under review

இளம்பாரதி

From Tamil Wiki
இளம்பாரதி
இளம்பாரதி -விருது
இளம்பாரதி
இளம்பாரதி
இளம்பாரதி- எழுத்தாளர்களுடன்
இளம்பாரதி
இளம்பாரதி

இளம்பாரதி (02-ஜூலை-1933 ) ருத்ர. துளசிதாஸ். தமிழ் எழுத்தாளர். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்து தமிழுக்கு இலக்கியப்படைப்புகளை மொழியாக்கம் செய்தவர். கவிதைகளும் நாவலும் எழுதியிருக்கிறார்.பல முக்கியமான மொழியாக்கங்களைச் செய்த இளம்பாரதி மொழியாக்கத்துக்காக கேந்திர சாகித்ய அக்காதமி விருது உட்பட பல பரிசுகளைப் பெற்றவர். குறிப்பிடத்தக்க அறிவியல்நூல்களையும் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ருத்ர. துளசிதாஸ் என இயற்பெயர் கொண்ட இளம்பாரதி 02-ஜூலை-1933-ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளயரசேனந்தல் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை ரா.வே.ருத்ரப்பாசாமி, தாயார் லட்சுமி அம்மாள். ரா.வே. ருத்ரப்பாசாமி. சுதந்திரப் போராட்ட வீரர். மகாத்மா காந்தி, வினோபா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு மாநில ஆதாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். இளம்பாரதியின் உடன் பிறந்தவர்: திரு. ரு. வே. ராஜூ, கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.

இளம்பாரதி பள்ளிக்கல்வியை கோயில்பட்டியில் பயின்றார். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து இளங்கலை வேதியியல் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றார். முதுநிலை வேதியியலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார். ஆய்வியல் நிறைஞர் வேதியியல் படிப்பை மதுரை காமராசர் பல்கலையில் முடித்தார். இளம்பாரதி தெலுங்கு, மலையாளம் பட்டயப் படிப்புகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

தனிவாழ்க்கை

இளையபாரதியின் மனைவி பெ. செங்கமலம், மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்து, மறைந்தார். மகள், விஜயலட்சுமி ரங்கநாதன். கணிப்பொறிப் பொறியாளராகப் பணிபுரிகிறார். இளம்பாரதி வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கியவாழ்க்கை

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இளம்பாரதி தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்தவர். 1949 முதல் எழுதத்தொடங்கியவர் 60க்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். சாஹித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகியவற்றுக்காக இளம்பாரதி செய்த மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியம் தொகுதிகளில் வேதியியல் பகுதி மேலாய்வாளராகப் பணியாற்றியுள்ளர்.தமிழ் சங்கப்பலகை – குறள்பீடம் சார்ந்து மேலாய்வாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

ஏற்புகள்

விருதுகள்
  • ‘மய்யழிக் கரையோரம்’ என்ற மலையாள மொழிபெயர்ப்பு நாவல் 1998-ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புத் துறைக்கான சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
  • ‘அடுத்த வீடு’, ‘அனல் காற்று’ ஆகிய நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசைப் பெற்றன.
  • ‘விஞ்ஞானமும் வாழ்க்கை நலமும்’ நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கான பாடப்புத்தகமாகப் பரிந்துரைக்கப்பட்டது.
  • காஞ்சி காமகோடி பீட நூற்றாண்டுக் குழு ‘சேவா ரத்னா’ என்ற விருது அளித்து கௌரவித்தது.
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘கரையான்கள்’ என்ற தெலுங்குச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நூலுக்குப் பரிசளித்திருக்கிறது.
  • ‘கரையான்கள்’ என்ற தெலுங்குச் சிறுகதைகள் 2005-ஆம் ஆண்டுக்கான ‘நல்லி-திசை எட்டும்’ மொழிபெயர்ப்புப் பரிசு கிடைத்திருக்கிறது.
பாடங்களில்
  • ‘கௌசல்யா’ நாவல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை எம்.ஃபில். ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ‘மரக்குதிரை’ நூல் கேரளப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஒப்பிலக்கியத்துறையில் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டது.
  • ‘அடுத்த வீடு’, ‘அனல் காற்று’, ‘மரக்குதிரை’, ‘கௌசல்யா’ ஆகியன மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ (தமிழ்) மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களாகப் பரிந்துரைக்கப்பட்டன.

