செய்குத்தம்பி பாவலர்
- பாவலர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாவலர் (பெயர் பட்டியல்)
கா.ப. செய்குத்தம்பி பாவலர்(ஜூலை 31, 1874 - பிப்ரவரி 13, 1950) தமிழ்ப் புலவர். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர். கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி போன்ற சிற்றிலக்கிய நூல்களையும், எட்டுக் கிரிமினல் கேஸ், வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ் போன்ற உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியச் சொற்பொழிவாளர். சதாவதானி என்று பட்டம் பெற்றவர். வள்ளலார் பாடல்கள் பற்றிய அருட்பா மருட்பா விவாதத்தில் பங்குகொண்டவர். சென்னை விக்டோரியா ஹாலில் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து சதாவதானி பட்டம் பெற்றார். சென்னையில் நடந்த அருட்பா - மருட்பா விவாதத்தில் பங்கேற்று வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நிறுவினார் (பார்க்க: அருட்பா மருட்பா விவாதம்)
பிறப்பு, கல்வி
ஷேக் ,ஷேய்க் என்னும் சொல்லின் மருவு செய்கு. செய்குத்தம்பி பாவலர் ஜூலை 31,1874-ல் நாஞ்சில் நாட்டில் கோட்டாறு அருகில் (தற்போதைய நாகர்கோவில்) உள்ள இடலாக்குடி அருகே இளங்கடை என்ற சிற்றூரில் பக்கீர்மீரான் - ஆமினா தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். நெசவுத்தொழில் செய்த குடும்பம் அவருடையது. செய்குத்தம்பி பாவலரின் அம்மா ஆமினா 'மெய்ஞானத் திருப்பாடல் திரட்டு’ என்ற ஞானப்பாடல்களை எழுதிய ஞானியார் சாகிபு வழியில் வந்தவர். (பார்க்க கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா)
பாவலர் வீட்டிலேயே திருக்குர்ஆன் கற்றுத் தேர்ந்தார். எட்டாவது வயதில் இளங்கடை அரசு ஆதாரப் பள்ளிக்கூடத்தில் சிறுவர் வகுப்பில் சேர்க்கப்பட்டார். பாவலர் ஓராண்டு மட்டுமே பள்ளியில் கல்வி பயின்றார். சங்கரநாராயண உபாத்தியாயர் மூலம் செய்குத்தம்பி பாவலர் தமிழிலக்கணம் இலக்கியம் ஆகியவற்றை கற்றார். பள்ளியில் மலையாள மொழியில் தேர்ச்சி பெற்றார். பள்ளிக்கல்வி வழியாக சம்ஸ்கிருத அறிமுகமும் இருந்தது.கோட்டாறு நீலகண்ட ஆச்சாரி மகன் கணபதி ஆச்சாரியிடம் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தார்.
தனி வாழ்க்கை
செய்குத்தம்பி பாவலர் தொடக்கத்தில் நெசவுத்தொழில் செய்துவந்தார். பின்னர் அச்சகத்தில் பிழைதிருத்துபவராக பணியாற்றினார். புகழ்பெற்றபின் சொற்பொழிவாளராக வாழ்ந்தார்.
செய்குத்தம்பி பாவலர் 1907-ம் ஆண்டு முகம்மது பாத்திமா பீவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள்.
அவதானக்கலை
பாவலர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பாவலரைச் சந்தித்தார். அப்போது பாவலர் 'விறலி விடு தூது’ என்ற நூலில் இடம் பெறும் பாடலைக் கூறி அவதானம் (அவதானம் என்றால் நினைவாற்றலைக் குறிக்கும். சதாவதானம் என்றால் நூறு செயல்களை நினைவில் வைத்திருத்தல் எனப் பொருள்) ஒரு புரட்டுக்கலை என்றார். முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் அவரிடம் அவதானக் கலையை நிகழ்த்திக் காட்டினார். மறுநாளும் அவர் பாவலரிடம் அவதானக் கலையை நிகழ்த்திக் காட்டினார். அது பாவலருக்கு அவதானக் கலையின் மேல் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
சோடசதாவதானி
நாகர்கோவிலில் 1905-ல் பாவலர் சோடசதாவதானம் (பதினாறு அவதானம்) என்னும் கலையை நிகழ்த்தினார். அந்நிகழ்விற்கு ஆற்றாங்கோயாத்தங்கள் தலையமையேற்றார். இதில் பாவலர் இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, தலைவரோடு உரையாடல், இலக்கியம், இலக்கணம், இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்புவித்தல், கண்டப்பத்திரிக்கை, கவிபாடல், கண்டத் தொகை, கிழமை கூறுதல், நூறு நிரப்புதல், சுவைப்புலன் அறிதல், ஒலி வேறுபாடு உணர்தல், நெல் எறிதல், கல் எறிதல், சீட்டாடல் எனப் பதினாறு செயல்களை நினைவுகூர்ந்தார்.
