under review

பூவை.எஸ்.ஆறுமுகம்

From Tamil Wiki
பூவை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பூவை (பெயர் பட்டியல்)
பூவை எஸ் ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம் (ஜனவரி 31, 1927 - 2003) தமிழ் எழுத்தாளர். கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்.பொன்னி, காதல், மனிதன் போன்ற இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

பூவை ஆறுமுகம் ஜனவரி 31, 1927-ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவுற்றக்குடி என்னும் கிராமத்தில் அரு.சுப்ரமணியம்- வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தவர். பூவுற்றக்குடியில் ஆரம்பக்கல்வியும் புதுக்கோட்டையில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

கல்வி முடிந்தவுடன் வங்கியில் வேலைக்குச் சென்றார். ஆனால் எழுத்தின்மேல் இருந்த ஆர்வத்தால் வேலையை விட்டு இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றும்பொருட்டு சென்னை சென்றார். பின்னர் ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலர் ஆகப் பதவி ஏற்றுக் கொண்டார். அப்பதவியில் இருந்தபோது ஏலக்காய் பற்றி ஒரு நூலை எழுதினார். ஏலக்காய் என்னும் அரசு இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பூவை உமாபதியின் மகன் பூவை மணி ஓர் எழுத்தாளர். பூவை பதிப்பகம் என்னும் நிறுவனத்தை அவர் நடத்துகிறார்.

இதழியல்

அரு. ராமநாதன் நடத்திய காதல் இதழில் துணை ஆசிரியராக சென்றார். பின்னர் விந்தன் நடத்திய மனிதன் இதழிலும் முருகு சுப்ரமணியன் ஆசிரியராக இருந்த பொன்னி இதழிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அரசுப்பணியில் ஏலக்காய் என்னும் இதழின் ஆசிரியராக இருந்தார். பணி ஓய்வுக்குப்பின் ஜி.உமாபதி நடத்திய உமா இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

பூவை எஸ்.ஆறுமுகம் 1947-ல் சுதேசமித்திரன் இதழில் தன் முதல் கதை ’தளர்ந்த நெஞ்சம்’ த்தை எழுதினார். அதை அவ்விதழில் ஆசிரியராக இருந்த சாண்டில்யன் தேர்வுசெய்தார். எஸ்.ஆறுமுகம் என்ற பெயரில் கதைகள் வெளியாயின. பூவை எஸ். ஆறுமுகம் என இவர் பெயரை மாற்றியவர் கல்கி. பிறைசூடி, கதைசொல்லி கார்த்திகைபாலன், இளையபிரான், மறைநாயகன் போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். கல்கி , மனிதன், காதல், கலைமகள் உட்பட அக்காலத்து இதழ்களில் எழுதினார். நாடகங்கள், நடைச்சித்திரங்கள் ஆகியவையும் எழுதியிருக்கிறார்.

முதல் சிறுகதைத் தொகுதியான கடல்முத்து 1951-ல் வெளிவந்தது. 1961-ல் இவருடைய ஓரங்கநாடகமான மகுடி ஆனந்தவிகடன் நாடகப்போட்டியில் பரிசுபெற்றது. இவருடைய தாயின் மணிக்கொடி என்னும் சிறார் நாவல் அப்போதைய முதல்வர் பக்தவல்சலம் முன்னுரையுடன் வெளிவந்தது. கல்கி முதல் அகிலன் வரை , ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை போன்ற திறனாய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார். 1968-ம் ஆண்டில் இதோ ஒரு சீதாப்பிராட்டி என்னும் நாடகத்துக்காகவும் தெய்வம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்னும் சிறுகதை தொகுதிக்காகவும் தமிழக அரசு விருது பெற்றார். இதோ ஒரு சீதாப்பிராட்டி என்னும் நாடகம் இன்னொரு சீதை என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வந்தது.