இலக்கிய இடம்

இந்திய இலக்கியங்களுக்கு நடுவேயான உரையாடலை இயல்வதாக்கிய குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களான அ.கி. கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், த.நா.குமாரசாமி, த. நா. சேனாபதி, சு. கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ராம்நாத் , சௌரி போன்ற முன்னோடிகளில் ஒருவர் இளம்பாரதி. அறிவியலை அறிமுகம் செய்யும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.

நூல்கள்

கவிதை
  • சோலை நிழல்
  • உனக்காக
  • பூப்பந்தல்
நாவல்
  • கீதா
வரலாறு
  • சரத்சந்திரர் வாழ்க்கை வரலாறு
மொழியியல்
  • மொழிபெயர்ப்பு என்ற ஊடகம்
அறிவியல்
  • விஞ்ஞானமும் வாழ்க்கை நலமும்
  • நம்மைச் சுற்றி விஞ்ஞானம்
  • நியூட்ரான்
  • வானத்தில் நாம்
  • அறிவியல் வளர்வது நமக்காக
  • விஞ்ஞானம் வளர்ந்தது எப்படி?
  • கடலடியில் நகைப்பெட்டி
  • பொது – பௌதிக வேதியியல் (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
  • கனிம வேதியியல் செய்முறை (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
  • கனிம வேதியியல் செய்முறை – நுண்ம முறை (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
  • அறிவியல் களஞ்சியம் தொகுதிகள் (தஞ்சைப் பல்கலைக் கழகம்)
  • அறிவியலின் சில முகங்கள்
  • மண்ணும் வளமும்
மொழிபெயர்ப்பு
தெலுங்கு
  • அனல் காற்று (கவிதைகள்)
  • கௌசல்யா (நாவல்)
  • படிப்பு (நாவல்)
  • தெலுங்கு ஓரங்க நாடகங்கள்
  • திருப்பதி வேங்கட கவிகள் (வாழ்க்கை வரலாறு)
  • கரையான்கள் (சிறுகதைகள் தொகுப்பு)
  • தெனாலி ராமன் மதியூகக் கதைகள்
  • சின்ன மீன் பெரிய மீன் (நாவல்)
  • வலசை போகிறேன் (கவிதைகள்)
  • கேது விஸ்வநாத ரெட்டி சிறுகதைகள்
  • காலச்சுவடுகள் (நாவல்)
  • கெ. சுபா சிறுகதைகள்
  • அடுத்த வீடு (சிறுகதைகள் தொகுப்பு)
மலையாளம்
  • இந்துலேகா (நாவல்)
  • உம்மாச்சு (நாவல்)
  • மய்யழிக் கரையோரம் (நாவல்)
  • கோயில் யானை (நாடகம்)
  • தத்வமஸி (ஆய்வு நூல் – உபநிடதங்கள்)
  • மரக்குதிரை (சிறுகதைகள் தொகுப்பு)
  • அவள் என்ற மரம் (மலையாளச் சிறுகதைகள்)
  • கயிறு (நாவல்)
  • புத்தபதம் (புத்த மடாலயங்கள் பயணக் கட்டுரைத் தொகுப்பு)
கன்னடம்
  • சிமென்ட் மனிதர்கள் (நாவல்)
  • களத்துமேட்டிலிருந்து (நாவல்)
  • புதிதாய் ஒரு பிறப்பு (சிறுகதைகள் தொகுப்பு)
ஹிந்தி
  • பிணைப்பு (நாவல்)
  • ஐந்து நண்பர்கள் (சிறுவர் கதை)
  • சாகசக்கார ஆடு (சிறுவர் கதை)
ஆங்கிலம்
  • பந்தயம் (ஆன்டன் செகாவ் சிறுகதைகள்)
  • வானிலை மாற்றங்கள்
  • தண்ணீர்
  • நமது நீர்வளம்
  • உலகை மாற்றிய புதுப்புனைவுகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jul-2024, 13:46:09 IST