ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
- சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
- ஜெயலட்சுமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜெயலட்சுமி (பெயர் பட்டியல்)
ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் (டிசம்பர் 12, 1911 - மார்ச் 3, 2011) (ஜெயலக்ஷ்மி ஶ்ரீனிவாசன்) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். புஷ்பஹாரம் நாவல் ஜெயலட்சுமி ஶ்ரீனிவாசனின் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் டிசம்பர் 12, 1911-ல் கரூரை அடுத்த வாங்கல் கிராமத்தில் ஏ.வி. ராமநாதனுக்கும் சீதாலட்சுமிக்கும் பிறந்தார். ஏ.வி. ராமநாதன் சமஸ்கிருதப் பண்டிதர், 'ராஜமந்திரப் பிரவீணா' என்று போற்றப்பட்டவர். மைசூர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவும், பிற்காலத்தில் பரத்பூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றினார். ஜெயலட்சுமியின் கணவர் பெயர் ஸ்ரீனிவாசன். ஜெயலட்சுமி ஶ்ரீனிவாசன் சிறுகதைகள், நாவல் எழுத கணவரின் ஊக்கம் இருந்தது.
இலக்கிய வாழ்க்கை
ஜெயலட்சுமி இளவயதில் அறிவார்ந்த குடும்பச்சூழலில் வளர்ந்தவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றார். தமிழ் மற்றும் கன்னடத்தில் சிறுகதைகள் எழுதினார். தமிழில் இவர் எழுதிய சிறுகதைகள், தொடர்கள் சுதேசமித்திரன், பாரதமணி, பாரிஜாதம், வசந்தம், ஜகன்மோகினி, மங்கை, நவசக்தி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
இவர் எழுதிய, புகழ்பெற்ற ’புஷ்பஹாரம்’ நாவல் சுதேசமித்திரன் இதழில் தொடராக வெளிவந்தது. ஏ.என். கிருஷ்ணராவ், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவுடு நரசிம்ம சாஸ்திரி, வெங்கடராமையா சீதாராமையா, ஜி.பி. ராஜரத்தினம் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் 'சுப்பண்ணா’ -வின் தமிழ் மொழியாக்கம் குறிப்பிடத்தக்கது. சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மற்றும் பலரின் தமிழ் படைப்புகளை கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். கன்னட மொழியில் பல கதைகளும் கட்டுரைகளும் எழுதினார்.
விருதுகள்
- கர்நாடக மாநில சாகித்ய விருது பெற்றார்
- கன்னட சாகித்ய சபாவின் சிறந்த எழுத்தாளர் விருது, சிறந்த பெண் எழுத்தாளர் விருது,
- 'வித்யா ரத்னம்’ விருது பெற்றார்.
- தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது பெற்றார்.
மறைவு
ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் மார்ச் 3, 2011-ல் காலமானார்.
நூல்கள்
நாவல்
- புஷ்பஹாரம்
சிறுகதைகள்
- லட்சுமி கடாட்சம் முதலிய கதைகள் (சிறுகதைகள்)
- பிரேமா முதலிய கதைகள்
- அன்புக் காணிக்கை
- தெய்வசித்தம்
- பச்சைப் பாவடை
- மறுமலர்ச்சி
- மாலதி
- கடவுள் எங்கே
- அசட்டுப் பெண்
- மாலதியின் தலை தீபாவளி
உசாத்துணை
- சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் நாவலாசிரியர்கள்- பழனியப்பன்
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:36 IST