under review

கா.ஸ்ரீ.ஸ்ரீ

From Tamil Wiki
கா.ஸ்ரீ.ஸ்ரீ

கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர்.

பிறப்பு, கல்வி

கா.ஸ்ரீ.ஸ்ரீ

உத்தரப்பிரதேசத்திலுள்ள பிருந்தாவனத்தில் டிசம்பர் 15, 1913-ல் ஸ்ரீரங்காச்சாரியாருக்கும் ருக்மிணி அம்மாளுக்கும் பிறந்தார். தந்தை வேத பண்டிதர். சம்ஸ்கிருத அறிஞர். இந்தி, வங்கம் போன்ற மொழிகளில் விற்பன்னர். தந்தையிடமிருந்து சம்ஸ்கிருதம், இந்தி, வங்க மொழிகளை கா.ஸ்ரீ.ஸ்ரீ கற்றார். ஸ்ரீரங்காச்சாரியார் பிருந்தாவனத்தில் இருந்த ஒரு மதக்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இருந்தார். பம்பாய்க்கு அருகில் ’கல்யாண்’ என்ற இடத்திலிருந்த லஷ்மி வெங்கடேசுவர அச்சகத்தில் காஸ்ரீ.ஸ்ரீ யின் தந்தை பணியாற்றும் சூழல் ஏற்பட்ட அப்போது கல்யாணில் தமிழ் கற்கும் பள்ளி இல்லாமயால் கா.ஸ்ரீ.ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்து மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார்.ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது இவரை வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இவருடைய வலது காதில் கடுமையான வலியுடன் சீழ்கட்டத் தொடங்கியது.மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. எனவே, இவரை பெற்றோர் இவரை சென்னைக்கு அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்தனர்.காஞ்சீபுரம் திரும்பிய கா.ஸ்ரீ.ஸ்ரீ காஞ்சீபுரம் பச்சையப்பா பள்ளியில் சேர்ந்து படித்தார். 1930-ல் நடைபெற்ற பள்ளியிறுதிப் பொதுத்தேர்வில் சென்னை, காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்த பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிப் பாடங்களில் முதல் மாணவராக வெற்றி பெற்று கா.ஸ்ரீ.ஸ்ரீ தங்கப் பதக்கம் பெற்றார்.காஞ்சிபுரத்தில் ஒரு வேத பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

கா.ஸ்ரீ.ஸ்ரீ

கா.ஸ்ரீ.ஸ்ரீ 1930ல் லட்சுமி அம்மாளை மணந்தார். 1934ல் கா.ஸ்ரீ.ஸ்ரீ சென்னைக்கு வந்து ஹிந்தி பிரச்சாரசபா அச்சகத்தில் பிழைதிருத்துநராகப் பணிக்குச் சேர்ந்தார். 'கலைமகள்' பத்திாிகைக்கு துணையாசிாியராகவும் பதிப்பாசிாியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுாிந்தார். மொழிபெயர்ப்புகளுக்கான 'மஞ்சாி' பத்திாிகையின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கா.ஸ்ரீ.ஸ்ரீ தொடக்கம் முதலே மொழியாக்கங்கள் தான் செய்துவந்தார். 1940ல் அவர் காண்டேகரின் ’சகோரமும் சாதகமும்’ என்னும் கதையை மொழியாக்கம் செய்து தினமணிக்கு அளித்தார். அங்கே உதவியாசிரியராக இருந்த புதுமைப்பித்தன் பாராட்டுக்குறிப்புடன் அதை வெளியிட்டார். கா.ஸ்ரீ.ஸ்ரீ இந்தி வகுப்புகள் எடுத்துவந்தார். பெரும்பாலும் ரயில்வே ஊழியர்கள் அவரிடம் இந்தி கற்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் முதன் முதல் இந்தி வகுப்பத் தொடங்கியபோது ஜே.சிவசண்முகப் பிள்ளயும், வழக்கறிஞர் பாஷ்யமும் தலைமை தாங்கினர். அவ்வாறாக அவருக்கு காங்கிரஸ் தொடர்பு ஏற்பட்டது. 1937 மார்ச்சில் காந்தி அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டுக்கு சென்னை வந்தபோது உ.வே.சாமிநாதய்யரின் வரவேற்புரையை மொழியாக்கம் செய்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவ்விழாவை ஏற்பாடு செய்த கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் உறவு கிடைத்தது. கலைமகள் ஆசிரியர்குழுவில் சேர்ந்தார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ கலைமகளில் கதைகளும் எழுதலானார். 'மழையிடையே மின்னல்’ என்னும் சிறுகதை கலைமகளில் வெளியாகி இலக்கியக் கவனம் பெற்றது. பின்னர் அது நீலமாளிகை என்னும் தொகுதியில் இடம்பெற்றது. அத்தொகுதிக்கு புதுமைப்பித்தன் முன்னுரை அளித்திருந்தார். அதில் 'இவருடைய சொந்தக்கற்பனைகள் எல்லாம் முக்கால்வாசிப்பேர் திரைபோட்டு மூடி வைக்கவேண்டியவை என்றும் சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப்பற்றி இவர் தெம்பு குன்றாமல் கை தழுதழுக்காமல் எழுதக்கூடியவர் என்பதை இவருடைய கதைகளே சொல்லும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.கா.ஸ்ரீ.ஸ்ரீ சுதர்சனம் என்னும் வைணவ இதழில் கம்பராமாயண ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். கல்கியில் காவியராமாயணம் என்னும் பேரில் வான்மீகி- கம்பன் கவிநயத்தை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

