சோமலெ
சோமலெ (சோம. இலக்குமணன் செட்டியார்; சோமசுந்தரம் லெட்சுமணன் செட்டியார்: பிப்ரவரி 11, 1921-நவம்பர் 4, 1986) தமிழின் பயண இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல் என்று பல்வேறு துறைகளில் பல நூல்களை எழுதியவர். பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். நகரத்தார் பற்றிய இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
பிறப்பு, கல்வி
சோமலெ தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில், பிப்ரவரி 11, 1921அன்று, சோமசுந்தரம் செட்டியார்-நாச்சம்மை ஆச்சி தம்பதியினருக்குப் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்தபின் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் பம்பாயில் உள்ள ‘ஹாரிமன் இதழியல் கல்லூரி’யில் இதழியலில் பட்டயம் பெற்றார்.
தனி வாழ்க்கை
1937-ம் வருடம் சோமலெவுக்கு நாச்சம்மை ஆச்சியுடன் திருமணம் நடந்தது. மகள்கள் : திருவத்தாள், மீனாட்சி, மல்லிகா, சீதா. ஒரே மகன் சோமசுந்தரம். ஆரம்பத்தில் சிறிதுகாலம் விவசாயத் தொழில் செய்து வந்த சோமலெ, பின் வணிகத்தில் ஆர்வம் கொண்டார். தொழில் நிமித்தமாக 1947-48-ல் பர்மாவுக்குப் பயணம் மேற்கொண்டார். ஏ.கே. செட்டியாரின் ‘அமெரிக்க நாட்டில்’ நூல், சோமலெவுக்கு உலகச் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது குடும்ப வணிகம் தொடர்பாக 1948-ல், சோமலெ வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஃபிரான்ஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹவாய் என்று பல நாடுகளுக்குப் பயணம் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
தனது வெளிநாட்டுப் பயண அனுபவம் குறித்து, “வணிகனாகச் சென்றேன்; ஒரு எழுத்தாளனாகத் திரும்பி வந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கும் சோமலெ, தனது அனுபவங்களைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதினார். சோமலெயின் முதல் கட்டுரையை அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் வெளியிட்டார். வரலாறு, நாட்டுப்புறவியல், இதழியல் என்று பல்வேறு துறைகள் பற்றி கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார் சோமலெ. ஆங்கிலத்தில் 20-க்கும் மேற்பட்ட நூல்களையும், தமிழில் 60-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
பயண இலக்கியம்
சோமலெ எழுதிய ‘அமெரிக்காவைப் பார்’ என்ற நூலைப் படித்ததால்தான் தன்னுள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது என்று குறிப்பிட்டுள்ளார், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தொடர்ந்து ‘ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்’ என்ற நூலை எழுதினார் சோமலெ. அடுத்து கனடா, சுவீடன், தாய்லாந்து முதல் இந்தோனேசியா வரை தாம் சென்ற பத்து நாடுகள் பற்றி ’உலக நாடுகள் வரிசை’ என்ற தலைப்பில் நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகள் வரிசையில் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபுக் குடியரசு, நைஜீரியா போன்ற 12 நாடுகளைப் பற்றிய நூல்கள் வெளியானது.
பயண இலக்கியம் பற்றி சோமலெ, “பிரயாண நூல்கள் பிற இலக்கியங்களைப் போல வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. அவற்றைப் படிக்கும் போது வெறும் புள்ளி விவரங்களாக மட்டும் இருத்தல் கூடாது. பிரயாண நூல்களைப் படிக்கும் மக்களில் சிலர் தாங்களும் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாதவர்கள். ஆசிரியருடைய கண் கொண்டு தாமும் வெளிநாடுகளைப் பற்றி அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் படிக்கக் கூடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
செட்டிநாடும் செந்தமிழும்
சோமலெ.வின் முக்கியமான நூல்களுள் ஒன்று ‘செட்டிநாடும் செந்தமிழும்’. 600 பக்கங்களுக்கும் மேற்பட்ட இந்த நூலில் நகரத்தாரின் வாழ்க்கைமுறை கலாச்சார ப்பங்களிப்பு ஆகியவற்றை விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
மாவட்ட நூல்கள் வரிசை
பதிப்பாளர் செல்லப்பன் உதவியுடன் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அவற்றை ஆவணப்படுத்தி மாவட்ட நூல்கள் வரிசையை எழுதினார். .
