காவேரி (இதழ்)
- காவேரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காவேரி (பெயர் பட்டியல்)
காவேரி (1948 -1960) தமிழ் பல்சுவை இதழ். கும்பகோணத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். என்.ஆர். ராமானுஜன் காவேரி இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.
பதிப்பு, வெளியீடு
காவேரி கும்பகோணத்திலிருந்து ஆகஸ்ட் 1948-ல் தொடங்கி சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் வெளிவந்தது. இந்த இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என். ஆர். ராமானுஜன். இவருக்குச் சொந்தமான 'காவேரி’ அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. தனிப்பிரதி ஒன்றின் விலை இந்தியாவில் நான்கணா. வருடச் சந்தா இந்தியாவுக்கு மூன்று ரூபாய். இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு நான்கு ரூபாய். மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஐந்து ரூபாய். அரை வருடச் சந்தாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காலமாற்றத்திற்கேற்ப இதில் மாற்றம் செய்யப்பட்டது.
உள்ளடக்கம்
இதழின் முகப்பில், 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்னும் பாரதியின் பாடல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இதழிலும் ஆசிரியரின் தலையங்கம் இடம் பெற்றுள்ளது. கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை போன்ற படைப்புகள் காவேரி இதழில் இடம்பெற்றன. ஓரங்க நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், ஆசிரியர் உரைகள் ஆகியனவும் இதழில் வெளியாகின. மருத்துவம் சார்ந்த கட்டுரைகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. திரைப்படங்கள், புத்தகங்கள், பொது விளம்பரங்களும் இவ்விதழில் அதிகம் வெளியாகியுள்ளன. புத்தக விமர்சனங்களும் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன.
பங்களிப்பாளர்கள்
- சுத்தானந்த பாரதியார்
- ரா. ஸ்ரீ. தேசிகன்
- தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
- எம். எஸ். சுப்பிரமணிய ஐயர்
- சௌரி
- மாயாவி
- மாரார்
- ஏ.எஸ். ராகவன்
- சி.வி. ராமகிருஷ்ணன்
- தி.சேஷாத்திரி
- தமிழழகன்
- ஆர். வேங்கடரத்னம்
- நா.கி. நாகராசன்
- நா.சீ வரதராசன்
- இளம்பாரதி
- வை. சுப்ரமண்யன்
- வேங்கடலட்சுமி
- எம்.எஸ். கமலா
- லீலா கோபலன்
- மோஹனாம்பாள் ரங்கநாதன்
- விந்தியா
- கே.சுந்தரம்மாள்
- ஸரோஜா ஸ்ரீநிவாஸன்
- குகப்ரியை
- கோமதி சுப்ரமண்யம்
- கே.எஸ்.நாகராஜன்
- ஸ்ரீதரம் குருஸ்வாமி
- போன்ற எழுத்தாளர்கள் இவ்விதழில் பங்களிப்புச் செய்துள்ளனர். ஆவணம்
காவேரி இதழில் வெளியான சில படைப்புகள் தொகுக்கப்பட்டு ‘காவேரி இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க காவேரி இதழ் தொகுப்பு
இலக்கிய இடம்
தமிழில் வாசிப்பு ஒரு சமூகச்செயல்பாடாகவும் பிரசுரம் ஒரு வணிகச்செயல்பாடாகவும் மாறத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான இதழ்களில் ஒன்று. அன்றைய அறிவியக்கத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளது. பொழுதுபோக்கு எழுத்துக்கும் இடமளித்தது. கும்பகோணத்தில் இருந்து கலாமோகினி போன்ற இதழ்களின் சமகாலத்தில் வெளியான இதழாயினும் இதில் தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகள் பெரும்பாலும் எவரும் எழுதவில்லை.
உசாத்துணை
- காவேரி இதழ்த் தொகுப்பு 1&2, கலைஞன் பதிப்பகம்
- காவேரி இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:54 IST