சதாவதானி
மார்ச் 10, 1907-ல் செய்குதம்பி பாவலர் அவர் நண்பர் இட்டா பார்த்தசாரதியும், பிற நண்பர்களும் கோரியதற்கு இணங்க சென்னை விக்டோரியா மண்டபத்தில் சதாவதானம் என்னும் கலையை நிகழ்த்தினார். இந்த அவைக்கு கண்ணபிரான் முதலியார் தலைமையேற்றார். கம்பராமாயண உரையாசிரியர் மகாவித்வான் புலவர் கா. நமசிவாய முதலியார், திரு.வி.க, டி.கே.சி, பத்திரிக்கை நிருபர்கள், பொது மக்கள் எனப் பலர் கூடியிருந்தனர். கோட்டாற்றில் நிகழ்ந்த பதினாறு கலைவகைகளோடு ஒலி எண்ணம், தொகை கூறல், உடுகூறல், நாள் கூறல், திங்கள் கூறல், ஆண்டு கூறல், வயது கூறல், நினைத்த எண் கூறல், பதினைந்து நாயும் புலியும் விளையாடல் என்ற ஒன்பதும் சேர்த்து அவதானத் தொகையில் இருபத்தைந்தும் வகையால் நூறுமாக சதாவதானம் செய்தார். இந்நிகழ்வின் முடிவில் சதாவதானி, மகாமதி என்ற பட்டங்களைப் பெற்றார்.
அரசியல்
மகாத்மா காந்தியின் மேல் ஈர்ப்பு கொண்டு இந்திய தேசியக் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். சுதேசிக் கொள்கையில் நாட்டங்கொண்டு கதராடை அணியத் தொடங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய இயக்கம் வளரக் காரணமாக அமைந்தார். 1937-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார். காங்கிரஸில் எம்.இ. நாயுடு அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
மதுவிலக்கு
சுதந்திர இந்தியாவில் நபிகள் நாயகமும், காந்தியும் முன்வைத்த மதுவிலக்குக்காக மேடைகளில் பேசினார். மதுவிலக்கு தொடர்பாக இசைப்பாடல்கள் இயற்றினார்.
இதழியல்
இட்டா பார்த்தசாரதியின் ஸ்ரீபத்பநாப விலாச அச்சகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த போது பாவலர் யதார்த்தவாதி (சமூக பணிக்கு), இஸ்லாமியமித்திரன் (சமயப் பணிக்கு) என இரண்டு இதழ்களை நடத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
செய்குத்தம்பி பாவலர் தன் இருபத்தோராம் வயதில் தாய் வழி முன்னோரான ஞானியார் சாகிப்பின் மெய்ஞானத்திரட்டு நூலை ஞானியார் சாகிபின் வழித்தோன்றலான செய்யுது தாகா பதிப்பிக்க எண்ணியபோது, வள்ளல் ஷம்சுத் தாசீன் பொருளுதவியோடு பதிப்ப்புப்பணியில் உதவிசெய்யும் பொருட்டு சென்னை சென்றார்.
சென்னையில் உள்ள சிறந்த அச்சுக் கூடமான ஸ்ரீபத்பநாப விலாச அச்சகத்தை இட்டா பார்த்தசாரதிநாயுடு நடத்தி வந்தார். சென்னை வந்த பாவலர் இட்டா பார்த்தசாரதியுடன் இணைந்து பதிப்பகப் பணியில் ஈடுபட்டார். பாவலரின் தமிழ்ப் புலமையைக் கண்ட இட்டா பார்த்தசாரதி அந்நூல் பணி முடிந்த பின்பும் சென்னையிலேயே தங்கும் படி கேட்டுக் கொண்டார். இட்டா பார்த்தசாரதி பாவலருக்கு அவர் பதிப்பகத்திலேயே வேலை கொடுத்து தங்கும் இடமும், ஊதியமும் வழங்கினார்.