மொழியாக்கங்கள்
கா.ஸ்ரீ.ஸ்ரீ

கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார். அவர் மொழியாக்கம் செய்த காண்டேகரின் நாவல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மிக விரும்பிப் படிக்கப்பட்டன. மராத்தியை விட தமிழில் காண்டேகர் புகழ்பெற்றிருந்தார் என்று வேடிக்கையாகச் சொல்லுமளவுக்கு அம்மொழியாக்கங்களின் செல்வாக்கு இருந்தது. பின்னாளில் கு. ராஜவேலு, மு. வரதராசனார், நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களில் காண்டேகரின் கதைகளின் செல்வாக்கு, குறிப்பாக கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிநடையின் பாதிப்பு இருந்தது. கருகிய மொட்டு, வெறும் கோயில், சுகம் எங்கே?, எரிநட்சத்திரம் போன்ற நாவல்கள் புகழ்பெற்றவை.

கா.ஸ்ரீ.ஸ்ரீயின் முதல்நாவல் ’காந்தம்’ 1945-ல் கலைமகள் வெளியீடாக வந்தது. தொடர்ந்து 1949-ல் காற்றாடி என்னும் நாவலும் நீலமாளிகை, அன்னபூரணி போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன. 1947-ல் குமுதம் இதழ் தொடங்கப்பட்டபோது முதல் இதழிலேயே கா.ஸ்ரீ.ஸ்ரீயின் சிறுகதையும், அவர் மொழியாக்கம் செய்த காண்டேகரின் ’வெண்முகில்’ நாவலும் வெளியாகும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது என்பது அன்று அவருக்கிருந்த வாசக ஏற்புக்கான சான்று. காண்டேகரின் 13 நாவல்களையும் 150 சிறுகதைகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்திருக்கிறார். காண்டேகாின் படைப்புகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மிகவும் கவர்ந்தது 'யயாதி' நாவல்தான். 'புராண பாத்திரமான யயாதியை இக்காலத்திய மிதமிஞ்சிய வேட்கை வெறியிலாழ்ந்த மனிதனாக காண்டேகர் சித்தாித்திருக்கிறார். புராணக்கதையொன்றை அற்புதமான நவீனமாய் படைக்க முடியுமென்பதற்கு இது தக்க சான்று ' என புகழ்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகாின் மராட்டிய 'யயாதி 'க்கு சாகித்ய அகாதெமியின் பாிசும், பாரதீய ஞானபீட பாிசும் கிடைத்தன. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழ் மொழிபெயர்ப்பு 'யயாதி'க்கு 1991-ல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான பாிசு கிடைத்தது.

