under review

மீனாட்சி புத்தக நிலையம்

From Tamil Wiki

மீனாட்சி புத்தக நிலையம் (1960) மதுரையில் தொடங்கப்பட்ட பதிப்பு நிறுவனம். செ. செல்லப்பச் செட்டியார் தனது நண்பர் குழந்தையன் செட்டியாருடன் இணைந்து இப்பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். மீனாட்சி புத்தக நிலையம் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் தொடங்கி தமிழண்ணல் வரை பல எழுத்தாளர்கள், தமிழறிஞர்களின் நூல்களை வெளியிட்டது. தனது வெளியீடுகளுக்காக சாகித்ய அகாதெமி பரிசு உள்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றது.

தோற்றம்

பதிப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த செ. செல்லப்பன் செட்டியார், தனது நண்பர் குழந்தையன் செட்டியாருடன் இணைந்து மதுரையில், 1960-ல் தொடங்கிய நிறுவனம் மீனாட்சி புத்தக நிலையம். சில ஆண்டுகளுக்குப் பின் குழந்தையன் செட்டியார் பிரிந்து சென்றதால் மீனாட்சி புத்தக நிலையம் செல்லப்பனின் தனி நிறுவனமானது. தனித்துவமிக்க பல நூல்களை வெளியிட்டது.

செ. செல்லப்பனின் மறைவுக்குப் பின் அவரது மகன் செ. முருகப்பன் மீனாட்சி புத்தக நிலையத்தை நிர்வகித்தார்.

வெளியீடுகளும் விருதுகளும்

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை தேர்ந்தெடுத்த படைப்புகளை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. ஜெயகாந்தனின் பெரும்பாலான நூல்களை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. மீனாட்சி புத்தக நிலைய வெளியீடுகளில், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், தி.ஜானகிராமனின் 'சக்தி வைத்தியம்', தொ.மு.சி. ரகுநாதனின் 'பாரதி காலமும் கருத்தும்' ஆகிய நூல்கள் சாகித்ய அகாதமி விருது பெற்றன.

மீனாட்சி பதிப்பக நிலையம், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நூலை மக்கள் பதிப்பாக ஐந்து ரூபாய்க்கு வெளியிட்டது. அந்நூல் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. ஜெயகாந்தன் எழுதி, மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட 'சுந்தரகாண்டம்' நூலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது கிடைத்தது. ஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள், பிற வகைகள் என அவரது படைப்புகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம், கல்கி, அண்ணாத்துரை, மேலாண்மை பொன்னுச்சாமி போன்றோரின் நூல்களை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ‘மணிக்கதைகள்’ என்ற தலைப்பில் பல தொகுதிகளாக வெளிக் கொணர்ந்தது.

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் ஆய்வு நூல்கள் பலவற்றை வெளியிட்டது. பேராசிரியர், முனைவர் தமிழண்ணலின் ஆய்வியல் அறிமுகம் தொடங்கி, தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம், யாப்பருங்கலக்காரிகை என 39 நூல்களை வெளியிட்டது. எம்.ஏ. சுசீலா போன்ற தமிழ்ப் பேராசிரியர்களது இலக்கிய நூல்களையும், கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டது. மீனாட்சி பதிப்பக வெளியீடுகள் பலவும் மாநில அரசின் சிறந்த நூல்களுக்கான விருதைப் பெற்றன.

மீனாட்சி புத்தக நிலைய நூல்கள்

கீழ்காணும் நூல்களை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது.

  • சில நேரங்களில் சில மனிதர்கள்
  • பிரம்மோபதேசம்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • சினிமாவுக்குப் போன சித்தாளு
  • வாழ்க்கை அழைக்கிறது
  • ரிஷி மூலம்
  • பாவம் இவள் ஒரு பாப்பாத்தி
  • பாரீஸுக்கு போ!
  • மூங்கில் காட்டு நிலா
  • இனிப்பும் கரிப்பும்
  • கை விலங்கு
  • புகை நடுவினிலே
  • பிரளயம்
  • அப்போதே சொன்னேன்
  • அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
  • பெரிய புராண ஆராய்ச்சி
  • புதிய வார்ப்புகள்
  • புதிய நோக்கில் திருவாசகம்
  • நன்னூல் எழுத்து-காண்டிகையுரை
  • நாவல் இலக்கியம்
  • நீதி நூல்கள்
  • பகுத்தறிவு முத்துச்சரம்
  • பாட்டிமார்களும் பேத்திமார்களும்
  • பனுவல் அகராதி
  • பிசிராந்தையார் நாடகம்
  • உயிர்த்தேன்
  • இலக்கிய விமர்சனம்
  • கங்கையும் காவிரியும்
  • சமுதாய இலக்கியம்
  • மணிக் கதைகள்
  • ரகுநாதன் கதைகள்
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  • க்ஷணப்பித்தம்
  • காவியப் பரிசு
  • கவிதைகள்
  • புதுமைப்பித்தன் வரலாறு
  • புயல்
  • குடிமக்கள் காப்பியம்
  • சிலப்பதிகார ஆராய்ச்சி
  • இலக்கண வழிகாட்டி
  • அலங்காரம் - அகப்பொருள் - புறப்பொருள்
  • தமிழ் மணம்
  • பாரதி - காலமும் கருத்தும்
  • புனை பெயரும் முதல் கதையும்
  • முதல் பொது நூலக இயக்கம்
  • நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - அமெரிக்க நூலக வரலாறு
  • சைவ நன்னெறி
  • திருக்குறளில் அறிவியல்
  • இனிப் படமாட்டேன்
  • அவன் ஒருவனல்ல
  • இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்
  • தடை ஓட்டங்கள்
  • பெண் - இலக்கியம் - வாசிப்பு
  • இலக்கிய இலக்குகள்
  • தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும், பெண்ணும்
  • புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
  • கதை அரங்கம்
  • சிந்துவெளி நாகரிகம்
  • பெண்களும் நெருக்கடிகளும்
  • தடங்கள்
  • தி.ஜானகிராமன் சிறுகதைகள்
  • அந்த அக்காவைத்தேடி
  • அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்
  • ஆயுத பூஜை
  • இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
  • இதழியல்
  • இந்த நேரத்தில் இவள்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை
  • இறந்த காலங்கள்
  • இல்லாதவர்கள்

மற்றும் பல

மீனாட்சி புத்தக நிலையம் பதிப்பித்த எழுத்தாளர்கள்

மற்றும் பலர்

ஆவணம்

2010-ல் மதுரையில் நிகழ்ந்த மீனாட்சி பதிப்பகத்தின் பொன்விழாவை ஜெயகாந்தன் தலைமையேற்று நடத்தினார். மீனாட்சி புத்தக நிலைய நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்திலும், நூலகம் தளத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

மீனாட்சி புத்தக நிலையம் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற இலக்கியவாதிகளின் நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. தெ.பொ.மீ., தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வெளியிட்டது. இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, கதை, கவிதை, நாடகம், கட்டுரைகள் எனப் பல்வேறு வகைமைகளில் நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டது. நகரத்தார்கள் தொடங்கி நடத்திய முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றாகவும், மதுரையின் குறிப்பிடத்தகுந்த பதிப்பகங்களுள் ஒன்றாகவும் மீனாட்சி புத்தக நிலையம் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page