வளரும் தமிழ்
1901 முதல் 1953 வரை தமிழில் வெளிவந்த நூல்களைப் பற்றிய விவரத் தொகுப்பினை ‘வளரும் தமிழ்’ என்ற தலைப்பில், சாகித்ய அகாதமி நிறுவனத்திற்காக உருவாக்கி அளித்துள்ளார் சோமலெ. இந்நூல் தமிழ் உரை நடையின் தோற்றம் முதல், நூல் வெளியிடப் பெற்ற நாள் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சி குறித்த வரலாற்றுத் திறனாய்வு நூலாகும்.
இதழியல் ஆய்வு
சோமலெ எழுதி, சென்னை பல்கலைகழகம் வெளியிட்ட 'தமிழ் இதழ்கள்' என்னும், நூல் இதழியல் வரலாறு பற்றிய முக்கியமான திறனாய்வு நூல்.
பிற நூல் பங்களிப்புகள்
நெய்வேலி நிலக்கரித் திட்டம் பற்றி தமிழில் முதன் முதலில் நூல் எழுதியவர் சோமலெ தான். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக குஜராத், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், பஞ்சாப், டில்லி போன்ற பல வட பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையினையும், அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டுச் சூழல்கள் பற்றியும் ஆராய்ந்து பதிவு செய்துள்ளார்.
நாட்டாரியல்
சோமலெ “Folklore of Tamilnadu" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார். அதுவே பின்னர் ”தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்” என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இது பல இந்திய மொழிகளில் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டது. நாட்டுப்புறப்பாடல்கள் பற்றி ஆராய்ந்து பல்வேறு கட்டுரைகளை சோமலெ தந்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு
பண்டித மணி கதிரேசன் செட்டியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், காசி, இராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஆலயங்களின் கும்பாபிஷேக மலர்களை வெளியிட்டுள்ளார்.
பொது
பல்வேறு நாட்டின் தூதுவர்களாக விளங்குபவர்களுக்குரிய தகுதிகளையும் பொறுப்புக்களையும், கடமைகளையும் பற்றி சோமலெ எழுதியிருக்கும் ’நீங்களும் தூதுவர் ஆகலாம்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒரு வழிகாட்டி நூலாகும். சோமெலெயின் மகன் சோமலெ சோமசுந்தரம், தந்தையுடன் இணைந்து எழுதிய ”வேளாண்மைப் பல்கலைக்கழகம்” என்ற நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
சாகித்ய அகாதமி, தேசியப் புத்தக நிறுவனம், இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இவரது நூல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டுள்ளன.
கல்விப் பணிகள், பொறுப்புகள்
சோமலெ 1955 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1958 முதல் 1960 வரை செட்டிநாடு அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளராகப் பதவி வகித்தார். 1955 முதல் 1961 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பினை வகித்திருக்கிறார்.ரஷ்ய லெனின் கிராடு பல்கலைக்கழகத்தில் இவர் நூல்கள் பாடமாக வைக்கப்பட்ட்டன. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் பாடத் திட்டங்களுக்கான ஆசிரியராகவும் சோமலெ பணியாற்றியிருக்கிறார்.
தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்துள்ளார். சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்குப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமிக்காக தமிழ் நூல்களின் பட்டியல் தயாரிக்கும் ஆய்வாளராகப் பணிபுரிந்திருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சமூகப் பணிகள்
பிற்காலத்தில் சென்னையை வாழ்விடமாகக் கொண்டாலும் சோமலெ, தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த நெற்குப்பையை மறக்காமல் அவ்வூரில் வங்கி, தொலைபேசி நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் போன்றவை வருவதற்குக் காரணமாக இருந்தார். கீழச்சிவல்பட்டியில் தம் குல முன்னோர்களுள் ஒருவரான ’பாடுவார் முத்தப்பர் கோட்டம்’ அமைக்க மிகவும் உறுதுணையாக இருந்தார்.
பரிசுகள்/விருதுகள்
விருதுகள்
- தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு - ’ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்’ நூலுக்கு.
- தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு (பல படைப்புகளுக்கு)
மறைவு
சோமலே, நவம்பர் 4, 1986-ல் அமெரிக்காவில் வசித்து வந்த மகன் சோமசுந்தரத்திற்கும் கடிதம் எழுதிவிட்டு அதைத் தபாலில் சேர்க்கும் பொருட்டு அண்ணாசாலைத் தபால் நிலையத்திற்குச் சென்றார். கடிதத்தைப் பெட்டியில் சேர்ப்பித்த சில நிமிடங்களில் தபால் நிலையத்திலேயே மயங்கி விழுந்து மரணமுற்றார்.
