under review

கண்ணதாசன் (இதழ்)

From Tamil Wiki
கண்ணதாசன் இதழ் (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் இதழ் - 1973 (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் ஆண்டு மலர்

தென்றல், தென்றல் திரை, முல்லை ஆகிய இதழ்களின் வரிசையில் கவிஞர் கண்ணதாசன், தன் பெயரிலேயே ஆரம்பித்து நடத்திய இதழ் ‘கண்ணதாசன்.’ கவிஞர் கண்ணதாசனின் மனம் கவந்த இதழாக இது இருந்தது. ஆறு வருடங்கள் வெளிவந்த இவ்விதழ், பொருளாதாரப் பிரச்சனையால் நின்றுபோனது.

பதிப்பு, வெளியீடு

தென்றல், தென்றல் திரை, முல்லை எனப் பல இதழ்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் மிக்கவர் கவிஞர் கண்ணதாசன். அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை, சிந்தனைகளை வெளியிடுவதற்காக, ‘கண்ணதாசன்’ என்னும் தன் பெயரிலேயே இதழ் ஒன்றை ஆரம்பித்தார். ஜனவரி 1, 1968 முதல் வெளிவந்த இவ்விதழின் பக்கங்கள் 160. விலை ரூபாய் ஒன்று. சில மாதங்களுக்குப் பின் ஒன்றரை ரூபாய்க்கு இவ்விதழ் விற்பனையானது. ஆண்டு சந்தா ரூபாய் 6.00/- அப்போது குமுதம் நான்கணாவுக்கும், ஆனந்த விகடன் முப்பது பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மிக அதிகமான விலையில் வெளிவந்த ஒரே இலக்கிய இதழ் கண்ணதாசன் தான். இராம. கண்ணப்பன் இவ்விதழின் இணை ஆசிரியராக இருந்தார். ஓவியர் அமுதோனின் அழகான ஓவியங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது. நடுவில் ஒருமுறை நின்று பின் மீண்டும் 1975 வரை வெளிவந்தது.

உள்ளடக்கம்

மீண்டும் தொடங்கப்பட்ட முதல் இதழில்,
போற்றுபவர் போற்றட்டும்; புழுதிவாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை என ( து ) உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்

என்று குறிப்பிட்டுள்ள கண்ணதாசன், ”என் இனிய நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணதாசன் மாத இதழ் உங்கள் கையில் திகழ்கிறது. ஒவ்வொரு தடவையும் கண்ணதாசன் இதழை ஆசையோடும். ஆர்வத்தோடும் துவங்கியிருக்கிறேன். பல்வேறு காரணங்களால் இதழ் சோதிக்கப்பட்டு நின்று போயிருக்கிறது. இந்தத் தடவை இதை நல்ல முறையில் தொடர்ந்து நடத்துவது என்ற உறுதியோடு இதனைத் தொடங்கியிருக்கிறேன், நண்பர்கள் சிலரின் உதவியோடு.

செல்கின்ற இடங்களிலெல்லாம் நண்பர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இது மீண்டும் வருகிறது. இதன் மூலம் பல்வேறு இலக்கியக் கருத்துக்களை உங்களோடு நான் பரிமாறிக் கொள்வேன். கண்ணபிரான் பேரருளால் காலமெல்லாம் இது தழைத்தோங்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

ஒரு வருடம் கழித்து வெளியான ஆண்டுமலரில், “ஒரு வயது நிறைந்த 'கண்ணதாசன்' ஆண்டுமலர் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இந்த ஓராண்டில் வாசகர்களிடையே ஒரு புதிய இலக்கிய விழிப்பையும், விரும்பிப்படிக்க வேண்டிய உற்சாகத்தையும் 'கண்ண தாசன்' இதழ் ஏற்படுத்தியிருக்கிறதென்றால், அது மிகையாகாது. ஆம்; 'கண்ணதாசனு'க்கென்று ஒரு புதிய பாணி என்றும் உண்டு.

புதிய சிந்தனைகளையும், புதிய எழுத்தாளர்களையும் 'கண்ணதாசன்' உருவாக்கும். முற்றிலும் இலக்கியதுக்காக இலக்கிய உணர்வோடு நடத்தப்படும் 'கண்ணதாசன்', கடந்த ஆண்டைப் போலவே பல புதிய சாதனைகளை இந்த ஆண்டும் ஏற்படுத்திக் காட்டும்.” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தலையங்கம் தொடங்கி ஐயம் அகற்று (கேள்வி-பதில் பகுதி) , கவிதைகள், கட்டுரைகள், கதைகள், குறுநாவல்கள் , துணுக்குகள் , பிறமொழிக் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், வரலாற்றாய்வுகள், நூல்நயம் என இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கண்ணதாசன் இதழ் இடமளித்தது.

