under review

த. நா. சேனாபதி

From Tamil Wiki
த.நா.சேனாபதி (பட்டம்பெறும்போது எடுத்த பழையபடம்)

த.நா.சேனாபதி (2 பிப்ரவரி 1914 ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி, த.நா.ஸேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

த. நா. சேனாபதி தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு 2 பிப்ரவரி 1914-ல் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி தமிழ், ஆங்கிலம் , சம்ஸ்கிருதம் அறிந்த எழுத்தாளர். 'போஜ சாஸ்திரம்' என்னும் நாடகத்தை எழுதியவர்.' மகத மன்னர்கள்', 'ஆதிசங்கரரின் காலம்' போன்ற நூல்களின் ஆசிரியர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த.நா.குமாரசாமி இவருடைய மூத்த சகோதரர். பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் தண்டலம் நாராயண சாஸ்திரியின் நண்பர்கள்.

த.நா.சேனாபதி சிறுவராக இருக்கையிலேயே தந்தை மறைந்தார். குடும்பம் வறுமைவாய்ப்பட்டது. த.நா.குமாரசாமி ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றினார்.தந்தையிடமிருந்து தமிழ்,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் அடிப்படைக் கல்வி பெற்ற த.நா.சேனாபதி பின்னர் தமையன் த.நா.குமாரசாமியிடமிருந்து வங்கமொழி கற்றார். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு (BOL) முடித்தார். த. நா. சேனாபதி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பின்னர் தமிழிலக்கியம் பயின்று வித்வான் பட்டமும் ஒரிய மொழியில் முன்ஷி பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

அன்னிபெசன்ட் தொடங்கிய பிரம்மஞான சபை (தியோசஃபிகல் சொசைட்டி) பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றினார். ’த.நா.சேனாபதி தாகூரைப் போன்ற தோற்றம் கொண்டவர். பணிவு, அடக்கம், கட்டுப்பாடு என வாழ்ந்தவர். ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றியவர். மனைவி உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருக்காகவே வாழ்ந்தவர்’ என கா.ஸ்ரீ.ஸ்ரீ குறிப்பிடுகிறார்.

இதழியல்

1947 நவம்பரில் கலைமகள் நிறுவனம் தொடங்கிய மஞ்சரி என்னும் மொழிபெயர்ப்பு இதழுக்கு ஆசிரியராக த.நா.குமாரசாமி பொறுப்பேற்றார். 1948-ல் த.நா.சேனாபதி அதில் துணையாசிரியராகப் பதவி ஏற்றார். இருவருமே கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதனின் அன்புக்குரியவர்களாக இருந்தனர். மஞ்சரி இதழில் த.நா.சேனாபதியின் பெரும்பாலான மொழியாக்கங்கள் வெளியாயின. கலைமகள் காரியாலய வெளியீடுகளாக அவருடைய நூல்கள் வெளிவந்தன. 1973ல-ல் மஞ்சரி இதழின் முதன்மை ஆசிரியராக ஆனார்.

இலக்கிய வாழ்க்கை

புனைவுகள்

த.நா.சேனாபதி சென்னை பல்கலையில் பயில்கையில் தன் 19-ஆவது வயதில் முதல் சிறுகதையை எழுதினார். ’அகஸ்தியர் வந்தால்’ என்னும் அச்சிறுகதை 1933-ல் ஆனந்தவிகடன் இதழில் வெளியாயிற்று. தொடர்ந்து 'குழந்தைமனம்', 'சத்யவாதி' போன்ற சிறுகதைகளை வெளியிட்டார். 'மாயை', 'பாதகாஹரணம்', 'குற்றமுள்ள நெஞ்சு', 'அண்ணாமலைக் கோபுரம்', 'செவிலித்தாய்', 'பிரேமதூதன்', 'சிசுலோகம்', 'பழிக்குப்படி', 'யார் திருடன்', 'ஏமாந்தவர் யார்', 'பஸ் சொன்ன கதை' போன்றவை த.நா.குமாரசாமியின் நல்ல சிறுகதைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. த.நா.சேனாபதி 'சகோதரபாசம்' என்னும் நாவலையும் குழந்தையிலக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார்.

