under review

ஆனந்தரங்கம் பிள்ளை

From Tamil Wiki
Anandarangam Pillai
ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 10, 1761) (ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆனந்தரங்கப் பிள்ளை) தமிழக வரலாற்றின் முதன்மையான வரலாற்றுக் குறிப்பாளர். பாண்டிச்சேரி நகரத்தில் ப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) பணி புரிந்தார். ப்ரெஞ்சு ஆளுநர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736 முதல் 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.

பிறப்பு, இளமை

ஆனந்தரங்கம் பிள்ளை மார்ச் 30, 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) திருவேங்கடம் பிள்ளை எனும் யாதவர் குலத்து வணிகருக்கு மகனாக பிறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மூன்று வயது இருக்கையிலேயே தாய் இறந்துவிட்டார். பாண்டிச்சேரியில் திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர் நைனியா பிள்ளை ப்ரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு கவர்னர் குல்லியம் டி ஹெபெர் (Guillaume André d'Hébert) க்கு தலைமை இந்தியத் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது அழைப்பின் படி திருவேங்கடம் பிள்ளை 1716-ல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார்

நைனியாப்பிள்ளை அப்போதைய கவர்னர் ஹெபெர்-ருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் ஹெபெர் (ஜூனியர்) தற்காலிக கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தார். அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது என்றும் அடிதாங்காமல் இறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருவேங்கடம் பிள்ளை அஞ்சி ஆங்கிலேய நிலப்பகுதிக்கு தப்பி ஓடினார். ஆனால் அடுத்த பிரெஞ்சு கவர்னர் பிரிவொஸ்ட்ர் (De La Prévostière) திருவேங்கடம் பிள்ளையை அழைத்து பணியில் அமர்த்திக்கொண்டார்.

நைனியா பிள்ளையின் மகன் குருப்பப் பிள்ளை பிரெஞ்சு பகுதியில் இருந்து தப்பி ஆங்கிலேயப் பகுதிக்குச் சென்றார். அவர் பிரான்சுக்குச் சென்று கிறிஸ்தவராக மதம் மாறி தன் தந்தையின் சாவுக்கு நீதி கேட்டார். ஹெபர் (ஜூனியர்) மீது பிரெஞ்சு மேலிடத்தைச் சேர்ந்த டியூக் ஆஃப் ஆர்லியன்ஸிடம் புகார் செய்தார். விசாரணைக்குப் பின்னர் 1719-ல் ஹெபெர் (ஜூனியர்) பதவி மாற்றம் செய்யப்பட்டார். குருவப்பப் பிள்ளை நைனியா பிள்ளையின் பதவியை அடைந்தார். குருவப்பப் பிள்ளை செயிண்ட் மைக்கேல் பதக்கம் (Order of Saint Michael )செவாலியே ( chevalier) பட்டங்கள் பெற்றார். பாரீஸில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான குருவப்பப் பிள்ளை 1724-ல் மறைந்தார். 1726 ஜூன் மாதம் திருவேங்கடம் பிள்ளை அவருடைய பணியை ஆற்றினார்.

ஆனந்தரங்கம் பிள்ளை தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் இல்லத்திலேயே வெவ்வேறு அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலம் பிரெஞ்சு சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் கற்பிக்கப்பட்டன. பதினாறு வயது முதல் தன் தந்தையுடன் இணைந்து அலுவலகப் பணிகளை செய்ய தொடங்கினார். தங்கள் குடும்பத்தினர் நடத்தி வந்த பாக்குக் கிடங்கினை பார்த்துக்கொண்டார். அடுத்த கவர்னர் பியரி கிறிஸ்டோஃப் லெனுவார் (Pierre Christoph LeNoi) திருவேங்கடம் பிள்ளையிடம் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். 1726-ல் திருவேங்கடம் பிள்ளை மறைந்தபோது பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்பில் போர்ட்டோ நோவோ ( பரங்கிப்பேட்டை)வில் இருந்த துணி ஆலையின் தலைமை பொறுப்புக்கு ஆனந்தரங்கம் பிள்ளை அவரால் நியமிக்கப்பட்டார்.