கா.ஸ்ரீ.ஸ்ரீ தமிழிலிருந்து இந்திக்கும் மராட்டிக்கும் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதியாரின் தராசு கட்டுரைகளை இந்திக்கு மொழியாக்கம் செய்தார். இந்தியச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் மாதவையா, புதுமைப்பித்தன், கல்கி, ந.சிதம்பர சுப்ரமணியன் முதலிய 12 எழுத்தாளர்களின் கதைகளை இந்தியில் மொழியாக்கம் செய்தார். "குறிக்கோள் இல்லாத, இலட்சியமற்ற இலக்கியம் சிறந்த இலக்கியமாகாது. கணவனும் மனைவியும் பேசுவது போல மக்களிடம் இலக்கியம் பேச வேண்டும். படைப்பாளி தன்னுடய படிப்பு, அனுபவம், வல்லமை, கற்பனைத் திறன், உயர்ந்த நோக்கம், ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாசகர்களுக்குக் கொடுக்கின்றபோழுது சிறந்த இலக்கியம் உருவாகும்" என்று தன் இலக்கியக்கொள்கையை வகுத்துரைத்தார்.

இலக்கிய இடம்

கா.ஸ்ரீ.ஸ்ரீ , கி.வா.ஜகந்நாதனிடம் இருந்து விருது பெறுகிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்த காண்டேகரின் நாவல்கள் தமிழிலக்கியத்தில் ஒரு பெரிய படைப்பாளியின் மூலப்படைப்புகள் அளவுக்கே செல்வாக்கு செலுத்தியவை. சி.என்.அண்ணாத்துரை 1961-ம் ஆண்டு,செங்கல்பட்டு இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீயை 'தமிழக காண்டேகர் ' என பாராட்டினார்.கா.ஸ்ரீ.ஸ்ரீயை 'தமிழ்நாட்டு காண்டேகர்’ என்று புகழ்ந்துரைத்தார். மு.கருணாநிதி கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழியாக்கங்கள் வழியாகவே நவீன உரைநடையில் அறிமுகம் உருவானது என எழுதியிருக்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ யின் கதைகள் சீண்டும்தன்மை அற்ற சீர்திருத்தநோக்கம் கொண்டவை, ஆண்பெண் உறவை மென்மையாகத் தொட்டுச் சொல்பவை. தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் கா.ஸ்ரீ.ஸ்ரீ குறிப்பிடத்தக்க பங்களிப்பு உடையவர்

மறைவு

கா.ஸ்ரீ.ஸ்ரீ ஜூலை 28, 1999 அன்று நாசிக்கில் மறைந்தார்.

நினைவுகூரல்

கா.ஸ்ரீ.ஸ்ரீயின் நினைவுக்காக Kaa.Sri.Sri.Charirable Trust என்னும் அமைப்பு உள்ளது.

நூல்கள்

பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்த காண்டேகரின் நூல்கள்
நாவல்கள்
 • எரிநட்சத்திரம்
 • இருதுருவங்கள்
 • மனோரஞ்சிதம்
 • வெண்முகில்
 • இருமனம்
 • வெறுங்கோயில்
 • சுகம் எங்கே
 • முதற்காதல்
 • கருகிய மொட்டு
 • கிரௌஞ்சவதம்
 • கண்ணீர்
 • யயாதி
 • அமுதக்கொடி
சிறுகதைகள்
 • காண்டேகர் கதைகள் ( இரண்டு பகுதிகள்)
 • கூட்டுக்கு வெளியே
 • ஆஸ்திகன்
 • அரும்பு
கா.ஸ்ரீ.ஸ்ரீ செய்த மற்ற மொழியாக்கங்கள்
 • பகவான் புத்தர், சாகித்ய அகாதெமி - பழனியப்பா பிரதர்ஸ், 1957 (மராட்டிய மூலம்: தர்மானந்த தாமோதர் கோசாம்பி)
கா.ஸ்ரீ.ஸ்ரீ நூல்கள்
நாவல்
 • காந்தம் 1945
 • காற்றாடி 1949
சிறுகதை
 • நீல மாளிகை
 • அன்னபூரணி
பொது
 • சைவ தத்துவம்

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:54 IST