இக்காலக்கட்டத்தில் சீறாப்புராணத்திற்கு முழுப் பொழிப்புரை இரண்டு பாகமாக எழுதி பாவலர் வெளியிட்டார். நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம், சீறா நாடகம் போன்ற இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
நூல்கள்
கோவை நூல்கள்
பாவலர் நான்கு கோவை நூலைகளைப் படைத்தார். அவற்றுள் அச்சிடப்பட்ட சம்சுத்தாசீன் கோவை இன்று கிடைக்கவில்லை. அழகப்பக் கோவை முழுதாகக் கிடைக்கவில்லை. (184 பாடல்கள் கைப்பிரதியாக உள்ளன. கட்டளைக் கலித்துறையில் அமைந்த காப்புச் செய்யுள் ஒன்றும் உள்ளது.) பாவலர் அழகப்பருக்கு எழுதிய ஐந்து பாடல்கள் கொண்ட சீட்டுக்கவியில் அந்நூல் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அதிலிருந்து நூலின் பெயர் அழகப்பக் கோவை 425 பாடல்களை உள்ளடக்கியது என அறிய முடிகிறது.
சசிஉத்தமக் கோவை திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் மீது பாடப்பட்ட நூல். உத்தமபாளையம் ஜனாப் கா.சீ. முகம்மது இஸ்மாயில் மீது பாடப்பட்டது முகம்மது இஸ்மாயில் கோவை. கம்பம் பீர்முகம்மதுப் பாவலருக்குச் செய்குத்தம்பி எழுதிய கடிதத்தில் இக்கோவை நூல் பற்றியும் அதில் 425 பாடல்கள் இடம்பெற்றியிருப்பது பற்றியும் உள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
சம்சுத்தாசீன் கோவை மட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பெருவள்ளல் சம்சுத்தாசீன். 420 பாடல்களைக் கொண்ட இந்நூல் 1919-ம் ஆண்டு சென்னை பத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் உரையுடன் அச்சிடப்பட்டது. மேலப்பாளையம் வித்வான் மல்கான் அலிசாகிப்பின் பதவுரையும் உள்ளடக்கியது. களவியல், வரைவியல், கற்பியல் என மூன்று இயல்களைக் கொண்டது இந்நூல்.
அந்தாதி நூல்கள்
திருநாகூர்த்திரிபந்தாதி, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி என இரண்டு அந்தாதி நூல்களை இயற்றியுள்ளார். இரண்டு நூல்களும் ஒரே தொகுதியாக 1900-ம் ஆண்டு சென்னை பத்பநாப விலாச அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் தொடக்கத்தில் பாவலரின் ஆசிரியரான சங்கரநாராயணர் செய்குத்தம்பி பாவலரின் அந்தாதி நூலைத் திறனாய்வு செய்யும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதி வெண்பா
மக்கள் வாழ்வு தூய்மைபெற்று இம்மை, மறுமை பயனை அடைய வழி செய்யும் பொது நீதிகளை வெண்பாவில் பாடிய நூல் நீதி வெண்பா. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதில் எட்டு வெண்பாக்கள் மட்டும் கிடைத்துள்ளன.
தனிப்பாடல்கள்
அவதானப் பாடல்கள், பாராட்டுப் பாடல்கள், சாற்றுக் கவிகள், சீட்டுக் கவிகள், புகழ்ப்பாக்கள், வாழ்த்துப் பாக்கள், அறிவுரைப்பாக்கள், கையறுநிலைப் பாக்கள் என தனிப்பாடல்கள் பல எழுதியுள்ளார்.
அவதானப் பாடல்கள்
கோட்டாற்றில் 1906-ம் ஆண்டிலும், சென்னையில் 1907-ம் ஆண்டிலும் நிகழ்ந்த அவதான நிகழ்ச்சியின் போது பாடப்பட்ட பாடல்கள். இதில் குறள் வெண்பா ஒன்று, கலிவிருத்தம் ஒன்று, கட்டளைக் கலித்துறை இரண்டு, நேரிசை வெண்பா மூன்றுடன் கடவுள் வாழ்த்துப் பாடலும் அடங்கும்.
சீட்டுக்கவிகள்
தமிழில் கடிதங்களே சீட்டுக்கவிகள் எனப்படுகின்றன. பழந்தமிழ் புலவர்கள் தம் விருப்பங்களையும், தேவைகளையும் புரவலர்களுக்குத் தெரிவித்து எழுதுபவை. பாவலர் புதிய வீடு சென்ற போது தன் நண்பர் சிவதாணுப்பிள்ளைக்கு சீட்டுக் கவி விடுத்தார்.
நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
1976-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாவலரின் படைப்பு நபிகள் நாயக மான்மிய மஞ்சரி. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வழிக்காட்டல்களின் தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரோவழிமிக்கு வந்த சொச்சகக் கலிப்பாவில் 102 பாடல்களைக் கொண்டது. சென்னையில் இருந்து வெளிவந்த 'முஸ்லிம்’ நாளேட்டில் வெள்ளிக்கிழமை தோறும் இந்நூலின் பாடல்கள் வெளிவந்தன. வள்ளல் கா.சீ. முகம்மது இஸ்மாயில் (உத்தமபாளையம்) இந்நூலை வெளியிட்டார். நாஞ்சில் ஆ.ஆரிது பதிப்பித்தார்.
