under review

உயிர்த்தேன்

From Tamil Wiki

To read the article in English: Uyirthen. ‎

உயிர்த்தேன்

உயிர்த்தேன்( 1967) தி.ஜானகிராமன் எழுதிய நாவல்.சமகால சமூக நிகழ்வுகளை எதிரொலித்து, பெண்களை சமுதாயத்தின் மையமாக முன்னிருத்திய படைப்பு. பெண்ணின் வழிகாட்டலில், ஒரு தனி மனிதனின் கனவு ஒரு கிராமத்தையே மாற்றிய கதையினூடே ஆண் பெண் உறவுச்சிக்கல்களையும் பேசும் நாவல்.

எழுத்து, வெளியீடு

தி.ஜானகிராமன் தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். ஜானகிராமனின் உயிர்த்தேன் ஆனந்த விகடனில் 1966-ம் வருடம் தொடர் கதையாக வெளிவந்தது. எழுதப்பட்ட காலத்திற்கேற்ப கிராம நிர்மாணம், சமூக ஒற்றுமை, பெண்கள் தலைமையேற்பு ஆகியவற்றைக் கதையினூடே வலியுறுத்திய நாவல்.

முதல் பதிப்பை ஐந்திணை பதிப்பகம் மார்ச் 1967-ல் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு நவம்பர் 1972, மூன்றாம் பதிப்புஏப்ரல் 1976, நான்காம் பதிப்பு டிசம்பர் 1986 மற்றும் ஐந்தாம் பதிப்பு ஏப்ரல் 1994-லும் வெளிவந்தன.

கதைச்சுருக்கம்

பூவராகன் சென்னையில் நல்ல முறையில் தொழில் செய்து பணம் ஈட்டி, நடுவயதிற்குமேல் தன் சொந்த ஊரான ஆறுகட்டிக்குத் திரும்பி. மாமன் மகன் சிங்குவின் உதவியுடன் புது வீட்டுக்கு குடிபோகிறான்.விவசாயம் செய்துகொண்டே தன் தந்தையின் நினைவாக ஊர்க் கோவிலை சீரமைக்கிறான். அவனுடைய வீட்டை அதுவரை அனுபவித்துக்கொண்டிருந்த ஊர்த்தலைவன் பழனியின் காரணம் புரியாத எதிர்ப்பும் கோபமும் வளர்கின்றன.

கார்வார் கணேசப்பிள்ளையும் அவர் மனைவி செங்கம்மாவும் வயல் மேற்பார்வையிலும் வீட்டு வேலைகளிலும் உதவுகிறார்கள். ஊரே வியக்கும் அழகும், ஒற்றை ஆளாக திருமண விருந்தையே சமைக்கும் திறமையும், நறுவிசும் உடைய செங்கம்மாவை பூவராகன் தேவதையாக தெய்வமாகப் பார்க்கிறான்.

முதுகெலும்பில்லாமல், ஒருவர்மேல் ஒருவர் ஐயமும், சோம்பலும் கொண்டு இரண்டு பட்டுக் கிடக்கும் ஊரோ கோவிலைச் சீரமைப்பதில் பூவராகனுக்குத் தோள் கொடுப்பதில்லை. கோவில் பணி முடிவதற்குமுன் ஊரையே ஒன்றாக்கிப் பார்க்கும் பேராவலில் பூவராகன் செங்கம்மாவின் யோசனைப்படி அதற்காக ஊரின் கூட்டு விவசாயத்துக்கும் பொறுப்பேற்கிறான். வயல்கள் பொன்னாகச் சொரிய, ஊர் ஒன்றுபடுகிறது.செங்கம்மாவையே ஊர்த்தலைமையாக நியமிக்கிறான். தேர்ந்த சிற்பியும் உற்ற நண்பனுமான ஆமருவியைக் கோவில் பணியில் ஈடுபடுத்துகிறான். ஊர் ஒன்றானாலும் பழனி செங்கம்மாவின் மேல் வன்மத்துடன், குரோதத்துடன் விலகியே நிற்பதுடன் ஊர்ப்பொதுப் பணத்தை ஒப்படைக்கவும் மறுக்கிறான். உண்மையில் பழனிக்குத் செங்கம்மா மேல் தீராக் காதலோ என்ற சந்தேகம் ஆமருவிக்கு.