ஆனந்தரங்கம்பிள்ளை தமிழ் கையெழுத்து

தனி வாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை செங்கல்பட்டு சேஷாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயியை மணந்து மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் தந்தையானார்.அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று அவரது நாட்குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

பொதுவாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை 1726 பரங்கிப்பேட்டையின் நீலத்துணி (அவுரி) தொழிற்சாலையில் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டார். உள்ளூர் நெசவுத்தொழில் பற்றி நன்கறிந்திருந்த ஆனந்தரங்கம் பிள்ளை ஆர்க்காடு, லாலாப்பேட்டையில் நான்கு கொள்முதல் நிலையங்களை உருவாக்கி அங்கிருந்து குறைந்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து நீலச்சாயம் முக்கி துணிகளை உற்பத்தி செய்தார். ஏராளமான நெசவாளர்களை பிரெஞ்சு பகுதியில் குடியமர்த்தினார். தனக்கென நிறைய பணம் சேர்த்துக் கொண்டு கவர்னர்களுக்கும் ஏராளமாக வழங்கி நற்பெயர் ஈட்டினார். 1740-ல் மராட்டியர்கள் பறங்கிப்பேட்டையை தாக்கி தொழிற்சாலையைச் சூறையாடினர். ஆனந்தரங்கம் பிள்ளை கடும் நஷ்டத்தைச் சந்தித்தார். ஆனால் பிரெஞ்சுக்காரர்களின் உதவியால் அவர் அதிலிருந்து மீண்டார்.

பதவிப்போட்டி

பியரி கிறிஸ்டோஃபை அடுத்து 1735-ல் வந்த கவர்னர் பியரி துய்மா (Pierre Benoît Dumas) காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் ஆதிக்கம் பெருகியது. 1724-ல் மறைவது வரை குருவப்ப பிள்ளை தலைமை துபாஷ் ஆக பணியாற்றினார். அவருடைய மறைவுக்கு பின்னர் அவருடைய மகன்களுக்கு அந்தப் பதவி அளிக்கப்படவில்லை. கிறிஸ்தவராக மதம் மாறிய குருவாப் பிள்ளை தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் கொடுக்காமல் வைத்திருந்தது பிரெஞ்சு கிறிஸ்தவச் சபையின் உயர்மட்டத்தினரின் எதிர்ப்பை ஈட்டியிருந்ததே காரணம். குருவப்பப் பிள்ளையின் மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுக்காலம் திருவேங்கடம் பிள்ளை நடைமுறையில் துபாஷ் ஆக இருந்தார். அவருடைய மகனாகிய ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு துபாஷ் பதவி கிடைக்குமென எண்ணினார். ஆனால் அப்பதவி கனகராய முதலியார் என்னும் இன்னொரு அதிகாரிக்கு சென்றது.

கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு போட்டியாளரும் எதிரியுமாக இருந்தவர். ஆகவே ஆனந்தரங்கம் பிள்ளை அடங்கியும் பணிந்தும் பணியாற்றினார். ஆயினும் அவர்களுக்கிடையே பூசல்களும் சதிகளும் நிகழ்ந்தன. கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளை பவள வணிகர்களிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டியை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி கவர்னரிடம் வழக்கை கொண்டு சென்றார். விசாரணையில் முதலில் அந்த வட்டியை வழங்கும்படி சொன்ன கவர்னர் டுமா பின்னர் ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு கடும் இழப்பு ஏற்பட்டது என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். பலகட்ட விசாரணைக்குப்பின் ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சாதகமாக பிரெஞ்சு நிர்வாகக்குழு முடிவெடுத்தது. 1739-ல் கனகராய முதலியின் மகன் வில்வேந்திர முதலி 21 வயதில் மர்மமாக இறந்தார். அச்செய்தியை அறிந்த வில்வேந்திர முதலியின் அன்னையும் தற்கொலை செய்துகொண்டார்.

1741-ல் கவர்னர் துய்மா துணை கவர்னரிடம் பதவியை அளித்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பினார். ஜனவரி 14, 1742-ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் முக்கியமானவரான டூப்ளே (Joseph François Dupleix) பாண்டிச்சேரிக்கு வந்து கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய கவர்னருக்கு மிக அணுக்கமானவராக ஆன ஆனந்தரங்கம் பிள்ளை 1743 முதல் டூப்ளேயை தனியறையில் சந்திக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டிருந்தார். பாண்டிச்சேரியை ஒட்டிய ஊர்களில் வரிதிரட்டுநர் (Renter) பதவி முறைப்படி ஊர்த்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போது ஆனந்தரங்கம் பிள்ளை தன்னுடைய அணுக்கர்களான குமாரபிள்ளை, வீரநாயக்கன், சந்திரமதிப் பிள்ளை, எல்லா பிள்ளை ஆகியோருக்கு அவற்றை வழங்கினார். கேசவ அய்யன் என்னும் துபாஷ் மறைந்தபோது அவ்விடத்தில் கனகராய முதலியார் தன் மைத்துனர் கவினிவாச முதலியை நியமித்ததை ஆனந்தரங்கம் பிள்ளை கடுமையாக எதிர்த்தாலும் அதில் கனகராய முதலியாரே வென்றார்.