கட்டுரைகள்

த.நா.குமாரசாமி வெவ்வேறு இதழ்களில் இந்திய தேசிய வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு

தமிழிலக்கியத்தில் 1940 முதல் முப்பதாண்டுகளை மொழியாக்க காலகட்டம் என்று கூறுவது வழக்கம். வங்காளம், மராட்டி, இந்தி மொழிகளில் இருந்து ஏராளமான மொழியாக்கங்கள் தமிழுக்கு வந்து மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின. த.நா.குமாரசாமி, ஆர். சண்முகசுந்தரம், கா.ஸ்ரீ.ஸ்ரீ ,அ.கி.கோபாலன் போன்றவர்கள் அன்று புகழ்பெறற . த.நா. சேனாபதி தன் தமையனின் வழி தொடர்ந்து வங்காளம், இந்தி மொழிகளில் இருந்து தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்தார். முதன்மையாக ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.

சரத்சந்திரர் , தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷண் பந்தோபாத்யாய , சௌரீந்த்ரமோகன் முகோபாத்யாய போன்றவர்களின் படைப்புகள் த.நா.சேனாபதி மொழியாக்கத்தில் வெளியாயின. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் த.நா.சேனாபதி மொழியாக்கம் செய்துள்ளார். சாகித்ய அக்காதமி தாகூரின் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடும் பணியை தொடங்கியபோது அதில் முதன்மை மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இலக்கிய இடம்

த.நா. சேனாபதி சிறுகதையாசிரியராக இலக்கிய விமர்சகர்களால் கருத்தில்கொள்ளப்படுவதில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளராக அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது என கருதப்படுகிறது. வங்காள நவீன இலக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்து தமிழ் நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை சேனாபதி உருவாக்கினார். "த.நா.குமாரசாமியின் மொழிநடை வடமொழியும் சங்க இலக்கிய நடையும்.சேனாபதியின் மொழிநடை எளிமையாக, சரளமாக இருக்கும். இவருடைய மொழிபெயர்ப்புகளில் மூலத்தைப் பற்றியோ, மூலத்தின் தாக்கமோ ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாது’ என்று கா.ஸ்ரீ.ஸ்ரீ த.நா.சேனாபதி பற்றிச் சொல்கிறார்.

நூல்கள்

எழுதியவை

சிறுகதைகள்

  • குழந்தைமனம்
  • சுரங்கவழி
நாவல்
  • சகோதரபாசம்
குழந்தை இலக்கியம்
  • சிறுத்தைவேட்டை
  • ராஜா விக்ரமாதித்தன்
  • மந்திரவாதி
  • குரங்கு சொன்ன யுக்தி
நாடகங்கள்
  • கர்மபலன்
  • மாலினி
வாழ்க்கை வரலாறுகள்
  • குருகோவிந்தர்
  • ஏசுநாதர்
  • ஞானதேவர்
  • அமரஜோதி, காந்திஜி, வாழ்க்கை வரலாறு
  • கவியும் மொழியும், வங்கால கவிஞர்களீன் வாழ்க்கை வரலாறுகள்
  • கவியின் கதை, ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு நூல்

மொழி பெயர்ப்பு நூல்கள்

ரவீந்திரநாத் தாகூர்
  • நாலு அத்தியாயம்
  • மாகாமாயா
  • காரும் கதிரும்
  • மானபங்கம்
  • மூவர்
  • மனிதனின் சமயம்
  • ரவீந்திரர் குழந்தை இலக்கியம்
  • ரவீந்திரரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
  • தாகூர் கடிதங்கள்
  • ரவீந்திரர் வாழ்வும் வாக்கும்
  • கல்லின்வேட்கை (த.நா.குமாரசாமியுடன்)
  • ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு
  • இளமைப் பருவம்
சரத்சந்திரர்
  • கமலா
விபூதிபூஷண் பந்தோபாத்யாய
  • இலட்சிய இந்து ஓட்டல்
  • வனவாசி
பிறர்
  • வேலை கிடைத்தது. பஸ்லுல் ஹக்
  • கோகுலச் செல்வன் -ஏ.எஸ்.பஞ்சாபகேச ஐயர்
  • மகாவீரர் வாழ்க்கை வரலாறு- ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர்
  • கட்டைப்பிரம்மசாரி -சுபோத் வசு
  • லட்சியப்பெண் மாலினி- சௌரீந்த்ரமோகன் முகோபாத்யாய
  • வங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம்- சரோஜ் முகோபாத்யாய
  • மறைந்த மோதிரம் -ஏ.எஸ்.பஞ்சாபகேச ஐயர்
  • தற்கொலைக் கழகம் - ஸ்டீவன்ஸன்
  • மனிதப்பறவை- கிரேக்க தொன்மக்கதைகள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:15 IST