under review

திரு அவதாரம் (காப்பியம்)

From Tamil Wiki

திரு அவதாரம் கிறித்தவக் காப்பியங்களுள் ஒன்று. இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூலை இயற்றியவர் போதகர் ராவ்சாகிப் மாணிக்கவாசகம் ஆசீர்வாதம். இதன் ஒரு பகுதி நற்போதகம் இதழில் வெளியானது. ஆசீர்வாதத்தின் மறைவுக்குப் பின், அவரது மகன் ஆர்தர் ஆசீர்வாதம், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.


பிரசுரம், வெளியீடு

திரு அவதாரம், கிறிஸ்தவக் காப்பிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர், போதகர் ராவ் சாகிப் மாணிக்கவாசகம் ஆசீர்வாதம். தமிழ்ச் சபைத் தீபிகை, நற்போதகம் ஆகிய இதழ்களில் இக்காப்பியத்தின் சில பகுதிகள் தொடராக வெளிவந்தன. இந்நூலின் ஒரு பகுதி, பிப்ரவரி 1936, நற்போதகம் இதழில் தொடங்கி, ஆகஸ்டில் நிறைவு பெற்றது. மாணிக்கவாசகம் ஆசீர்வாதத்தின் மறைவுக்குப் பின், அவரது மகன் ஆர்தர் ஆசீர்வாதம், 1979-ல், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டார். மண்ணுலகில் மக்களுக்காக, இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்து வந்ததை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதால், இந்நூல் ‘திரு அவதாரம்’ என்று பெயர் பெற்றது.

ஆசிரியர் குறிப்பு

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூருக்கு அருகிலுள்ள சூரங்குடி என்னும் சிற்றூரில், ஜூலை 1, 1865 அன்று, மாணிக்கவாசகம் பிள்ளை - முத்துநாயகம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். 1899-ம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, இறைத் தொண்டராகப் பணியாற்றினார். தமிழில் புலமை பெற்றிருந்த ஆசிர்வாதம், 1936-ல், ‘திரு அவதாரம்’ என்ற தலைப்பில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்து 1946-ல் நிறைவு செய்தார். ஜூலை 13, 1948-ல் காலமானார்.

நூல் அமைப்பு

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம் இயேசு பெருமானின் பிறப்பு தொடங்கி, அவர் இறந்து, உயிர்த்தெழுந்து விண்ணகம் ஏறிச் செல்வது வரையிலான நிகழ்வுகளைக் காப்பியமாகப் படைத்தார். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய சீடர்கள் இயேசுவின் வாழ்க்கையையும் பணிகளையும் தத்தம் நோக்கில் நான்கு நூல்களாகத் தந்தனர். அவை நற்செய்தி நூல்கள் (GOSPELS) என்று அழைக்கப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு திரு அவதாரம் நூலை இயற்றினார் மாணிக்கவாசகம் ஆசிர்வாதம்.

இந்நூல் பாலகாண்டம், உத்தியோக காண்டம், ஜெயகாண்டம், ஆரோகண காண்டம் என நான்கு காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும், பல்வேறு பர்வங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பர்வத்தின் உள்ளேயும் உட்தலைப்புகளுடன் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்து, பாயிரங்கள் நீங்கலாக 2294 விருத்தப்பாக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலில் தனித்தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்களும் இடம்பெற்றுள்ளன.

பால காண்டம்

இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவித்தல் தொடங்கி, தேவாலயத்தில் திருமைந்தன் பிரதிஷ்டை செய்யப்படுதல், ஏரோதுவின் பாதகத்தால் எகிப்து சென்று மீண்டு நாசரேத்தூர் செல்வது போன்ற செய்திகள் பாலகாண்டத்தில் இடம்பெற்றுள்ளன. பாலகாண்டத்தில் 143 பாடல்கள் உள்ளன.

உத்தியோக காண்டம்

உத்தியோக காண்டம் இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. சகரியா முன் தூதன் தோன்றுவது தொடங்கி, தூதனின் ஊழியம், இயேசு திருமுழுக்குப் பெற்றது, இயேசு செய்த அற்புதங்கள், இயேசு பன்னிரு சீடரைத் தேர்ந்தெடுத்தல், இயேசுவின் ஊழியம், சீடனின் கடமை, இயேசுவின் பவனி, நியாயத் தீர்ப்பு, திருவிருந்து நியமனம், சீடர் இடறல், இறுதி உரையாடல், சீடரைப் பிரிதல் முதலான செய்திகள் அடங்கியுள்ளன. உத்தியோக காண்டத்தில் 1756 பாடல்கள் உள்ளன.