ஜூன் 29, 1744-ல் ஆனந்தரங்கம் பிள்ளை தன் மகள் பாப்பாளுக்கு மிகப்பெரிய அளவில் திருமண விழாவை நடத்தி அதில் கவர்னரை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்தார். கவர்னர் உட்பட அனைவருக்கும் மிகப்பெரிய பரிசுகள் அளிக்கப்பட்டன. பிரகாச முதலி என்பவருக்கும் திருவேங்கட முதலி என்பவருக்கும் நிகழ்ந்த வணிகப்பூசலை சமரசம் செய்து வைத்ததன் வழியாக பிரெஞ்சு கவர்னர் டூப்ளேயிடம் நன்மதிப்பை ஆனந்தரங்கம் பிள்ளை உறுதிசெய்து கொண்டார். நவம்பர் 30, 1745-ல் கனகராய முதலி ஒழுக்கரை என்னும் இடத்தில் ஒரு மாதா கோயில் கட்டி அதை பெரிய விழாவாக நடத்தினார். ஆனால் அதில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் அழைக்கப்பட்டு சமானமாக அமரசெய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது, அக்குற்றச்சாட்டை கவர்னர் வரை கொண்டுசென்றார் ஆனந்தரங்கம் பிள்ளை.

பிப்ரவரி 12, 1746-ல் கனகராய முதலியார் மறைந்த போது அவருக்கு நேரடி வாரிசுகள் உயிருடனில்லை என்பதனால் அவருடைய தம்பி மற்றும் மனைவி மற்றும் மைத்துனர்கள் நடுவே சொத்துச் சண்டை நடைபெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளை தலைமையில் இருபது பேர் கொண்ட ஒரு குழு அந்த பூசலை விசாரித்தது. அக்குழு கனகராய முதலியாரின் தம்பி சின்ன முதலியை வாரிசாக அறிவித்தது. கனகராய முதலியின் தம்பி சின்னமுதலி தலைமை துபாஷ் பதவியை கோரினார். அவர் நேரடி வாரிசு அல்ல என்பதனால் அது ஏற்கப்படவில்லை. ஜூன் 12, 1746-ல் டி புஸாட் (de Bausset) என்னும் பிரெஞ்சு அதிகாரியின் துணையுடன் ஆனந்தரங்கம் பிள்ளை துபாஷ் பதவியை கோரினார். அன்னபூர்ணையன் என்பவர் துபாஷ் பதவிக்காக கவர்னருக்கும் அவர் துணைவிக்கும் பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்திருந்தார். திருமதி டூப்ளே துபாஷ் பதவியை அளிக்க பெரும்பணத்தை லஞ்சமாகக் கோரினாலும் டூப்ளேயின் விருப்பப்படி ஆனந்தரங்கம் பிள்ளை தலைமை துபாஷ் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் நிகழ்ந்த போரின் விளைவாக இரண்டு ஆண்டுகள் பிரெஞ்சு கப்பல்கள் பாண்டிச்சேரிக்கு வருவது நின்றிருந்தமையால் ஆனந்தரங்கம் பிள்ளையின் பதவி ஏற்பு இரண்டு ஆண்டுகள் தாமதமாகியது. ஜூலை 1747-ல் கடற்படைத் தளபதி போஸ்க்கோவன் (Admiral Boscawen) தலைமையில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் படை பாண்டிச்சேரியை தாக்கி சூறையாடியது. ஆனால் பாண்டிச்சேரியை அவரால் கைப்பற்ற முடியவில்லை. ஐக்ஸ்-லா சாப்பல் (Treaty of Aix-la-Chapelle) உடன்படிக்கையின்படி பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷ்காரர்களும் சமாதானம் செய்து கொண்டனர். அதன் பின் 1748-ல் தான் ஆனந்தரங்கம்பிள்ளை தலைமை துபாஷாக பொறுப்பேற்றார்.