மறைவு

பூவை எஸ்.ஆறுமுகம் 2003-ல் மறைந்தார்

விருதுகள்

  • 1966 தமிழக அரசு விருது (பூவையின் சிறுகதைகள்)
  • 1968 தமிழக அரசு விருது (தெய்வம் எங்கே போகிறது)
  • 1968 தமிழக அரசு விருது (இதோ ஒரு சீதாப்பிராட்டி)
  • 2002 லிலி தேவசிகாமணி விருது
  • 2002 உமாபதி அறக்கட்டளை விருது
நாட்டுடைமை

பூவை எஸ்.ஆறுமுகத்தின் படைப்புகள் 2009-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கிய இடம்

பூவை எஸ். ஆறுமுகம் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கிராமியச்சூழலை சித்தரிக்கும் கதைகளில் அவருடைய தனித்தன்மை வெளிப்படுகிறது. அன்னக்கிளி அவருடைய சிறந்த நாவல். ஒரு கிராமத்து பெண்ணின் சுதந்திரமான வாழ்க்கையை இயல்பாகச் சித்தரிக்கும் நாவல் அது.

நூல்கள்

சிறுகதை
  • கடல்முத்து
  • அமிர்தம்
  • விளையாட்டுத்தோழி
  • காதல்மாயை
  • ஆலமரத்துப் பைங்கிளி
  • அந்தித்தாமரை
  • கால்படி அரிசி
  • ஆத்மா
  • இனியகதை
  • தாய்வீட்டுச்சீர்
  • திருமதி சிற்றம்பலம்
  • முதல் காளாஞ்சி
  • வேனில் விழா
  • மகாத்மாகாந்திக்கு ஜே
  • அமுதவல்லி
  • நிதர்சனங்கள்
நாவல்
  • தங்கச்சம்பா
  • பத்தினித்தெய்வம்
  • மருதாணிநகம்
  • அவள் ஒரு மோகனம்
  • அன்புத்தாய் மேகலை
  • கதாநாயகி
  • உயிரில் கலந்தது
  • கரைமணலும் காகித ஓடமும்
  • பத்தினிப்பெண் வேண்டும்
  • களத்துமேடு
  • கன்னித்தொழுவம்
  • சமுதாயம் ஒரு சைனா பஜார்
  • தாய்மண்
  • சொல்லித்தெரிவதில்லை
  • அன்னக்கிளி
  • சீதைக்கு ஒரு பொன்மான்
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
  • தேவலோக பாரிஜாதம்
  • நித்யமல்லி
  • நிதர்சனங்கள்
  • நீ சிரித்த வேளை
  • பூமணம்
  • பொன்மணித்தீபம்
  • இலட்சியபூமி
  • விதியின் நாயகி
  • விதியின் யாமினி
  • வெண்ணிலவு நீ எனக்கு
  • ஜாதிரோஜா
குறுநாவல்
  • இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்
  • மழையில் நனையாத மேகங்கள்
  • ஊர்வசி
  • விளையாட்டுத்தாலி
சிறார் இலக்கியம்
  • தாயின் மணிக்கொடி
  • அந்த நாய்க்குட்டி எங்கே?
  • இளவரசி வாழ்க
  • மாஸ்டர் உமைபாலன்
  • ஓடிவந்த பையன்
  • சீதைக்கு ஒரு பொன்மான்
  • பாபுஜியின் பாபு
  • பாரதச்சிறுவனின் வெற்றிப்பரிசு
நாடகம்
  • மகுடி
  • தெம்மாங்கு தெய்வானை
  • இதோ இன்னொரு சீதாப்பிராட்டி
கட்டுரைகள்
  • கல்கி முதல் அகிலன் வரை
  • ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை
  • நலம்தரும் மருந்துகள்
  • புனைபெயரும் முதல்கதையும்
  • அன்னை தெரேசா
  • கவிஞரை சந்தித்தேன்
  • பிரசவகால ஆலோசனைகள்
  • பேறுகால பிரச்சினைகள்
  • உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்
  • தரைதட்டியது
  • தமிழ்நாட்டுக் காந்தி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:26 IST