ஜெயகாண்டம்

இக்காண்டம், சாத்தானை வென்ற பர்வம், மரணம் வென்ற பர்வம் என இரண்டு பர்வங்களைக் கொண்டது. இயேசுவை, யூதாஸ் காட்டிக் கொடுத்தல், பேதுருவின் மறுப்பு, விசாரணை, சிலுவைப்பாதை, பாடுகளின் முடிவு, இயேசு சிலுவையில் அறையப்படுதல், பின் உயிர்த்தெழுதல், உயிர்த்தெழுந்த இயேசு காட்சி அளித்தல் போன்ற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஜெயகாண்டத்தில் 350 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆரோகண காண்டம்

இறுதிக் காண்டமான ஆரோகண காண்டம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்களில் நடந்த நிகழ்வுகளையும், அவர் பரலோகம் சென்றதனையும் விளக்குகிறது. ஆரோகண காண்டத்தில் 37 பாடல்கள் உள்ளன.

பாடல் நடை

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது

காலமேதோன் றாமுனுள வார்த்தையதே
காலமாதி யந்தமிலா வார்த்தையதே
மூலதெய்வ மோடிருந்த வார்த்தையதே
மூலதெய்வ மாயிருந்த வார்த்தையதே
ஞாலமாமெல் லாந்தனது வன்மையினால்
ஞானமாய்ப் படைத்ததோரே வார்த்தையதே
காலமாக ரூபமாகி மானுடனாய்க்
காசினியிற் தோன்றிய தாம் வார்த்தையதே

இயேசுவின் பிறப்பு

என்னோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார்புவில்
என்னோஇவ் வற்புதம்பார் எம்முருவங் கொண்டாரன்றோ
என்னோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யேயானாரே
என்னோஇவ் வற்புதத்தை எப்படிமறப் பாய்பாவி

யூதாஸ், இயேசு பெருமானைக் காட்டிக் கொடுத்தல்

எவனையான் முத்தஞ் செய்வேன் இனமவன் என்றே கொள்வீர்
அவனைநீர் பிடித்துக் கட்டி யவசர மாய்க்கொண் டேபோம்
அவனுமை மயக்கித் தானே யகன்றுமே போகா வண்ணம்
எவனுமெச் சரிப்பே யாக எனுங்குறி சொன்னோன் தானே.

இயேசு, சாத்தானுடன் உரையாடி வெல்லல்

நன்றியற் றோரிவரே நாளின்று மப்படியே
நன்றியற் றோரிவர்க்காய்த் துன்புறுதல் - நன்றன்றே
நன்றியற் றோரிவரை நன்றியோ ராக்குதற்கே
நன்றியற்று கின்றேனே நான்.

பாவம்வெ றுப்பிலையோ பாவம்பொ ருந்துமோநீர்
பாவமுஞ் சாபமு மானீரே - பாவம்
பாவப்ப லியாகப் பாவஞ்சா பம்மானேன்
பாவந்தொ லைப்பதற்கே பார்.

பிதாவைப்பி ரியாதே பேணியி ருந்தீரே
பிதாவின்மு கம்மறையப் பின்பென்ன - பிதற்றுவீர்
பேரன்போ மாறாதே பேர்மல்மு டிந்தவுடன்
மாறித்தெ ரிந்துவிடு மால்.

அக்காலை யாதாமை யாட்டிவைத் தாயலவோ
இக்காலை யாகாதுன் வஞ்சந்தான் - இக்காலை
அப்பாற்போ சாத்தானே யார்ப்பா டஞ்செய்யாதே
இப்பாலு னக்கொன்று மில்.

விமலனையே வெல்லுவேன் என்றானே சாத்தான்
அமலனோ வென்றவனை யார்த்தார் - சமலன்
பதறியே யோடியே பாய்ந்தானே சாத்தான்
பதரென்ன வேபறந்தப் பால்.

மதிப்பீடு

கிறித்தவக் காப்பியங்களுள் விரிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட நூல், திரு அவதாரம். ஆன்ம ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் என்பதால் உவமைகள், அணிகள், வருணனைகள் போன்ற இலக்கிய நயங்களுக்கு இந்நூலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நற்செய்தி நூல்களிலுள்ள செய்திகளைக் கோர்வைப்படுத்தி, திருமறை வாக்குகளின் அடிப்படையில் எளிமையான கவிதைகளாக்கி, இக்காப்பியத்தைப் படைத்துள்ளார் மாணிக்கவாசகம் ஆசிர்வாதம். கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்களுள் முக்கியமான ஒரு காப்பிய நூலாக திரு அவதாரம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page