துபாஷ்

புதுச்சேரியில் பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் பிரெஞ்சு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்து அதிகாரிகளுக்குச் சொல்பவர்கள் துபாஷ்கள் (த்வி பாஷி - இருமொழியாளர்) எனப்பட்டனர். பிரெஞ்சு ஆளுநருக்குத் துபாஷ் ஆக இருந்தவர்கள் தலைமைத் துபாஷ் ஆகவும், தமிழர்களின் தலைவராகவும் கருதப்பட்டனர். முதன்முதலாக புதுச்சேரிக்குத் துபாஷ் ஆக வந்தவர் லசார் தெ மொத்தோ என்றழைக்கப்பட்ட பூந்தமல்லி தானப்ப முதலியார். அவருக்குப் பிறகு முத்தியப்ப முதலியார், நைனியப்ப பிள்ளை, குருவப்ப பிள்ளை, கனகராய முதலியார் எனப் பலரும் துபாஷ் ஆக இருந்தனர்.

அதிகாரத்தில்

ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சு இந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷ் ஆகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார். ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை ஓர் அதிகார மையமாக வைத்திருந்தன.

1749-ம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு ஆனந்தரங்கம் பிள்ளை செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார்.

ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். ஆளுநர் மாளிகைக்குள் மங்கல ஒலிகளுடன் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக் கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது.

டூப்ளேயின் காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளை அரசு விருந்தினர்களை செயிண்ட் டேவிட் கோட்டையில் வரவேற்று உரையாடும் அதிகாரம் கொண்டிருந்தார். வரி வசூலையும் நிதி நிர்வாகத்தையும் ஆட்சிசெய்தார். டூப்ளேயின் தனித்தூதராகவும் அரசர்களையும் படைத்தலைவர்களையும் சந்தித்தார்.

விசாரணைகள்

தன் பதவிக்காலத்தில் டூப்ளேயுடனும் பிரெஞ்சு கம்பெனியுடனும் பல முறை முரண்பட்டு விசாரணைக்கு ஆளானார் ஆனந்தரங்கம் பிள்ளை. பிரெஞ்சு கம்பெனிக்கு அளிக்கப்பட வேண்டிய பெருந்தொகையை ஆனந்தரங்கம் பிள்ளை முடக்கி வைத்திருப்பதை டூப்ளே சுட்டிக்காட்டி கண்டித்தபோது ஆனந்தரங்கம் பிள்ளை வட்டியுடன் அவற்றை திருப்பி அளித்தார். டூப்ளே மேலும் ஆயிரம் பகோடாக்கள் அளிக்கவேண்டும் என்று கோரினார். அத்தொகையையும் ஆனந்தரங்கம் பிள்ளை அளித்தார்.

மாரி செட்டி என்பவரை ஆனந்தரங்கம் பிள்ளை சிறைப்படுத்தி தண்டித்ததை டூப்ளே கண்டித்தார். சின்ன முதலி தலைமையில் ஒரு குழு அதைப்பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்டது. தாண்டவராயன் மற்றும் ரங்கன் என்னும் இரண்டு கண்ணால் பார்த்த சாட்சிகளின் கூற்றின் அடிப்படையில் ஆனந்தரங்கம் பிள்ளை விடுவிக்கப்பட்டார்.

சந்தா சாகிபின் மனைவியின் ஊழல்களை ஆனந்தரங்கம் பிள்ளை தொடர்ந்து பதிவுசெய்கிறார். மேடம் டூப்ளேக்கும் ஆனந்தரங்கம் பிள்ளைக்கும் கடும் பூசல் தொடர்ந்து நிலவி வந்தது.

வீழ்ச்சி

1750 முதல் தமிழகத்தில் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆற்காடு நவாப்களின் வாரிசுரிமைப்போரை முன்வைத்து மறைமுகப்போரில் ஈடுபட்டன. பிரிட்டிஷார் ஆற்காடு அரசுரிமையில் முகமது அலியை ஆதரித்தனர், டூப்ளே சந்தா சாகிபை ஆதரித்தார். ஒப்புநோக்க பெரிய ராணுவத்தை வைத்திருந்த சந்தா சாகிப் தொடக்கத்தில் தொடர்வெற்றிகளை அடைந்தார். ஆனால் பிரிட்டிஷ் படைகளின் தளபதியாக வந்த ராபர்ட் கிளைவ் பிளவுபடுத்தும் உத்திகளைக் கையாண்டு சந்தா சாகிபின் ஆதிக்கத்தை குறைத்தார். வந்தவாசியில் நிகழ்ந்த போரில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வி அடைந்தனர். சந்தா சாகிப் கொல்லப்பட்டார். முகமது அலி ஆற்காடு நவாப் ஆக முடிசூட்டிக்கொண்டார்.

