under review

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்

From Tamil Wiki
மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் - பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன்

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் (2011), இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பிய நூல். பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன் இந்நூலை இயற்றினார்.

பிரசுரம், வெளியீடு

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியத்தை, பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன், 1986-ல் இயற்றினார் 1987-ல், மு. பவுல் இராமகிருட்டிணனின் மறைவுக்குப் பின் 2011-ல், இப்படைப்பு நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம், காண்டம், காதை என்னும் பிரிவுகளில் அமைந்துள்ளது. இந்நூலில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவை,

  • பிறப்பியற் காண்டம்
  • திருப்பணியுவந்த காண்டம்
  • அறிவுரைக் காண்டம்
  • அருட்புலக் காண்டம்
  • பகைபுலக் காண்டம்
  • வேள்விக் காண்டம்
  • மாட்சிமைக் காண்டம்

-என்பனவாகும். ஒவ்வொரு காண்டமும் ஏழு காதைகளைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள அடிகளின் எண்ணிக்கை 8499.

பிறப்பியற் காண்டம்

முதல் காண்டமான பிறப்பியற் காண்டமானது ஏழு காதைகளைக் கொண்டுள்ளது. அவை,

  • வாய்மொழி வாழ்த்துப் பாடல்
  • கருவுறு காதை
  • கருவுயிர்த்த காதை
  • வழிபடு காதை
  • கரந்துறை காதை
  • காவுகோட் காதை
  • கடந்துசெல் விழாக் காதை
திருப்பணியுவந்த காண்டம்

இரண்டாவது காண்டமான திருப்பணியுவந்த காண்டm ஏழு காதைகளைக் கொண்டுள்ளது. அவை,

  • திருமுழுக்கேற்ற காதை
  • கனிச்சாறருளிய காதை
  • இறை வெளிப்பாட்டுக் காதை
  • உயிர்ப்பு நீரூட்டிய காதை
  • விழாக்காண் காதை
  • நாசரத்தில் நவின்ற காதை
  • நோய் நீக்கு காதை
அறிவுரைக் காண்டம்

மூன்றாம் காண்டமான அறிவுரைக் காண்டத்தில் ஏழு காதைகள் உள்ளன. அவை,

  • அறமுரைத்த காதை
  • எளியோர்க்கருளிய காதை
  • இறையரசறிவித்த காதை
  • கடலையடக்கிய காதை
  • பன்னிருவரைப் பணித்தருள் காதை
  • அருள்முனிவர் குருதிச்சான்றளித்த காதை
  • பசிப்பிணி மருத்துவரின் பரிசுரைத்த காதை
அருட்புலக் காண்டம்

நான்காம் காண்டமான அருட்புலக் காண்டம், ஏழு காதைகளைக் கொண்டுள்ளது. அவை,

  • வளமுரைத்த காதை
  • அகந்தூய்மை அறிவுறுத்திய காதை
  • மூவணியாடிய முதல்வர் பூட்கையுரைத்த காதை
  • பாடுநிலை சுட்டிய காதை
  • கூடாரவிழாக் காதை
  • விடுதலை நெறி பகர்ந்த காதை
  • காணாற்குக் கண்ணளித்தக் காதை
பகைப்புலக் காண்டம்

ஐந்தாவது காண்டமான பகைப்புலக் காண்டத்தில், ஏழு காதைகள் உள்ளன. அவை,

  • நல்ல மேய்ப்பர் நலமுரைத்த காதை
  • மன்றாட்டுக் கற்பித்த காதை
  • கூடாவொழுக்கத்தின் கேடுரைத்த காதை
  • உய்த்துணர்த்திய காதை
  • உவமையுரைத்த காதை
  • உற்ற நண்பனை உயிர்த்தெழுப்பிய காதை
  • காணாமற் போனதைக் கண்டுபிடித்தக் காதை
வேள்விக் காண்டம்

ஆறாவது காண்டமான வேள்விக் காண்டத்தில், ஏழு காதைகள் இடம்பெற்றுள்ளன. அவை,

  • உலாவரு காதை
  • வரும்பொருளுரைத்த காதை
  • திருவிருந்தளித்த காதை
  • நச்சுக்கலன் நயந்தருள் காதை
  • பழிசுமத்திய காதை
  • பாடேற்ற காதை
  • உயிர்நீத்த காதை
மாட்சிமைக் காண்டம்

இறுதிக் காண்டமான மாட்சிமைக் காண்டம், ஏழு காதைகளைக் கொண்டுள்ளது. அவை,

  • உயிர்த்தெழுந்த காதை
  • அழற் கொழுந்தூட்டிய காதை
  • மேலறைக் காட்சிக் காதை
  • கடற் காட்சிக் காதை
  • வானிவர்ந்த காதை
  • தெரிந்துகோட் காதை
  • திருமன்றம் தோன்றிய காதை