எட்டுக் கிரிமினல் கேஸ்
பாவலரின் எட்டுக் கிரிமினல் கேஸ் என்னும் உரைநடை நூல். இந்நூல் 1907-ம் ஆண்டு 'எல்லார்க்கும் பார்க்கத்தகுந்த எட்டுக் கிரிமினல் கேஸ்’ என்ற தலைப்பில் கோல்டன் அச்சு இயந்திர சாவை டி. கோபால் நாயக்கர் பதிப்பித்தார். பின் 2015-ல் விஜயா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்தது.
இந்நூலில் குற்றவியல் வழக்குகள் என அரிச்சந்திர சரித்திரம், சூர்ப்பநகை பங்கம், வாலி வதம், இலங்காதகனம், அரம்பைப் பலவந்தப் புணர்ச்சி, கோபிகா ஸ்தீரிகள் வஸ்திராபரணம், திரௌபதை வஸ்திராபரணம், கீசகன் பலவந்தம் இடம் பெற்றுள்ளது. இந்நூல் பாவலர் வாழ்ந்த தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது. வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிறாசு(cross) வாதி வக்கீல் றீக்கிறாசு(re cross), ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை என அமையப் பெற்றது இந்நூல். ( பார்க்க: எட்டுக் கிரிமினல் கேஸ்)
சொற்பொழிவாளர்
செய்குத்தம்பி பாவலர் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக அறியப்பட்டார். இஸ்லாமிய மெய்யியல் சார்ந்தும் தமிழிலக்கியம் சார்ந்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். கம்பராமாயணத்தில் விரிவான பயிற்சி இருந்த செய்குத்தம்பிப் பாவலர் தென்தமிழ்நாட்டில் பல ஊர்களில் கம்பராமாயண உரைகள் ஆற்றினார். சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளும் ஆற்றிவந்தார்.
வழக்குமன்றங்கள்
பட்டிமன்றம் என பின்னாளில் அறியப்பட்ட வழக்குமன்றங்களில் ஒரு தலைப்பை வெட்டியும் ஒட்டியும் பேசுவதில் செய்குத்தம்பி பாவலர் புகழ்பெற்றிருந்தார். கம்பராமாயண தலைப்புகள் சார்ந்தும் புராணச்செய்திகள் சார்ந்தும் இந்த வழக்குமன்றங்கள் நிகழ்ந்தன. இவ்வழக்கு மன்றங்களை ஒட்டியே பின்னாளில் எட்டு கிரிமினல் கேஸ் என்னும் நூலை எழுதினார்
அருட்பா மருட்பா விவாதம் இராமலிங்க வள்ளலார், ஆறுமுக நாவலர் இருவருக்கும் இடையேயான அருட்பா மருட்பா விவாதம் பிரபலமானது (பார்க்க: அருட்பா மருட்பா விவாதம்). இருவரின் மறைவிற்கு பிறகும் அவ்விவாதம் அவர்களின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தது. ஆறுமுக நாவலரின் மாணவர் கதிரைவேற் பிள்ளை தன் ஆசிரியரின் மறைவிற்கு பின் ஆசிரியர் கருத்தை நிலைநாட்ட நூல்கள், அறிக்கைகள், மேடைப் பேச்சுகள் மூலம் சொற்போரை நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவராகிய திரு.வி.க கதிரைவேற் பிள்ளைக்கு உதவி செய்தார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரு அணிகளும் மாறி மாறி சொற்போர் நிகழ்த்தினர். பாவலர் இதனைக் கேட்டு இவ்விவாதத்தில் பங்கு கொள்ள விரும்பினார். வள்ளலார் பாடல்களை மருட்பா எனக் கூறிய கதிரைவேற்பிள்ளையை மறைமலையடிகள் விவாதத்திற்கு அழைத்தார். செப்டெம்பர் 3, 1903-ல் சென்னையில் நிகழ்ந்த விவாதத்தில் மறைமலையடிகளின் சிறந்த உரைக்கு கதிரைவேற்பிள்ளையால் பதில் சொல்லமுடியவில்லை. மீண்டும் செப்டெம்பர் 27, 1903-லும் அக்டோபர் 18, 1903-லும் மறைமலை அடிகள் கதிரைவேற்பிள்ளையை பொதுவிவாதத்திற்கு அழைத்தார். வருவதாக ஒப்புக்கொண்ட கதிரைவேற் பிள்ளை எங்கும் வரவில்லை. மறைமலை அடிகள் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நீண்ட உரைகள் ஆற்றி அவையோரை நிறைவுறச் செய்தார்.
