under review

கா.மு. ஷெரீப்

From Tamil Wiki
கா. மு. ஷெரீப்

கா. மு. ஷெரீப் (காதர்ஷா முகமது ஷெரீப்: 1914-1994) கவிஞர், திரைப்பாடல் ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். தமிழ் வளர்ச்சிக்காக ‘தமிழ் முழக்கம், ‘சாட்டை’ போன்ற இதழ்களை வெளியிட்டவர். ம.பொ. சிவஞானம் அவர்களின் ‘தமிழரசு கழக’த்துடன் இணைந்து தமிழ், தமிழர் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

பிறப்பு, கல்வி

காதர்ஷா முகமது ஷெரீப் என்னும் கா.மு.ஷெரீப், செப்டம்பர் 11, 1914 அன்று, தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில், காதர்ஷா ராவுத்தர் - முகமது இப்ராஹிம் பாபாத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். செல்வ வளமுள்ள குடும்பம். வீட்டுக்கே வந்து ஆசிரியர் கல்வி போதித்தார்.

தனி வாழ்க்கை

ஷெரீப்பிற்கு எட்டு ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. இவர்களுடன் இரண்டு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் குழந்தையையும் வளர்ப்புக் குழந்தைகளாக வளர்த்து வந்தார்.

கா.மு. ஷெரீப் கவிதை
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் கவிதை

இலக்கிய வாழ்க்கை

க.மு. ஷெரீப்பின் முதல் கவிதை 1934-ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் குடியரசு நாளிதழில் வெளியானது. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். அதுகுறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கவிதைகளை இதழ்களில் எழுதினார். ‘ஆத்திரம் கொள்’ என்னும் கவிதை அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒன்று. தொடர்ந்து பல இலக்கிய, அரசியல் இதழ்களில் கவிதைகள் எழுதினார்.க.மு. ஷெரீப்பின் முதல் கவிதைத் தொகுப்பு 'ஒளி' 1946-ல் வெளியானது.

தமிழ் முரசு, திருமகள், பாரததேவி, தினமணி கதிர் போன்ற இதழ்களில் அவருடைய சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. அக்காலச் சமூகச் சிக்கல்களையும், காதல், கலப்பு மணம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் மையமாக வைத்து அவை எழுதப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் முரசு, பிறை, தாய்நாடு, ஹிந்துஸ்தான், சாட்டை, செங்கோல் எனப் பல இதழ்களில் கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

தமிழ் முழக்கம் இதழ்

இதழியல் வாழ்க்கை

1948-ல் ‘ஒளி’ என்ற மாத இதழைத் தொடங்கினார் ஷெரீப். அந்த இதழ் மூலம் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.

1952-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை நடத்தினார். ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

நாடக வாழ்க்கை

க.மு. ஷெரீப் நாடகங்களையும், நாடகங்களுக்குப் பாடல்களையும் எழுதினார். அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்திற்காக இவர் எழுதிய ‘திருநாடே’ என்ற பாடல் புகழ்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ‘கொலம்பியா’ கிராமபோன் நிறுவனம் தனது இசைத் தட்டுக்களை வெளியிடுவதற்காக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. அதன் ‘ரிகார்டு’களுக்காக பல பாடல்களை எழுதினார்.

கலைஞர் மு. கருணாநிதியுடன்..

திரைப்பட வாழ்க்கை

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி. ஆர். சுந்தரம், தான் தயாரித்து வந்த ‘மாயாவதி’ என்ற திரைப்படத்திற்குப் பாடல் எழுத ஷெரீப்பை ஒப்பந்தம் செய்தார். ‘அல்லியின் வெண்ணிலா வந்தது போல்’ என்பது ஷெரீப் எழுதிய முதல் பாடல். அப்பாடலை ஏ.பி. கோமளா பாடினார். அது தொடங்கி நண்பர் அ. மருதகாசியுடன் இணைந்தும் தனியாகவும் பல படங்களுக்குப் பாடல்களை எழுதினார் ஷெரீப். “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” போன்ற பாடல்கள், மருதகாசியுடன் இணைந்து ஷெரீப் எழுதியது என்றும் பாடல்களில் தன் பெயர் இடம் பெறாவிட்டாலும் கூட நட்பு கருதி அதனை ஷெரீப் பெரிது படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மு. கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அறிமுகப்படுத்தினார். இதனைப் பல மேடைகளில் குறிப்பிட்டு நன்றி பாராட்டியிருக்கிறார்,கலைஞர் மு. கருணாநிதி.

