கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
- சாகிபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாகிபு (பெயர் பட்டியல்)
- அப்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பா (பெயர் பட்டியல்)
- ஞானியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞானியார் (பெயர் பட்டியல்)
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா (ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்) (1753 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. இஸ்லாமிய சூஃபி ஞானப்பாடல்களைத் தமிழில் இயற்றியவர். தமிழ் சூஃபி கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
பிறப்பு, இளமை
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு (தற்போதைய நாகர்கோவில்) அருகில் உள்ள இளங்கடை என்னும் சிற்றூரில் ஷெய்கு அபூபக்கர் - செய்யது மீரான் பீவி தம்பதியரின் புதல்வனாக ஞானியார் சாகிபு அப்பா (ஹிஜிரி 1167, பொ.யு. 1753 ) பிறந்தார். ஞானியார் அப்பாவின் இயற்பெயர் ஷெய்கு முகியிதீன் மலுக்கு முதலியார். இரண்டு மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். சதாவதானி கா.ப. செய்குத்தம்பி பாவலர் ஞானியார் அப்பாவின் பெண்வழிப் பேரன்.
ஞானம் பெறுதல்
ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் பதினான்கு வயது வரை இறை சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் (பொ.யு 9-ம் நூற்றாண்டு) பாரசீகத்தில் தோன்றிய சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான மவுலானா சையிது தமீம் (குதுபுஸ்ஸமான் மெளலானா செய்யிது தாமீம் இபுனு செய்யிது ஜமாலுல் மிஹுபரிய்யி) அவர்கள் அன்றைய திருவிதாங்கூருக்கு வந்து, கோட்டாற்று பாவா காசிம் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில்(வேம்படி பள்ளி) தங்கியிருந்தபோது ஞானியார் அப்பா சென்று அவரிடம் ஞானநெறிகளைக் கற்று தீட்சை பெற்றார். பதினாறு வயது வரை தியான யோகங்களில் ஈடுபட்டு வந்தார். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹியை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றார் என அவரைப்பற்றிய கதைகள் சொல்கின்றன.
இறைப்பணி
ஞானியார் அப்பா இறை பணிகளுக்காக கமுதிக்குச் சென்றபோது முதன்முதலாக மெய்ஞானத் திருப்பாடல்களைப் பாடத் துவங்கினார். ஞானியார் சாகிப்பிற்கு கோட்டாறு, திருவிதாங்கூர், கமுதி, பழனி, தேரூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏர்வாடி, மேலப்பாளையம், ஆளூர், தக்கலை, திட்டுவளை, தோவாளை, திருவனந்தபுரம், பறக்கை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் சீடர்கள் இருந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது புகாரி தங்கள், காயல்பட்டினம் உமறு ஒலியுல்லாஹ் போன்ற இறை நேச செல்வர்கள் ஞானியார் அப்பா அவர்களிடம் உரையாடி ஞானம் பெற்றுள்ளனர் எனக் குறிப்புகள் உள்ளன.
ஞானியார் அவர்கள் ஜமாத்துல் அவ்வல் மாதம் முதல் நாள் தோறும் தங்களின் சீடர்களான பரிவாரத்தோடு கூடி மவ்லூது, பாத்திஹா, திக்று, சலவாத்து, அவுறாத்து முதலிய வணக்கங்கள் செய்து 18-ம் நாளன்று கந்தூரி கொடுத்து வந்தார்.நற்போதனை செய்தும், அற்புத செயல்கள் பல புரிந்தும் மக்களை நல்வழிபடுத்தினார் என குறிப்பிடப்படுகிறது.[1]
ஞானியர் அப்பாவின் முரீது வழியைப் பின்பற்றுபவர்களை ஞானியர் வழியினர் என்று அழைக்கின்றனர். ஞானியர் மரபின் அனைத்து நிகழ்வுகளும் ’ஹாமீம்’ என்னும் முத்திரைச் சொல்லுடன் ஆரம்பிக்கின்றன[1].