செய்குத்தம்பி பாவலர் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என பொது விவாதங்களில் பேசி நிறுவினார். அவற்றுக்கு எதிர்ப்புரைகள் எழவில்லை. பாவலர் பொது மேடைகளில் கதிரைவேற் பிள்ளையின் 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு’ நூலின் தலைப்பே பிழையானது என மறுத்தார். வள்ளலாரின் அருட்பா பாடல்களை பலவற்றை பொது விவாதங்களில் விளக்கம் தந்து மறைமலையடிகள் முடித்து வைத்த விவாதத்தை பொது மேடைகளில் பேசி நிறுவினார்.
இதன் காரணமாக காஞ்சிபுரச் சான்றோர், அருட்பா மருட்பாப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போது பாவலருக்கு காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலில் பூரண கும்ப மரியாதையோடு தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் என்னும் பட்டத்தை வழங்கினர்.
மறைவு
பிப்ரவரி 18 ,1950 அன்று தன் 76-வது வயதில் இயற்கை எய்தினார்.
மாணவர்கள்
செய்குத்தம்பி பாவலரின் மாணவர்கள் பலர் தமிழறிஞர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களில் தெங்கம்புதூர் தா சாஸ்தாங்குட்டிப் பிள்ளை முதன்மையானவர்
பட்டங்கள்
- சதாவதானி, மகாமதி - சதாவதான அரங்கச் சான்றோர், விக்டோரியா ஹால் சென்னை (1907). (தலைமை: மகாவித்வான் கண்ணப்ப முதலியார்)
- தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் - காஞ்சிபுரச் சான்றோர் - அருட்பா மருட்பாப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போது காஞ்சி வரதராசப் பெருமாள் கோவில் பூரண கும்ப மரியாதையோடு வழங்கப்பட்டது.
- கலைக்கடல் - தொண்டி நகரச் சான்றோர்.
- அல்லாமா (டாக்டர்) - திண்டுக்கல் நகரச் சான்றோர்.
- தமிழ்ப்பெரும் புலவர் - நாஞ்சில் நாட்டவர்
- பாவலர் - சென்னை சான்றோர் வட்டம்
நாட்டுடைமை
செய்குத்தம்பிப் பாவலரின் படைப்புகள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
வாழ்க்கை வரலாறு
- சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - மு.அப்துல் கறீம்
- செந்தமிழ் வளர்த்த செய்குத்தம்பி - சி.குமரேச பிள்ளை
நினைவிடம்
நாகர்கோயில் இடலாக்குடியில் செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மணிமண்டபம் ஏப்ரல் 20, 1984-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1987-ல் திறந்துவைக்கப்பட்டது.
நூல்கள்
அச்சேறியவை
உரைநடை
- எட்டுக் கிரிமினல் கேஸ்
- தேவலோகப் பழிக்குற்ற வழக்கு
- வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்
- சீறா நாடகம்
- சீறாப்புராணப் பொழிப்புரை
செய்யுள்
- நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம்
- கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ்
- திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி
- நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
- கல்வத்து நாயக இன்னிசைப் பாமாலை
- சம்சுத்தாசீன் கோவை
- நாகூர்த் திரிபந்தாதி
அச்சேறாதவை
- நாகைக் கோவை
- அழகப்பக் கோவை
- உத்தமபாளையம் முகம்மது இஸ்மாயில் கோவை
- சசிவோத்தமன் கோவை
- நீதி வெண்பா
- தனிப்பாடல்கள்
உசாத்துணை
- இந்திய இலக்கியச் சிற்பிகள் - சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (மு. அப்துல்கறீம்)
- எட்டுக் கிரிமினல் கேஸ் - விஜயா பதிப்பகம் (நாஞ்சில் நாடன் முன்னுரை)
வெளி இணைப்புகள்
- சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - கீற்று.காம்
- சதாவதானி - முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்
- அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா? - சொல்வனம்
- செய்குத்தம்பி பாவலர் 10 - தமிழ் இந்து
- சேசு: செய்குத்தம்பி பாவலர்
- பசுபதிவுகள்: 793
- மகாமதி பாவலர் இணையநூலகம்
காணொளி
- சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு தினம்
- சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
- சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறிந்திராத தகவல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Sep-2022, 23:22:50 IST