உள்ளடக்கம்

விவிலியத்திலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலுள்ள செய்திகளையெல்லாம் ஒன்று திரட்டிக் காப்பிய வடிவில் தந்துள்ளார் ஆசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சி கொடுத்து, பரலோகம் சென்றது வரையிலான புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளைக் காப்பியக் கதையாகப் பயன்படுத்தியுள்ளார். ‘காவுகோட் காதை’ என்னும் ஒரு காதையில் மட்டும் பழைய ஏற்பாட்டுச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம், பெரும்பான்மை ஆசிரியப்பா யாப்பில் அமைந்துள்ளது. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நேரிசை ஆசிரியப்பா, வஞ்சி நிலைத்துறை, நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்தாழிசை, கலிவிருத்தம், வெண் கலிப்பா, அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், ஆறடி நாற்சீர் ஒருவிகற்பக் கொச்சகக் கலிப்பா, கலிவெண்பாட்டு, அறுசீர் ஆசிரிய விருத்தம், தரவுக் கொச்சகக் கலிப்பா என இக்காப்பிய நூலில் பல்வேறு யாப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விவிலியக் கருத்துகளை காப்பிய அமைப்பில் எளிமையாகச் சொல்லவேண்டும் என்னும் நோக்கத்தால், இந்நூலில் வர்ணனைகள் அதிகம் இடம்பெறவில்லை.

நூலில் பல்வேறு வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவாசகக் கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பேராசிரியர் பவுல் இராமகிருட்டிணன் சிலப்பதிகாரத்தின் மீது ஈடுபாடு உள்ளவர். சிலம்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியத்திற்கு சிலப்பதிகாரம் என இளங்கோவடிகள் பெயர் சூட்டியது போன்று, மனுக்குலத்தை மீட்பதற்காக வந்த இறை மைந்தனைப் பற்றிய காப்பியத்திற்கு மீட்பதிகாரம் எனப் பெயர் சூட்டியுள்ளார் நூலின் ஆசிரியர் பவுல் இராமகிருட்டிணன்.

பாடல் நடை

காப்புச் செய்யுள்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம்
சொல்லாண்ட வாய்மைத் திருமகனேநின்
சேவடித் திருத்தாமங் காப்பு

வாழ்த்துப் பாடல்

தந்தையைப் போற்றுதும் தந்தையைப் போற்றுதும்
மைந்தரைத் தந்தருளி மாந்தரைக் காத்தற்கு
முந்தவே யோர்ந்தருள லான்.

மைந்தரைப் போற்றுதும் மைந்தரைப் போற்றுதும்
நைந்துட லாணியில் ஞான்றுயிர் நீப்பினும்
முந்த னுமிர்த்தெழுத லான்.

தூயாவி போற்றுதும் தூயாவி போற்றுதும்
நேயமாய் மன்றத்தில் நேர்ந்துமிர் காப்பாராய்
வாய்மை வழிநடத்த லான்

இயேசுவின் பெருமை

உலகம் யாயவையுந் தாமுள வாக்கியவ்
வுலகினிற் றோன்று மொவ்வொரு மகற்கும்
இலகொளி காட்டும் இறையரு ளாகி
மலர்தலை யுலகத்து மன்னிய வொருவரை
அலகையி லிருளா லறிந்தில துலகு

இயேசு செய்த அற்புதம்

குழியி லாடொன் றோய்வு நாளில்
வழிதப்பி வீழின் விழியுடை யீரே
தூக்கி யெடுத்துத் துயர்துடைப் பீரன்றோ
ஆக்கம் யாதென வறிந்துகொள் வீரென்று
குறையுடைக் கையனை நீட்டுக வென்றார்
மறுகை போலது மாறிற்று நீட்டவும்
வல்லவ ரியேசுவைக் கொல்லவே யூதர்
பொல்லா வெரோதியர் தம்முடன் சூழ்ந்தார்

மதிப்பீடு

“சிலப்பதிகாரத்தை மனதில் வைத்து அதன் அடிப்படையில் விவிலிய நற்செய்தி நூல்களிலுள்ள செய்திகளை ஒன்று சேர்த்துக் காப்பியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கிறித்தவக் காப்பிய வரலாற்றில் ஒரு மைல் கல் என்கிறார்” முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்.

“பல்சமயவுறவும் பல்தொழிற்பட்டறிவும் பன்னூற் பயில்வும் பட்டாங்கின் தெளிவும் வாய்க்கப் பெற்ற பவுல் இராமகிருட்டிணர், பாருக்குப் பாங்குடன் வழங்கிய மாண் காப்பியம் மீட்பதிகாரம். இக்காப்பியம் முன்மொழியாராம் மீட்புச் செய்தியை ஆதியோடந்தமாய் அழகுற விளக்கிப் பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும் ஓண் காப்பியமாய் மிளிர்கிறது.” என்ற குறிப்பு, ‘மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்’ நூலில் காணப்படுகிறது

உசாத்துணை

  • மீட்பதிகாரம் அமேசான் தளம்
  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடு, முதல் பதிப்பு, 2013.


✅Finalised Page