இயக்குநர் எம்.ஏ. வேணுவின் சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்திற்காகப் பணியாற்றியபோது புலால் உண்பதை தவிர்த்தவர், தன் வாழ்நாள் இறுதிவரை அதனைப் பின்பற்றினார். குடும்ப விழாக்களின் போதும், சமயச் சடங்குகளின் போதும் கூட ஷெரீப் அசைவத்தைக் கை கொள்ளவில்லை.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடல் கா.மு. ஷெரீப் எழுதியது தான் என்பது பலருடைய கருத்து. ஜெயகாந்தனும் தனது, “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்னும் நூலில் இது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு, நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். திரைப்பாடல்கள் மட்டுமல்ல, ‘பெண் தெய்வம்’, ‘புது யுகம்’ போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.

திரைத்துறையிலிருந்து விலகல்

’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற பாடலில் தொனித்த விரசம் பொறுக்க முடியாமல், “இனி நான் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத மாட்டேன்” என்று அறிவித்துவிட்டு, திரைத்துறையிலிருந்து விலகினார் கா. மு. ஷெரீப் என அவருடைய தன்வரலாற்றுக் குறிப்பில் சொல்லியிருக்கிறார்..

சாட்டை இதழ்
கா.மு. ஷெரீப்பின் நூல்கள்

பதிப்புலக வாழ்க்கை

1955-ல், ’தமிழ் முழக்கம் பதிப்பகம்’ என்ற பதிப்பக நிறுவனத்தை ஆரம்பித்தார் ஷெரீப். அதன் மூலம் வள்ளல் சீதக்காதி வரலாறு, ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ், சீறாப்புராணச் சொற்பொழிவு, இறையருள் வேட்டல் போன்ற பல நூல்களை வெளியிட்டார். பின்னர் ‘சீதக்காதி பதிப்பகம்’ என்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கிய ஷெரீப், அதன் மூலமும் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

கா.மு. ஷெரீப் கட்டுரை

அரசியல் வாழ்க்கை

ஷெரீப் ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார், பின் காங்கிரஸ் இயக்க அபிமானியாக இருந்தார். தொடர்ந்து ம.பொ. சிவஞானம் அவர்களின் ‘தமிழரசு கழக’த்துடன் இணைந்து தமிழ், தமிழர் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். தமிழ்நாடு பெயர் மாற்றம் போராட்டத்திலும், தேவிகுளம் பீர்மேடு போராட்டங்களிலும் இவரது பங்கு முக்கியமானது. தொடர்ந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

சேர வாரும் முஸ்லிம்களே! கட்டுரை

சமூக வாழ்க்கை

ஷெரீப் மத நல்லிணக்க பார்வை கொண்டவர். வள்ளலாரின் நெறியை மிகவும் விரும்பினார். “கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் பல நற்பண்புகளின் உறைவிடமாக இருந்தார். சினிமா உலகத்தில் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு கவிஞர் கா.மு.ஷெரீப்பிடமே இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடம் பயின்று கொண்டேன்” என்று ஜெயகாந்தன், தனது ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

தாம் சார்ந்த இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சியிலும் உயர்விலும் ஷெரீப் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 'சேர வாரும் முஸ்லிம்களே!' என்னும் தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கட்டுரையில், இஸ்லாமியர்கள், ‘தேசீயத்திற்கு எதிரான சக்திகளோடு உறவு கொள்ளக் கூடாது’ என்பதையும், ‘நல்லனவற்றை எதிர்ப்பவர்களின் பொய்ப் பிரசாரத்திற்கு இரையாகக் கூடாது’ என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்.

மறைவு

கா.மு.ஷெரீப், வயது மூப்பால், ஜூலை 7, 1994 அன்று, தனது எண்பதாம் வயதில் காலமானார்.

கா.மு.ஷெரீப்பின் திரைப்படப் பாடல்கள் சில

கா.மு. ஷெரீப் வாழ்க்கை வரலாறு - செ. திவான்

ஆவணம்

  • கா.மு.ஷெரீப்பின் வாழ்க்கை வரலாறு, சம்பவங்கள், திரைப்படப் பாடல்கள் என ஷெரீப் தொடர்பான செய்திகள் அனைத்தையும் மிக விரிவாக கவிஞர் நாகூர் அப்துல் கையூம், தனது இணைய தளத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் [1].
  • ’காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்’ என்ற தலைப்பில் செ. திவான், ஷெரீப்பின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார்.
  • கா.மு.ஷெரீப்பின் சில நூல்கள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

