியர்: காதரைன் மான்ஸ்பீல்ட்; தமிழாக்கம்: ஆ. சிங்காரவேலு
அமிர்தமும் விஷமும் (ஸ்வீடன் நாட்டுக் கதை) தமிழில்: ஆ. சிங்காரவேலு
முதுமையில் இளமை (மராத்தி) மூல ஆசிரியர்: வி.எஸ். காண்டேகர்; தமிழாக்கம்: எச். விஜயகுமார்
அஞ்சனம் (கன்னடக் கதை) மூல ஆசிரியர்: ஸி.கே. வெங்கட்டராமையா, எம்.ஏ.; தமிழாக்கம்: ஜெயலட்சுமி ஆர். சீனிவாசன்
வைராகி (பிரஞ்சுக் கதை) மூல ஆசிரியர்: பால்ஸாக்; தழுவி எழுதியவர்: ஆ. சிங்காரவேலு
பாக்யசாலிகள் (குஜராத்திக் கதை) தழுவி எழுதியவர்: எச்.விஜயகுமார்
கன்னட இலக்கியம் (கட்டுரை) மூல ஆசிரியர்: அ.நா. கிருஷ்ணராவ்; மொழியாக்கம்: டி.சி. ராமசாமி
நாடகங்கள்
அணைந்த சுடர் ரகுநாதன்
யுத்தகால இலக்கியம் சுகி
வெண்புறா கே.சி.எஸ். அருணாசலம்
கடமை எச். விஜயகுமார்

இதழ் நிறுத்தம்

1942-ல் தொடங்கிய 'வசந்தம்' இருபத்தாறு ஆண்டுகள் வெளிவந்தது. இதழாசிரியர் ஆர். திருஞானசம்பந்தத்தின் மறைவுக்குப் பின், 1968-ல் நின்று போனது.

வரலாற்று இடம்

சமூகப் பிரக்ஞையுடன் வெளிவந்த இதழ், ‘வசந்தம்’. கதை, கவிதை, தொடர்கதை, நாவல், விமர்சனம், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்து அம்சங்களுக்கும் இடமளித்தது. மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரது அடுத்தகட்ட படைப்புகளை எழுத வசந்தம் இடமளித்தது. புதிய எழுத்தாளர்களையும் ஆதரித்து ஊக்குவித்தது. சென்னைக்கு வெளியிலிருந்து வெளிவந்த காவேரி, கலாமோகினி வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஓர் இதழ் ‘வசந்தம்’

உசாத்துணை


✅Finalised Page