under review

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்

From Tamil Wiki

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு முதல்) என்பவை காப்பியம் என்ற இலக்கண வகைமைக்குள் பொருந்தும் வகையில் கிறித்தவம் சார்ந்த பேசுபொருட்களை அடிப்படையாகக் கொண்டவை. மேற்கிலிருந்து தமிழகத்திற்கு வந்து இறங்கிய கிறித்தவக் குருமார்கள் தமிழ் மொழியைக் கற்று விவிலியத்தையும், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் வழிபாட்டுப் பாடல்களையும் மொழிபெயர்ப்பு செய்ததைத் தொடர்ந்து இங்குள்ள தமிழ் இலக்கியங்களைக் கற்று சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, கீர்த்தனை ஆகிய பல்வேறு வகையான கிறித்தவ மதம் சார்ந்த இலக்கியங்களையும் அகராதிகளையும் படைத்தனர். அந்த வரிசையில் தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் தேம்பாவணி. இதனைத் தொடர்ந்து பல கிறித்தவக் காப்பியங்கள் தமிழில் எழுதப்பட்டன. இவை புராணம், காப்பியம், காவியம், பாவியம் ஆகிய பெயர்களிலும் வழங்கப்பட்டன.

வரலாறு

பொ.யு. 1706-ல் சீர்திருத்தத் திருச்சபையின் அருட்பணியாளரான பர்த்தலோமேயு சீகன்பால்கு தரங்கம்பாடியில் வந்து தங்கி கிறித்தவ மதப் பரப்புரையில் ஈடுபட்டார். சீகன்பால்கு தமிழ் மொழியைக் கற்று விவிலியத்தையும், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் வழிபாட்டுப் பாடல்களையும் தமிழாக்கம் செய்து அச்சிட்டு வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பே கிறித்துவ இலக்கியத்தின் தோற்றத்திற்கு அடிப்படை.

பொ.யு 1711-ல் தமிழ் நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் தமிழ் கற்று சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, கீர்த்தனை ஆகிய பல்வேறு வகையான கிறித்தவக் காப்பியங்களையும் அகராதியையும் படைத்தார். இவற்றில் ஒன்றான தேம்பாவணி தமிழ்க் கிறித்துவத்தின் முதல் காப்பியமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல விதமான பா வடிவில், மரபிலக்கணத்தில் பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. கிறித்தவக் காப்பியத்தின் இரு முக்கியமான காப்பியங்களான தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும் தழுவல் காப்பியங்கள். பூங்காவனப் பிரளயம், சுவர்க்க நீக்கம் ஆகியவை மொழிபெயர்ப்புக் காப்பியங்கள்.

கிறித்தவக் காப்பியங்களின் வகைப்பாடுகள்

  • திருமறை வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள முழு வரலாற்றையோ அல்லது பழைய ஏற்பாடு பகுதியில் அமைந்துள்ள தொடக்ககால வரலாற்றை மட்டுமோ அல்லது திருமறையின் ஒரு தனி நூலின் வரலாற்றையோ எடுத்துரைக்கும் காப்பியங்கள்
  • கிறுஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள் - கிறுஸ்துவின் வரலாற்றை முழுமையாகவோ பகுதியாகவோ விரித்துரைக்கும் காப்பியங்கள்
  • திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையில் இடம்பெறும் முக்கிய மாந்தர் சிலரின் வரலாற்றை விளக்கும் காப்பியங்கள்
  • திருமறைசாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையில் இடம்பெறாத கிறித்தவ அருட் தொண்டர்கள் மற்றும் புனிதர்களின் வரலாற்றை விளக்கும் காப்பியங்கள்
  • தழுவல் காப்பியங்கள் - பிறமொழிக் காப்பியங்களைத் தழுவிப் படைக்கப்பட்ட தமிழ்க் காப்பியங்கள்
  • மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் - பிறமொழியிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட காப்பியங்கள்
  • மக்களினக் காப்பியங்கள் - ஓர் இன மக்களின் தொன்மை வரலாற்றை விவரிக்கும் வகையிலான காப்பியங்கள்.

