under review

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

From Tamil Wiki

கலிப்பாவின் உறுப்புகள் நிற்கும் முறையிலிருந்து மாறியும் மயங்கியும் மிகுந்தும் குறைந்தும் வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா இலக்கணம்

  • கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.
  • கலிப்பாவின் உறுப்புகள் வழங்கி வரும் முறையிலிருந்து மாறி வரும்.
  • கலிப்பாவின் உறுப்புகள் மிகுந்து அல்லது குறைந்து வரும்.
  • கலிப்பாவின் உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று மயங்கி வரும்.

உதாரணப் பாடல்

(தரவு-2)

மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால்
நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம்
இரைநயந் திறைகூரு மேமஞ்சார் துறைவகேள்.


மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா
தெழுமுன்னீர் பரந்தொழுகு மேமஞ்சார் துறைவகேள்.


(தாழிசை-6)

கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறவலனே யென்றியால்.


கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைஇய சிறுபுறத்தோள்
தெண்பனிநீ ருகக்கண்டுந்திரியலனே யென்றியால்,


நீர்பூத்த நிரையிதழ்க்க ணின்றொசிந்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்.

  
கனைவரல்யாற் றிகுகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து
நினையுமென் னிலைகண்டும் நீங்கலனே யென்றியால்.

 

கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப்
புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்.

  

வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத்
தாழுமென் னிலைகண்டும் தாங்கலனே யென்றியால்.


(தனிச்சொல்)

அதனால்


(அராகம்)

அடும்பம லிறும்பி னெடும்பனை மிசைதொறுங்
கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு.

  
செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர்
நெறிதரு புரவியின் மறி தருந் திமில்.

  
அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைதரு திரையொடு கரைபொருங் கடல்.

  
அலங்கொளி ரவிச்சுட ரிலங்கொளி மறைதொறுங்
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.


(தாழிசை) (6)

விடாஅது கழலுமென் வெள்வளையுந் தவிர்ப்பாய்மன்
கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ.


ஒல்லாது கழலுமென் னொளிவளையுந் தவிர்ப்பாய்மன்
நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.


தாங்காது கழலுமென் றகைவளையுந் தவிர்ப்பாய்மன்
நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.

 

மறவாத வன்பினேன் மனனிற்கு மாறுரையாய்
துறவாத தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.

  

காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்
ஏதிலார் தலைசாய யானிற்கு மாறுரையாய்.


இணைபிரிந்தார் மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய்
துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.


(தனிச்சொல்)

எனவாங்கு


(இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)

பகைபோன் றதுதுறை
பரிவா யினகுறி
நகையிழந் ததுமுகம்
நனிவாடிற் றுடம்பு
தகையிழந் தனதோள்
தலைசிறந் ததுதுயர்
புகைபரந் ததுமெய்
பொறையா யிற்றுயிர்


(தனிச்சொல்)

அதனால்


(சுரிதகம்)

இனையது நினையா லனையது பொழுதால்
நினையல் வாழி தோழி தொலையாப்
பனியொடு கழிக வுண்கண்
என்னொடு கழிகவித் துன்னிய நோயே.

- மேற்கண்ட பாடலில் தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம் நான்கும், ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், எட்டம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும் பெற்று நான்கடிச் சுரிதகத்தால் அமைந்துள்ளது. இப்பாடல் கலிப்பாவிற்கு உரித்தான ஆறு உறுப்புகளும் மிகுதியாகவும், குறைவாகவும், பிறழ்ந்தும், மயங்கியும் அமைந்துள்ளதால் இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

உசாத்துணை


✅Finalised Page