செ. திவான்
செ. திவான் (செய்யது மசூது திவான்; செப்டம்பர் 1, 1954) எழுத்தாளர், பதிப்பாளர், வரலாற்று ஆய்வாளர். புத்தகச் சேகரிப்பாளர். ஆய்வு நோக்கில் 150 நூல்களை எழுதினார். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கையை ஆராய்ந்து ஆவணப்படுத்தினார். திவானின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.
பிறப்பு, கல்வி
செய்யது மசூது திவான் எனும் செ. திவான், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில், செப்டம்பர் 1, 1954 அன்று, செய்யது மசூது-செ.காசினம்மாள் பீவி தம்பதிக்குப் பிறந்தார். விஸ்வநாதபுரத்தில் உள்ள எம்.எம். நடுநிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். புதுமுக வகுப்பைப் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்தார்.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இளங்கலை பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 'இந்திய வரலாற்றில் தீவிரவாதம் - ஆஷ் கொலை' எனும் தலைப்பில் ஆய்வு செய்து ‘இளம் முனைவர்’ (ஆய்வியல் நிறைஞர்- M.Phil) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
செ. திவானின் மனைவி டாக்டர் திவானி ஜஹனாரா. மகள்கள்: நஜாத், சுகைனா.
இலக்கிய வாழ்க்கை
செ. திவான், கல்லூரிக் காலம் முதலே இதழ்களுக்கு எழுதினார். முதல் கட்டுரை, ‘அத்தா என்ற தமிழ்ச்சொல்', 1954-ல், ’அறமுரசு’ இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். முதல் நூல், பீர் முகம்மது அப்பாவின் வாழ்க்கை வரலாறான ’தென்காசி தத்துவப் போதகர்’, 1993-ல் வெளியானது. வ.உ. சிதம்பரம் பிள்ளை பற்றி விரிவாக ஆராய்ந்து 25 நூல்களை எழுதினார். ஆஷ் கொலையில் வ.உ.சி.க்குப் பங்கிருக்கிறது என்பதான கருத்தைத் தன் ஆய்வில் முன் வைத்தார். ’துலுக்க நாச்சியார் வரலாறு’ என்பது செ.திவானின் 150-வது நூல்.
வரலாற்று நூல்கள் மட்டுமல்லாமல், சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை, பசு வதை பற்றியும் நூல்கள் எழுதினார். 1500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.
பதிப்புலகம்
செ. திவான், தனது நூல்களை வெளியிடுவதற்காக ‘சுகைனா பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார். அச்சில் இல்லாத அரிய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தார்.
நூலகம்
செ. திவான், தனது இல்லத்தில், ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ள நூலகத்தைப் பராமரிக்கிறார்.
விருதுகள்
- சதக்கத்துல்லா அப்பா விருது
- உமறுப்புலவர் விருது
- தமிழ்மாமணி விருது
- பெரியார் விருது
- காயிதேமில்லத் பிறை விருது
- கவிக்கோ விருது
- வரலாற்றியல் அறிஞர் விருது
- உ.உ.சி. விருது
- எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது
நாட்டுடைமை
தமிழக அரசு, செ. திவானின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. உரிமைத் தொகையாக ரூ. பதினைந்து லட்சத்தை செ. திவானிடம் வழங்கியது.
இலக்கிய இடம்
செ. திவான் நெல்லை வரலாறு சார்ந்த புதிய தரவுகளை முன்வைத்தவர், தமிழ் இஸ்லாமிய வரலாற்றின் அறியப்படாத பக்கங்களை எழுதியவர் என்னும் நிலையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளராக மதிக்கப்படுகிறார்.
நூல்கள்
- தென்காசி தத்துவப் போதகர்
- சுதந்திரச் சிங்கங்கள்
- பாரசீக மன்னன் நாதிர்ஷா
- பாரத விடுதலைப்போரில் பகதூர்ஷா
- துலக்க நாச்சியார்
- முகலாய மன்னர்கள்
- இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்
- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
- மாலிக்காபூர்
- மருதநாயகம் கான்சாகிப்
- திப்பு சுல்தான்-அவதூறுகளும் பதில்களும்
- வேலூர் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள்
- காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்
- இசை முரசு அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனீபா
- செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்
- ராணி ரஸியா
- திருக்குர்ஆன் தமிழில் விளக்கம் தந்த அறிஞர்கள்
- நமி பெருமானரின் நாற்பது பொன்மொழிகள்
- தக்கலை மீர் முகமது (ஒலி) ஞானப் பாடல்களும் சரிதையும்
- இந்திய சுதந்திரப் போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
- தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள்
- வரச்சொன்னார்கள்... வந்தார்கள்... வென்றார்கள்
- தெற்கில் ஒலித்த தீன் குரல்
- வேதங்கள் விலக்கிடும் விக்கிரக வழிபாடு
- செய்குத்தம்பிப் பாவலரின் ஷம்சுத்தாசீன் கோவை