நினைவேந்தல்
சோமலெ பற்றி டாக்டர் இரா. மோகன், ’செந்தமிழ்த் தேனீ சோமலெ’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இதனை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சோமலெ பற்றி டாக்டர் நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசையில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
சோமலெவின் நூல்கள் சில ஆர்கைவ் தளத்திலும், தமிழ் இணைய மின்னூலகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளன.
சோமலெவின் வாரிசான சோமலெ சோமசுந்தரம், தந்தையின் நினைவாகப் பல சமூக நற்பணிகளை முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் வசிக்கும் அவர், அங்குள்ள மாணவர்கள் தமிழ் கற்க, ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ என்பதை உருவாக்கி அதன் மூலம் செயலாற்றி வருகிறார். தனது பாட்டனாரின் நினைவாக, மேலூர் அருகே உள்ள பேப்பனையம்பட்டியில் தனது தந்தை அமைத்த ‘சோமசுந்தர விநாயகர்’ ஆலயத்தினைச் சீர்திருத்திக் கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார்.
தனது தந்தை சோமலெவின் நினைவாக, சோமலெ பிறந்த நெற்குப்பையில் அமைத்திருக்கும் ‘சோமலெ நினைவு கிளை நூலகம்' மூலம் கல்வியியல் சார்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். தன் தந்தையின் நினைவாக ‘சோமலெ அறக்கட்டளை' என்பதனை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளைச் செயல்படுத்தி வருகிறார்.
வரலாற்று இடம்/மதிப்பீடு
தமிழில் பயண இலக்கியத்தை முன்னெடுத்தவர்களில் ஏ.கே.செட்டியாருக்குப் பின் சோமலே முக்கியமானவர். இந்திய சுதந்திரத்திற்குப் பின் அச்சும் வாசிப்பும் வளர்ச்சிஅடைந்த போது பொது அறிவுக்கான தேடல் அதிகரித்தது. இரண்டாவது உலகப்போர் குறித்த செய்திகள் வழியாக அன்றைய மக்கள் உலகநாடுகளைப் பற்றி அறிமுகம் அடைந்திருந்தனர். மேலும் அறிய விரும்பினர். அந்த தேவையை நிறைவேற்றியவை சோமலெ எழுதிய நூல்கள். அவை தமிழ்வாசகர்களை உலகத்தை உணரவும், உலகக்குடிமகனாக எண்ணவும் செய்தவை. கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, டாக்டர் மு.வ., டாக்டர் வ.சுப. மாணிக்கம், நெ.து. சுந்தர வடிவேலு, டாக்டர் ஔவை நடராசன், முனைவர் தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்களால் பாரட்டப்பட்டவர் சோமலெ. 'சோமலெ உழைப்பின் வடிவம். அவரே ஒரு பெரிய நிறுவனம். இந்நூற்றாண்டில் தமிழுக்குப் புதுமைப் பொலிவு தந்தவர்" என்கிறார், வ.சுப. மாணிக்கம். “கருத்துகளைத் தொகுப்பதிலும், செய்திகளைச் சேகரிப்பதிலும் செந்தமிழ்த் தும்பி. பேசிக் கொண்டிருக்கும்போதே சிறு குறிப்புக் கிடைத்தாலும் குறித்துக் கொள்வார். புதிய நண்பர்களைக் கண்டால், அவர்களது ஊர்ப் புறத்துச் செய்திகளைக் கேட்டறிவார். செல்வம் சேர்ப்பது போல் செய்திகளைக் குறிப்பார். தமிழ்ப்பணி, அயராத உழைப்பு, அரியது. பெரியது. போற்றுதலுக்குரியது” என்பது டாக்டர் ஔவை நடராசன் அவர்களின் கருத்து.
நூல்கள்
பயண நூல்கள்
- நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.