1754-ல் டூப்ளே பதவி விலகி பாண்டிச்சேரியில் இருந்து சென்றார். சார்ல்ஸ் கொதே (Charles Godeheu) பாண்டிச்சேரி கவர்னராக வந்தார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு ஆனந்தரங்கம் பிள்ளையின் செல்வாக்கு குறைந்தது. கிறிஸ்தவராக மதம் மாற மறுத்தமையால் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மதபோதகர்களின் எதிர்ப்பும் இருந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. 1756-ல் கவர்னர் லெறி (Leyrit) காலத்தில் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

தினப்படி சேதிக்குறிப்பு

ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான காலப்பதிவு எனப்படுகிறது. தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம் என்று அவற்றை குறிப்பிட்டிருந்தார். பார்க்க தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை) கைப்பிரதியாக இருந்த அந்தக் குறிப்புகளை 1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கலுவா மொம்பிரான் கண்டெடுத்து ப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

மறைவு

ஆனந்தரங்கம் பிள்ளை ஜனவரி 12, 1761 அன்று மறைந்தார். அவர் மறைந்து நான்கு நாட்களுக்கு பின் பாண்டிச்சேரி பிரிட்டிஷ் தளபதி கர்னல் கூட்டே (Colonel Coote)யால் கைப்பற்றப்பட்டது.

ஆனந்தரங்கம்பிள்ளை வீடு, பாண்டிச்சேரி
ஆனந்தரங்கம் பிள்ளை வீடு உட்பகுதி
Pondicherry Anandaranga Pillai Library 1.jpg
Pondicherry Anandaranga Pillai Library 2.jpg

நினைவகம்

ஆனந்தரங்கம் பிள்ளையின் வீடு பாண்டிச்சேரியில் அவர் பெயர் சூட்டப்பட்ட தெருவில் அமைந்துள்ளது. 1760-1761-ல் நடந்த ஆங்கிலேயப் படையெடுப்பில் அழியாமல் எஞ்சிய சில இல்லங்களில் ஒன்று. இந்திய- பிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்த இவ்வில்லம் பிரெஞ்சு அரசால் கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள மைய நூலகத்திற்கு ஆனந்தரங்கம்பிள்ளை பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலகத்தின் முகப்பில் அவருடைய முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

நூல் குறிப்புகள்

ஆனந்தரங்கம் பிள்ளை இந்து மத அறிஞர்கள், தமிழ், தெலுங்குப் புலவர்கள் ஆகியோரின் புரவலர். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாக நாட்குறிப்புகள் சொல்கின்றன. நமசிவாயப் புலவர், மதுரகவிராயர் போன்ற தமிழ் புலவர்களும் கஸ்தூரி ரங்கய்யா முதலில தெலுங்கு கவிஞர்களும் அவரை பற்றி பாடியிருக்கிறார்கள்

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து இலக்கிய நூல்கள்
சமகாலப் படைப்புகள்
  • ஆனந்தரங்கன் கோவை. தியாகராஜ தேசிகர் - 1755
  • ஆனந்தரங்கர் தனிப்பாடல்கள்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • ஆனந்தரங்கம் விஜயசம்பு - சீனிவாச சாஸ்திரி (சம்ஸ்கிருதம்)
  • ஆனந்தரங்க ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக் கவி (தெலுங்கு)
பிற்காலப் படைப்புகள்
  • ஆனந்தரங்கம் பிள்ளைத்தமிழ்- அரிமதி தென்னகன்
நவீன இலக்கியம்
  • மானுடம் வெல்லும் (நாவல்) -பிரபஞ்சன்
  • வானம் வசப்படும் ( நாவல்) பிரபஞ்சன்
ஆனந்தரங்கம் பிள்ளை வரலாறு
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
  • இந்திய இலக்கியச்சிற்பிகள் ஆனந்தரங்கப்பிள்ளை -சிலம்பு நா செல்வராசு[1]
  • ஆலாலசுந்தரம், 'ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம்' 1736 - 61, புதுச்சேரி.1999
  • கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., ஆனந்தரெங்கப்பிள்ளை வி. நாட்குறிப்பு, 1778-1792, சென்னை, 2004.
  • சந்திரசேகரன், (பொதுப் பதிப்பாசிரியர்), 1955, ஆனந்தரங்கம் கோவை, சென்னை.
  • ஜெயசீல ஸ்டீபன், எஸ்., தமிழில் நாட்குறிப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) செய்தி இதழ்களின் முன்னோடிகள், புதுச்சேரி, 1999,

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:40 IST