என் ஆர்.தாசனின் தமிழாக்கத்தில் மலையாள மொழிக் கவிதாயினி பாலாமணி அம்மாளின் கவிதை, சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த, இப்ரஹீம் ஷெரீஃப் இந்தியில் எழுதிய சிறுகதை, பத்மன் எழுதிய 'ஒரு கூடு காலியாகிறது. வீ. கோவிந்தராசன் எழுதிய 'பிரச்னைகள் ஓயப்போவதில்லை' போன்ற சிறுகதைகள், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய 'வாலி - ஒரு புதிய கண்ணோட்டம்' ஆய்வுக் கட்டுரை, விட்டல் ராவ் எழுதிய திருட்டு', தேவபாரதி எழுதிய 'அடிமையின் கோபம்', ஜே.வி.நாதனின் 'வயிறு' போன்ற சிறுகதைகள் கண்ணதாசன் இதழில் வெளிவந்தன. கண்ணதாசன் எழுதிய 'அவளோர் அற்புத ராகம்', 'ஸ்ரீகிருஷ்ண அந்தாதி', 'நன்றோ! தீதோ?', 'குட்டிக் கதைகள்' போன்ற படைப்புகளும் கண்ணதாசன் இதழில் வெளியாகின. மூத்த தமிழறிஞர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை பலருக்கும் ‘கண்ணதாசன்’ வாய்ப்பளித்தது. ஜெயகாந்தனின் , ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ தொடர் இவ்விதழில் வெளியானதுதான். கண்ணதாசனின் புகழ்பெற்ற படைப்புகளான ‘ஸ்வர்ண சரஸ்வதி', 'ஸ்ரீகிருஷ்ண மந்திரம்', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'வனவாசம்’. 'செப்பு மொழிகள்', 'காதலில் வளர்ந்த காமம்', 'காமத்தில் பிறந்த ஞானம்', 'பர்த்ருஹரி காவியம்' போன்றவை கண்ணதாசனில் தொடராக வெளிவந்தவைதான்.

கவிஞர் கண்ணதாசன்
இதழிலிருந்து ஒரு கேள்வி-பதில்

ஜனவரி 1978, கண்ணதாசன் இதழில் வெளி வந்த ‘ஐயம் அகற்று’ (கேள்வி– பதில்) பகுதியிலிருந்து ஒரு கேள்வியும் பதிலும்

கேள்வி: கவிஞர் நாஞ்சில் ஷா, சென்னை – 48
மலை போன்ற தத்துவத்தை
மலை வாழைப் பழமே யாக்கி
நிலையான தமிழ்த்தேன் பாகில்
நியமமுடன் சேர்த்து நல்கும்
கலைஞானக் கவிதை வேந்தே!
காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்
தலைமேலே அமரப் போகும்
சாதனை தான் எப்போ தென்பீர்?
கண்ணதாசன் பதில்
நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்
அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

பங்களிப்பாளர்கள்

கண்ணதாசன் இதழுக்கு பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆய்வாளர்கள் சிறந்த பங்களிப்புகளைத் தந்துள்ளனர். அவர்களில் சிலரது பட்டியல் கீழ்காணுவது.

மற்றும் பலர்.

கண்ணதாசன் இதழ்கள் மறு பதிப்பு

கண்ணதாசன் இதழ்களை, அதன் சாதனைகளை நினைவுகூரும் வண்ணம், கண்ணதாசன் பதிப்பகம், மீண்டும் பதிப்பித்துள்ளது.

வரலாற்று இடம்

தனக்கென்று ஒரு கொள்கையோடு கண்ணதாசன் இதழ் வெளிவந்தது. இவ்விதழ் ஒருபோதும் பெண்களின் படங்களை அட்டையில் வெளியிட்டதில்லை. வரலாற்றுச் சம்பவங்களைச் சுவைபடத் தந்தது; மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டுக்கும் அதிகப் பக்கங்களை ஒதுக்கியது. மொழிபெயர்ப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தது . இந்தியாவின் பிற மொழிகளில் படைக்கப்பட்ட முற்போக்குப் படைப்புகளையும் அதிகம் வெளியிட்டது. பதினைந்தாயிரம் வரை விற்பனையான இவ்விதழுக்குக் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தமிழின் குறிப்பிடத்தகுந்த இடைநிலை இலக்கிய இதழ்களுள் கண்ணதாசன் இதழுக்கு முக்கிய இடமுண்டு.

உசாத்துணை


✅Finalised Page