நூல்கள் நாட்டுடைமை

தமிழக அரசு கா.மு. ஷெரீப் எழுதிய 'இறைவனுக்காக வாழ்வது எப்படி?', 'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?', 'நல்ல மனைவி', 'தஞ்சை இளவரசி', 'வள்ளல் சீதக்காதி', 'விதியை வெல்வோம்' போன்ற சில நூல்களை 1998-ல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

இலக்கிய இடம்

ஷெரீப் மக்கள் நினைவில் நின்றிருக்கும் திரைப்பாடல்களின் ஆசிரியராக இன்று அறியப்படுகிறார். தேசியவாத நோக்கு கொண்ட இஸ்லாமிய அறிஞராகவும் மதிக்கப்படுகிறார்.“இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு. ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்கிறார் கலைஞர் மு.கருணாநிதி, தனது நெஞ்சுக்கு நீதியில்.

கா.மு. ஷெரீப் நூல்
விபீஷணன் வெளியேற்றம் - கா.மு. ஷெரீப்
வள்ளல் சீதக்காதி வரலாறு - கா.மு. ஷெரீப்
பல்கீஸ் நாச்சியார் காப்பியம் - பத்ர் போரின் பின் விளைவுகள்: கா.மு. ஷெரீப்

நூல்கள்

கவிதை நூல்கள்
  • ஒளி
  • இன்றைய சமுதாயம்
  • கலைஞர் 63
  • அமுதக் கலசம்
  • கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • காதல் வேண்டாம்
  • காதலும் கடமையும்
  • கனகாம்பரம்
நாவல்கள்
  • நல்ல மனைவி
  • விதியை வெல்வோம்
  • தஞ்சை இளவரசி
நாடகங்கள்
  • புது யுகம்
  • புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
இலக்கிய நூல்கள்
  • சிலப்பதிகாரம் உரை விளக்கம்
  • கண்ணகியின் கனவு (சங்க இலக்கியக் கட்டுரைகள்)
  • விபீஷணன் வெளியேற்றம் (கம்ப ராமாயணக் கட்டுரைகள்)
  • மச்சகந்தி - பீஷ்ம சபதம் (குறுங்காவியம்)
  • இலக்கியத்திலும் பித்தலாட்டமா?
  • சீறாப்புராணம் - நுபுவ்வத்துக் காண்டம் (மூலமும் உரையும்) - நான்கு பாகங்கள்
  • சீறாப்புராணம் - ஹிஜ்ரத்துக் காண்டம் (மூலமும் உரையும்) - ஐந்து பாகங்கள்
  • சீறாப்புராணம் வானொலிச் சொற்பொழிவு
  • நபியே, எங்கள் நாயகமே (சதக முறைக் காவியம்)
  • ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்
  • பல்கீஸ் நாச்சியார் காவியம்
  • நீங்களும் பாடலாம் இஸ்லாமிய இசைப் பாடல்கள்
  • ஆன்மகீதம் (அந்தாதி)
கட்டுரை நூல்கள்
  • தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
  • தமிழரசில் முஸ்லிம்கள்
  • கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)
  • தி.மு.க. நாடாளுமா?
  • முஸ்லீம் லீக் தேவைதானா?
  • பொது சிவில் சட்டம் பொருந்துமா?
  • கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு
  • இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
  • நபி தம் பேரர்
  • இறையருள் வேட்டல்
  • தமிழரின் சமயநெறி
  • வள்ளல் சீதக்காதி வரலாறு (ஆய்வு நூல்)
  • வீரன் செண்பகராமன் வரலாறு
  • களப்பாட்டு
  • இறைவனுக்காக வாழ்வது எப்படி?
  • மகளே கேள்
  • பத்ர் போரின் பின்விளைவுகள்
  • இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?
ஆங்கில நூல்
  • Machchaganti (Bhishma Sabatham) - English Rendering with Tamil Original

பரிசுகள்/விருதுகள்

  • தாயுமானவர் நாடகப் பரிசு
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தமிழக அரசின் திரு,வி.க. விருது
  • தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற விருது
  • கம்பன் கழக விருது
  • வி.ஜி.பன்னீர்தாஸ் நிறுவன விருது
  • தமிழக இயல் இசை நாடக மன்றம் சார்பில் பொற்பதக்கம்
  • ஈப்போ (மலேயா) தமிழர்கள் சார்பிலும், பினாங்கு (மலேயா) தமிழர்கள் சார்பிலும் பொற்பதக்கங்கள்
  • சென்னை முத்தமிழ் மன்றம் சார்பில் பொற்பதக்கம்
  • துபாய் – சார்ஜா தமிழ் பண்பாட்டுக் கழகம் வழங்கிய பொற் கணையாழி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Feb-2023, 17:57:23 IST