செங்கம்மாவின் மறு வார்ப்பைப் போன்றவளான பூவராகனின் தோழி அனுசூயாவும் குடமுழுக்கில் பங்கேற்க வருகிறாள். ஒருவரை ஒருவர் இனம் கண்டுகொள்கிறார்கள்.செங்கம்மாவுக்கு பழனியின் விலக்கம் உறுத்துகிறது. அவனை சந்தித்துப்பேசி ஊர்ப்பொதுப் பணத்தை வாங்கப் போனவள் பழனி தன் மேல் தீராக் காதலுடன் பனியாய் உருகி வெயிலாய்க் காய்வதை உணர்கிறாள். தான் மணமானவள் என நினைவூட்டி,தன் நியாயத்தையும் தெரியப்படுத்துகிறாள். அவனோ தன் காதலை அழுத்தமாக ஒரு செய்கை மூலம் தெரியப்படுத்திவிட்டு, ஊர்ப்பணத்தைத் தருகிறான். கோவில் குடமுழுக்கில் கலந்துகொள்ளாமல் ஊரை விட்டுப் போகிறான். திரும்ப வரவேயில்லை.

முக்கிய கதாபாத்திரங்கள்

 • பூவராகன் - கதையின் நாயகன். செல்வந்தன்,அன்பான கணவன்,தந்தை, வைணவம் பழகுபவன்
 • ரங்கநாயகி - பூவராகனின் மனைவி
 • சிங்கு - பூவராகனின் மாமன் மகன்
 • லட்சுமி - சிங்குவின் மனைவி
 • வரதன் - பூவராகன் மற்றும் பெண்களுக்கு ஆசார்யர்(குரு)
 • கணேச பிள்ளை - கணக்குப் பிள்ளை , வயலை மேற்பார்வை செய்பவர்
 • செங்கம்மா - கணேசப்பிள்ளையின் மனைவி, பேரழகும், அன்பும் கருணையும் வாய்த்தவள்
 • அனுசூயா - செங்கம்மாவின் மற்றொரு பரிணாமம், சுதந்திரப் பிறவி
 • பழனி - காரணமில்லாது ஊர் மேல் வெறுப்பு பாராட்டும் பழைய ஊர்த் தலைவன்,
 • ஆமருவி - தேர்ந்த சிற்பி, பூவராகனின் ஆப்த நண்பன்
 • திருநாவுக்கரசு, ஐயாரப்பன், ஆதிமூலம் - ஊரின் சில நிலக்கிழார்கள்

இலக்கிய மதிப்பீடு

தி.ஜாவின் நாவல்களில் சமகாலத் தொடர்பும், சமூக அவதானிப்பும் அதிகம் துலங்கும் நாவல் இதுவே. தனிநபர்களின் லட்சியவாதம் சமூகத்திற்கானதாக ஆகிறது. ஆயினும் உயிர்த்தேன் ஒரு இலக்கிய முயற்சி அல்ல. சில அழகிய தருணங்கள் இருந்தபோதும் இதை ஒருமேம்பட்ட வணிக நாவலாகவே கொள்ள முடியும்.

நாவலுக்கு முன்னுரையாக, கட்டியம் கூறுதலாக தி.ஜா சொல்லும் வரிகள்

சீலமும் புத்தியும் தர்மமும் காட்டினன்
சொர்ணத் தீவினன் செவ்வடி பொலிக;
ஞாலமும் அன்பும் ஒன்றெனக் கண்ட எம்
சந்திரப் பிறையின் செந்நகை பொலிக

அவர் உயிர்த்தேன் மூலம் சொல்லவருவதும் அதுவே -’ஞாலமும் அன்பும் ஒன்று

எழுத்தாளர் வண்ணதாசன் தனது கடிங்களின் தொகுப்பு நூலான எல்லோர்க்கும் அன்புடன் நூலின் ஒரு கடிதத்தில் தி.ஜானகிராமன் நூல்களில் தனக்குப் பிடித்தமானது அம்மா வந்தாளோ மரப்பசுவோ அல்ல உயிர்த்தேன் தான் எனவும் அனுசுயா பாத்திரம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள் எதுவுமே இலக்கியத்திற்குரிய நுட்பத்துடனும் கூர்மையுடனும் சொல்லப்படவில்லை. வணிகக், கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான சித்திரங்களே உள்ளன - எழுத்தாளர் ஜெயமோகன்

உசாத்துணை


✅Finalised Page