கிறித்தவக் காப்பியங்களின் பேசுபொருள்

  • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நற்செய்தி நூல்களின் அடிப்படையில் விவரித்தல்
  • இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளின் வரலாற்றை விவரித்தல்
  • விவிலியம் முழுவதிலுமுள்ள செய்திகளைச் சுருக்கமாகச் சொல்லுதல்
  • விவிலியத்திலுள்ள மாந்தர்களை விரித்துரைத்தல் (யோசேப்பு, எஸ்தர், யூதித்து, பவுல்)
  • இயேசு கிறிஸ்துவின் அடியவர்களை விவரித்தல் (புனித சவேரியார், அன்னை தெரேசா, தேவசகாயம் பிள்ளை, பிரான்சிஸ் அசிசியார், மகராசன் வேதமாணிக்கம்)

பட்டியல்

வ.எண் கிறித்தவக் காப்பியம் ஆசிரியர் ஆண்டு
1 தேம்பாவணி வீரமாமுனிவர் 1728
2 யோசேப்புப் புராணம் கூழங்கைத் தம்பிரான் 1795 க்கு முன்னர்
3 கிறிஸ்தாயனம் ஜான் பால்மர் 1865
4 ஞானாதிக்கராயர் காப்பியம் சாமிநாதர் 1865
5 திருவாக்குப் புராணம் கனகசபைப் புலவர் 1866
6 ஞானானந்த புராணம் தொம் பிலிப்பு நாவலர் 1874
7 அர்ச். சவேரியார் காவியம் அந்தோனிமுத்து நாயகர் 1882
8 பூங்காவனப் பிரளயம் சாமுவேல் வேதநாயகம் தாமஸ் 1887
9 கிறிஸ்து மான்மியம் ஸ்தொஷ் ஐயர் 1891
10 இரட்சணிய யாத்திரிகம் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை 1894
11 சுவர்க்க நீக்கம் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் 1895
12 சுவிசேட புராணம் சுகாத்தியர் 1896
13 திருச்செல்வர் காவியம் பூலோகசிங்க அருளப்ப நாவலர் 1896
14 பரவர் புராணம் த. அருளப்ப முதலியார் 1909
15 ஏசுநாதர் சரிதை சுத்தானந்த பாரதியார் 1926
16 திருஅவதாரம் மாணிக்கவாசகம் ஆசிர்வாதம் 1946
17 இரட்சகராகிய இயேசுநாதர் ஞானாபரணம் 1950
18 நசரேய புராணம் ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை 1950 களில்
19 சுடர்மணி ஆரோக்கியசாமி 1976
20 கிறிஸ்து வெண்பா 1000 கி.மு.ம. மரியந்தோனி 1979
21 இயேசு காவியம் கண்ணதாசன் 1981
22 அருளவதாரம் வி. மரிய அந்தோனி 1983
23 மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் பவுல் இராமகிருட்டிணன் 1986
24 இயேசு புராணம் ஈழத்துப் பூராடனார் (க.தா.செல்வராசகோபால்) 1986
25 எஸ்தர் காவியம் இராபின்சன் குரூசோ 1986
26 மகிமையின் மைந்தன் அன்பம்மாள் ஏசுதாஸ் 1986
27 கன்னிமரி காவியம் த. பத்திநாதன் 1987
28 மோட்சப்பயணக் காவியம் ஏ.த. ஜோதிநாயகம் 1991
29 தெய்வ சகாயன் திருச்சரிதை சு.தாமஸ் 1993
30 அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் துரை. மாலிறையன் 1994
31 உலகின் ஒளி இரா. பார்த்தசாரதி 1995
32 கிறிஸ்து காவியம் வாகரைவாணன் 1995
33 அருள்நிறை மரியம்மைக் காவியம் துரை. மாலிறையன் 1996
34 இயேசு அருட்காவியம் வி.ஜி. சந்தோசம் 1997
35 அருட்காவியம் மதலை முத்து 1999
36 இதோ மானுடம் ம. அருள்சாமி 2001
37 மீட்பரசி லோட்டஸ் எடிசன் 2002
38 எபிரேயப் பேரழகி எசுத்தார் இரா. தாவீது 2002
39 அருள் மைந்தன் மாகாதை பொன். தினகரன் 2002
40 பவுலடியார் பாவியம் ம. யோவேல் 2003
41 உலகஜோதி இறையரசன் 2005
42 அன்பு மலர் அன்னை தெரேசா ம. அருள்சாமி 2006
43 திருத்தொண்டர் காப்பியம் சூ. இன்னாசி 2007
44 ஆதியாகம காவியம் சா. சாமிமுத்து 2008
45 ஞானஒளி தூய சவேரியார் காவியம் நாஞ்சில் நாரண தொல்காப்பியன் 2013
46 இயேசுநாதர் வெண்பா ஆபிரகாம் கிரி 2016
47 காய பிரான்சிசு காவியம் ஜாண் பேட்ரிக் 2016
48 விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் 2020

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2024, 10:08:35 IST