- இறைநேசர் செல்வர் சிந்தா செஷய்கு மதார் ஷா (ஓலி)
- இறைவனின் திருநாமங்கள்
- இறுதித் திரு நபியும் இயற்கையின் அற்புதங்களும்
- மாற்றார் மதித்திடும் மா நபி (ஸல்)
- ஆணைய வேண்டிய அயோத்தி 'தீ'
- மா நபி (ஸல்) காட்டிய மனித உரிமைகள்
- விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள்
- இந்திய சுதந்திரப் பெரும் போரில் இஸ்லாமியர்கள்
- இந்து முஸலிம் ஒற்றுமை
- தமிழகத்தில் கிலாஃபத் இயக்கம்
- அலாவுதீன் கில்ஜி
- உமறுப்புலவர் விருதும் உள்ளத்து உணர்வும்
- இந்திய சுதந்திர போரில் வைக்கம் அப்துல் காதர்
- முற்றுபெறாத சுயசரிதை
- தாயாய் தந்தையாய் தலைவராய்
- இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்
- ஜாலியன் வாலாபாக்
- கி. ரா. கடிதங்கள்
- மதுரா விஜயம்
- இராமலிங்க வள்ளலாரும் செய்கு தம்பிப் பாவலரும்
- தி.க.சி. என்றொரு மானுடன்
- கச்சத்தீவு
- மலபார் புரட்சி
- கம்பனில் சைவம்
- வாலேஸ்வரன்
- வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள்
- சுப்பிரமணியசிவா சிறைவாசம்
- பரிசு பெறாத பாரதி பாடல்
- வ.உ.சி.யும் வாலேஸ்வரனும்
- வ.உ.சி.யும் சைவ சமயமும்
- வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்
- இலக்கிய புரட்சியாளர் வ.உ.சி.யின் சிவஞானபோத உரை
- வ.உ.சி.யின் சுயசரிதை
- வ.உ.சி.யும் திருக்குறளும்
- இலக்கியப் புரட்சியாளர் வ.உ.சி
- வ.உ.சி.யின் உயில்
- வ.உ.சி, புகழ் பாடிய முன்னோடிகள்
- வ.உ.சி.யின் நூற்கோவை
- வ.உ.சி.யும் பரலி சு நெல்லையப்பரும்
- வ.உ.சி.யின் வள்ளியம்மை சரித்திரம்
- வ.உ.சி.யின் துன்பத்தின் கற்பனை
- வ.உ.சி.யும் பெரியாரும்
- வ.உ.சி.யும் தொல்காப்பியரும்
- வ.உ.சி பாடல்கள்
- வ.உ.சி கண்ட பாரதி
- வ.உ.சி.யின் அரசியல் பெருஞ் சொல்
- வ.உ.சி.யின் அழகும் ஆரோக்கியமும்
- விடுதலைப் போரில் இந்தியர்கள்
- ஆரிய மாயை அகல
- தியாக நெருப்பில் வைகோ
- வியத்தகு சாதனையாளர் வைகோ
- வைகோ... வெற்றிப்பாதை.... வீரச்சங்கொலி
- தமிழர் தலைவர் வைகோ
- வாகை சூடிவரும் வைகோ
- கலைஞரை வென்ற வைகோ
- வைகோவின் பொன்மொழிகள்
- சேது சமுத்திரத் திட்ட நாயகன் வைகோ
- சங்கொலி
- பம்பரம்
- சிந்தனைக்கு
- விடுதலை போரில் விஸ்வகர்மாக்கள்
- பாரதியும் காங்கிரசும்
- ஸடெர்லைட்டை விரட்டுவோம்
- உண்மையின் சவுக்கடி
- கூடங்குளம் அணுஉலையை மூடு
- குடை
- புரட்சி
- ஆன்மீகச் சிந்தனை
- கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
- அண்ணாவின் மறு பக்கம்
- பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி
- விடுதலையின் நிறம் பச்சை
- ஆரியப் பாதையில் பசுவதை
- கட்டபொம்மனும் கலெக்டர் ஜாக்சனும்
- ஆலிப்புலவர்
- திராவிட இயக்கம்-வரலாற்றுக் குறிப்புகள்
- சுயமரியாதை சூரர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி
- புரட்சிக் கனலில் பொசுங்கும் துரோகம்
- சிந்தனைச் சிற்பி சி.பி சிற்றரசு
- அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்
- கழகத்தின் காவலர் கே.வி.கே. சாமி
- அஞ்சாநெஞ்சன் பட்டுகோட்டை அழகிரிசாமி
- கே.வி.கே. சாமி கட்டுரைகள்
- நாடோடி மன்னன்
- விடுதலை வேள்வியில் விஸ்வநாததாஸ்
- கச்சதீவு யாருக்குச் சொந்தம்?
- பாரதி செல்லம்மாள் உயில்
- தேவநேயப் பாவணரின் கிறிஸ்த்துவக் கீர்த்தனம்
- தேவநேயப் பாவணரின் துவாரகை மன்னன்
- இந்திய சுந்திரப் போரில் விஸ்வகர்மாக்கள்
- மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மகிமை
- வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராசர்
- பரிசு பெறாத பாரதி பாடல்
- அறிஞர் அண்ணா
- கர்மவீரர் காமராசர்
- வல்லிக்கண்ணன் கடிதங்கள்
- சுதந்திர சங்கநாதம்
- கம்பனில் அனுமனும் சிவனும்
- வரலாற்றுப் பாதையில் பசு வதை
- மக்கள் திலகமும் மக்கள் தலைவரும்
- வரலாற்று எழுத்தியல்
உசாத்துணை
- செ. திவான் நேர்காணல்: யூட்யூப் தளம்
- செ. திவான் நேர்காணல் பகுதி-1: சமரசம் இதழ்
- செ. திவான் நேர்காணல் பகுதி-2: சமரசம் இதழ்
- செ. திவான் நேர்காணல்: விகடன்
- செ.திவான் கட்டுரை: புதிய விடியல் தளம்
- செ. திவான் கட்டுரை: தினமலர்
- செ. திவான் நூல்கள் நாட்டுடைமைச் செய்தி: தினமணி இதழ்
- விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் நூல்: தமிழ் இணைய மின்னூலகம்
- லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர்: இந்து தமிழ் திசை கட்டுரை
- வ.உ.சி.யின் உயில்: செ. திவான் கட்டுரை
- செ. திவான் நூல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-May-2023, 19:11:28 IST