- அமெரிக்காவைப் பார்
- ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்
- என் பிரயாண நினைவுகள்
- இமயம் முதல் குமரி வரை
- நமது தலைநகரம்
- பிரயாணம் ஒரு கலை
- பிரயாண இலக்கியம்
- உலக நாடுகள்
- வட மாநிலங்களில் தமிழர்
உலக நாடுகள் வரிசை
- கனடா
- கவீடன்
- குவாயிட்
- தாய்லந்து
- பிரான்ஸ்
- ஜப்பான்
- பீஜித் தீவுகள்
- வத்திக்கான்
- மொரிசியஸ்
- இந்தோனேசியா
ஆப்பிரிக்க நாடுகள் வரிசை
- ஆப்பிரிக்கா
- ஐக்கிய அரபுக் குடியரசு
- எத்தியோப்பியா
- தென் ஆப்பிரிக்கா
- கானா
- நைஜீரியா
- மேற்கு ஆப்பிரிக்கா
- கிழக்கு ஆப்பிரிக்கா
- வடமேற்கு ஆப்பிரிக்கா
- நடு ஆப்பிரிக்கா
- சஹாரா
- சூடானும் காங்கோவும்
நமது தமிழ்நாடு நூல் வரிசை
- சேலம் மாவட்டம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- வட ஆர்க்காடு மாவட்டம்
- தென் ஆர்க்காடு மாவட்டம்
- திருநெல்வேலி மாவட்டம்
- செங்கற்பட்டு மாவட்டம்
- இராமநாதபுர மாவட்டம்
- மதுரை மாவட்டம்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- பண்டிதமணி
- விவசாய முதலமைச்சர்
பிற நூல்கள்
- தமிழ் இதழ்கள்
- தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்
- வளரும் தமிழ்
- செட்டிநாடும் செந்தமிழும்
- அலைகடலுக்கு அப்பாலும் நகரத்தார்களின் ஆலயப் பணிகள்
- நீங்களும் தூதுவர் ஆகலாம்
- நெய்வேலி
- வேளாண்மைப் பல்கலைக்கழகம் (சோமலெ & சோமலெ. சோமசுந்தரம் இணைந்து எழுதியது)
- நான் கண்ட விழாக்கள்
- பல்சுவைக் கட்டுரைகள்
- சிறுவர் இலக்கியம்
- சிறுவர்களுக்கு ஒரு சில கதைகள்
சமய நூல்கள், விழா மலர்கள்
- பழனி
- ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர்
- சென்னை நகரத்தார் மாணவர் சங்கம் சிறப்பு மலர்
- கழனிவாசல் நகரத்தார் வைகாசி விசாகப் பொன்விழா மலர்
- நாசிக்-பஞ்சவடி ஸ்ரீ கார்த்திக் சுவாமி மந்திர் குட முழுக்கு மலர்
- இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகச் சிறப்பு மலர்
- அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
- கோவிலூர் அருள்மிகு திருநெல்லைநாயகி உடனாய அருள்மிகு கொற்றவாள் ஈசுவரன் கோவில் திருக்குட நீராட்டு மலர்
- நெற்குப்பை நகரத்தார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா மலர்
- தில்லை மூலட்டான ஈசுவரர் கோயில் குடமுழுக்கு விழா மலர்
- காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் திருக்குட நீராட்டு மலர்
- பெங்களூர் கெஞ்சனஹள்ளி அருள்மிகு அன்னை இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில் திருக்குட நீராட்டு முதலாண்டு நிறைவு விழாச் சிறப்பு மலர்
- கோட்டையூர் அருள்மிகு மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நீராட்டு மலர்
ஆங்கில நூல்கள்
- Travel Literature in Tamil
- Folklore of Tamil Nadu
- Palani
- European Impact on Modern Tamil Writing and Literature
- AVM's Guide to South India
- Coast to Coast Kaleidoscope A Pictoral Tour of Rotary District 320.
தட்டச்சுப் படி
விந்தை மனிதர் வேதரத்தினம் பிள்ளை
உசாத்துணை
- செந்தமிழ்த் தேனீ சோமலெ - முனைவர் இரா.மோகன், மணிவாசகர் பதிப்பகம்
- சோமலெ, நிர்மலா மோகன், இந்திய இலக்கியச் சிற்பிகள், சாகித்திய அகாதமி வெளியீடு: தமிழ் இணைய மின்னூலகம்
- சோமலெ பதித்த சுவடுகள்: இலக்கிய வீதி இனியவன்: தினமணி
- முன்னோடி: சோமலெ: தென்றல் தமிழ் ஆன்லைன்.காம்
- உலகம் சுற்றிய தமிழர்: சோமலெ: உண்மைக்கதிர்
- சோமலெ - உள்ளூர் வரலாற்று எழுதியல் முன்னோடி: கீற்று இணையதளம்
- சோமலெ: உலகம் சுற்றிய தமிழர்ள்: இந்து தமிழ் திசை
- வளரும் தமிழ்: தமிழ் இணைய மின்னூலகம்
- சோமலெ நினைவு கிளை நூலகம்: ஆசிரியர்.காம்
- நீங்களும் தூதுவர் ஆகலாம்: தமிழ் இணைய மின்னூலகம்
- சோமலெ தமிழ் இதழியல் வரலாறு. சிலிக்கான்ஷெல்ப்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:18 IST