தொன்மங்கள்
ஞானியார் அப்பா கல்வி பயிலாதவர் என்றும், அவர் மௌலானா செய்யிது தாமீம் அவர்களைச் சந்தித்தபோது அவர் சுரியானி மொழியில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் பிரதி ஒன்றை கொடுத்து வாசிக்கும்படி அதட்டியதாகவும் உடனே அவர் குர்ஆனை தடையின்றி வாசித்ததாகவும் கதைகள் உள்ளன
ஞானியார் அப்பா கமுதிக்குச் சென்று அங்கே தீவினைகள் புரிந்து வந்த இருவரை நல்வழிப்படுத்தி தீட்சை அளித்தார். மேலப்பாளையம் எனும் ஊரில் அமைந்திருக்கும் கலிமாக்குளக்கரையில் தங்கியிருந்து சடை அப்துல் காதிறு என்பாருக்கு தீட்சை வழங்கினார். (ஞானியார் அப்பா அவர்கள் வந்து சென்றதை நினைவுகூரும் விதமாக மேற்கண்ட இடத்தில் காலஞ் சென்ற V.S.T. சம்சு தாஸீன் (பங்களா அப்பா) அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டுவித்த ஞானியார் அப்பா தைக்கா உள்ளது)
தன் மறைவை தன் தம்பிக்கு முன்னரே அறிவித்த ஞானியார் ’காயல்பட்டினம் ஹாஜி உமறு லெப்பை ஆலிம் சாகிபு அவர்கள் இன்னும் சில நாளில் இங்கு வருவார்கள்.என் நீத்தார் தொழுகையை அவர் நடத்தவேண்டும்’ என்று அறிவித்தார். தன் இறப்பு நிகழும்போது ஓர் ஒளி தோன்றி மண்ணில் படியும், அந்த மண்ணை வாங்கி அங்கே எனக்கு தர்கா கட்டு என்று ஆணையிட்டார். கோட்டாறில் அவ்வாறு ஒளி சுட்டிக்காட்டிய இடத்தில் தர்கா அமைக்கப்பட்டது.
மறைவு
ஞானியார் தன் தம்பியாகிய ஷெய்கு உதுமான் ஆலிம் என்னும் இளைய ஞானியாரை தாம் நடத்தி வந்த ஹஜரத் மன்ஸுர் ஹல்லாஜ் (ரஹ்) ஞானமரபின் அடுத்த பட்டத்திற்குரியவராக நியமித்தார்.
ஞானியார் அப்பா ஹிஜ்ரி 1209-ம் வருடம் (பொ.யு. 1794 ) ஜமாத்துல் அவ்வல் மாதம் 14 ,வெள்ளிக்கிழமை இரவு உயிர் நீத்தார். ஞானியார் சாகிபின் உடல் கோட்டாறில் அடக்கம் செய்யப்பட்டு தர்கா கட்டப்பட்டது.
ஞானப் பாடல்கள்
ஷெய்கு ஞானியார் சாஹிப் ஞான தோத்திரம், ஞான காரணம், ஞான தேவாரம், ஞான ஏகதேசம், ஞான ஆனந்தம், ஞான அனுபவ விளக்கம், ஞான அந்தாதி, ஞானக் கும்மி, ஞான வேதாட்சர வருக்கம், ஞானத் திருப்புகழ், ஞானத் திருநிதானம், ஞானக் குருவடி விளக்கம், ஞான அம்மானை, ஞான கீதாமிர்தம், ஞானப் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் படைத்துள்ளார். ஞானியார் அப்பாவின் பக்திப் பாடல்கள் அனைத்தும் "மெய்ஞானத் திருப்பாடற்றிரட்டு" என்ற பெயரில் தொகுக்கப்பட்டு நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மெய்ஞானத் திருப்பாடற்றிரட்டு பாடல்கள் விருத்தப்பா, வெண்பா, கலிப்பா, தாழிசை, சொச்சகம், பிள்ளைத்தமிழ், கும்மி, சிந்து போன்ற பா வகைகளில் பாடப்பட்டுள்ளன.
தர்கா
ஷெய்கு ஞானியார் சாஹிப்பின் மக்பரா (சமாதி) கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு, தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் உள்ளது. ஞானியார் அப்பா தர்கா பள்ளிகளில் ஞானியார் பாடல் பாராயணம், குரு மகான் துதி, வேண்டுதல்கள் ஆகியன தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நூல் தொகுப்பு
மெய்ஞானத் திருப்பாடற்றிரட்டு - 1895
ஞானியார் அப்பா பற்றிய நூல்கள்
- திருக் கோட்டாற்றுக் கலம்பகம் (கொட்டாம்பட்டி எம். கருப்பையா பாவலர்)
- தோத்திரப்பா (நெல்லை - சாத்தான்குளம் சி.வெ. அரவமூர்த்தி உபாத்தியாயர்)
- தியான மஞ்சரி (கமுதி கா. மீறானயினார் புலவர்)
- திருக்கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் (கோட்டாறு சதாவதானி கா.ப. செய்குத்தம்பி பாவலர்)
- திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி (கா.ப. செய்குத்தம்பி பாவலர்)
உசாத்துணை
- தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் - 1981 - தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா
- தமிழ் இசுலாம், உருவாக்கமும் திருக்குரான் தமிழ் வாசிப்பும் (ஆய்வியல் சிந்தனை) - 2011. உலகத் தமிழ் ஆராய்ச்சி வெளியீடு. ஆசிரியர்: ஹமீம் முஸ்தபா.
- இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் -அப்துற் றஹீம்
- இந்து தமிழ் திசை - இறைநேசர்களின் நினைவிடங்கள்: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
- ஞானியார் அப்பா அறக்கட்டளை-புகைப்படங்கள்
- ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை- வரலாற்றுக்குறிப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-May-2022, 00:10:40 IST