under review

செ. செல்லப்பன்

From Tamil Wiki
செ. செல்லப்பன்

செ. செல்லப்பன் (செல்லப்பச் செட்டியார் செல்லப்பன்) (மே 04, 1922 – நவம்பர் 07, 1996) பதிப்பாளர். மதுரையில் மீனாட்சி புத்தக நிலையம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், தி. ஜானகிராமன் போன்றோரது நூல்களைப் பதிப்பித்தார். மீனாட்சி புத்தக நிலைய வெளியீடுகளில் சில சாகித்ய அகாதமி விருது பெற்றன.


பிறப்பு, கல்வி

செ. செல்லப்பன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளத்தில், மே 04, 1922 அன்று, செல்லப்ப செட்டியார் - அடைக்கம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். அரிமளத்தில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். புதுமுக வகுப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

செ. செல்லப்பன், பர்மாவுக்குச் சென்று உறவினரின் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். சில வருடங்களுக்கு பின் தமிழகம் திரும்பினார். பதிப்பகத் துறைப் பணியில் ஈடுபட்டார்.

செ. செல்லப்பன் மணமானவர். மனைவி: முத்தம்மாள் ஆச்சி. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள்.

பதிப்பு

தொடக்கம்

செ. செல்லப்பன், தனது குடும்ப உறவினரான கண. இராமநாதன் தொடங்கி நடத்திய ஸ்டார் பிரசுரத்தில் 1949 முதல் பணியாற்றினார். பதிப்பகத் தொழில் பற்றிய நுணுக்கங்களைக் கற்றார். ஸ்டார் பிரசுரத்தின் பங்குதாரர் ஆகி, 1953-ல், ஸ்டார் பிரசுரத்தின் கிளையை மதுரையில் தொடங்கி நடத்தினார்.

மீனாட்சி புத்தக நிலையம்

1960-ல், ஸ்டார் பிரசுரத்திலிருந்து விலகிய செல்லப்பன். நண்பர் குழந்தையன் செட்டியாருடன் இணைந்து மதுரையில் மீனாட்சி புத்தக நிலையத்தைத் தொடங்கினார். மீனாட்சி புத்தக நிலையத்தின் முதல் வெளியீடாக, டாக்டர் மொ.அ. துரை அரங்கசாமி எழுதிய 'அன்பு நெறியே தமிழர் நெறி' எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து ஜெயகாந்தனின் ‘இனிப்பும் கரிப்பும்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பின் குழந்தையன் செட்டியார், மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்து விலகி ஐந்திணைப் பதிப்பகத்தைத் தொடங்கினார். மீனாட்சி புத்தக நிலையம் செல்லப்பனின் தனி நிறுவனமாயிற்று. அதன் மூலம் ஜெயகாந்தன், தொ.மு.சி. ரகுநாதன், தி. ஜானகிராமன், எஸ். இராமகிருட்டிணன், புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலரது நூல்களை வெளியிட்டார்.

பதிப்பக விருதுகள்

ஜெயகாந்தனின் பெரும்பாலான நூல்களை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. மீனாட்சி புத்தக நிலைய வெளியீடுகளில், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், தி.ஜானகிராமனின் 'சக்தி வைத்தியம்', தொ.மு.சி. ரகுநாதனின் 'பாரதி காலமும் கருத்தும்' ஆகிய நூல்கள் சாகித்ய அகாதமி விருது பெற்றன. மீனாட்சி பதிப்பக நிலையம் வெளியிட்ட ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நூல் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.

ஜெயகாந்தன் எழுதி, மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட 'சுந்தரகாண்டம்' நூலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது கிடைத்தது. மீனாட்சி பதிப்பக வெளியீடுகள் பலவும் மாநில அரசின் சிறந்த நூல்களுக்கான விருதைப் பெற்றன.

பொறுப்புகள்

  • செ. செல்லப்பன், 1956 முதல் 1958 வரை மதுரை நகரத்தார் சங்கச் செயலராகப் பொறுப்பு வகித்தார்.
  • 1973 முதல் 74 வரை ராமநாதபுரம் வணிகக் கழகப் பொருளாளராகச் செயல்பட்டார்.
  • 1977-78-ல் மதுரை அரிமா சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

விருதுகள்

செ. செல்லப்பன், பதிப்புச் செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

மறைவு

செ. செல்லப்பன், நவம்பர் 07, 1996 அன்று காலமானார்.

நினைவு

செ. செல்லப்பனின் மறைவுக்குப் பின் செல்லப்பனின் இரண்டாவது மகனான செ. முருகப்பன் மீனாட்சி புத்தக நிலையத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். 2010-ல் மதுரையில் நிகழ்ந்த மீனாட்சி பதிப்பகத்தின் பொன்விழாவை ஜெயகாந்தன் தலைமையேற்று நடத்தினார். செ. செல்லப்பனின் நூற்றாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மதிப்பீடு

செ. செல்லப்பன், பதிப்பாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் செயல்பட்டார். செ. செல்லப்பன் கண. முத்தையா, கண. ராமநாதன், வானதி திருநாவுக்கரசு, ச. மெய்யப்பபன் வரிசையில் நகரத்தார் இன மக்களின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002.
  • செ. செல்லப்பன்: தினமணி இதழ் கட்டுரை


✅Finalised Page