under review

கலிவிருத்தம்

From Tamil Wiki

ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைக் கொண்டு, நான்கு அடிகளால் ஆன பாடல் கலிவிருத்தம் எனப்படும். அனைத்து அடிகளிலும் ஒரே அடி எதுகை அமைந்திருக்கும். பல்வேறு வகையான கலிவிருத்தச் சந்தங்கள் இடம் பெறும். சில கலிவிருத்தங்களில் சந்த ஒழுங்கு சற்றுப் பிறழ்ந்து வருதலும் உண்டு.

கலி விருத்தம் - நூற்பா

கலி விருத்தம், நான்கு சீர்களையுடைய அளவடி கொண்டு வரும். இதனை, “அளவடி நான்கின கலிவிருத் தம்மே” -என்கிறது யாப்பருங்கலம்.

ஐஞ்சீர் முடியி னடித்தொகை நான்மையோ
டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை

- என்றும்

நாலொரு சீரா னடந்த வடித்தொகை
ஈரிரண் டாகி யியன்றன யாவையுங்
காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே

- என்றும் கூறுகிறது காக்கைப் பாடினியாரின் காக்கைபாடினியம்.

கலி விருத்தம் இலக்கணம்

  • அளவடிகள் நான்கு கொண்டிருத்தல் வேண்டும்.
  • அனைத்து அடிகளிலும் ஒரே அடி எதுகை அமைதல் வேண்டும்.
  • ஆசிரிய விருத்தம் போலவே நான்கடியிலும் சந்த ஒழுங்கு ஒன்றியிருக்கும். பல்வேறு வகையான கலிவிருத்தச் சந்தங்கள் அமைந்திருக்கும்.
  • ஆசிரிய விருத்தம் போலவே கலிவிருத்தமும் காப்பியங்களில் மிகுதியாக இடம்பெற்றுள்ளது.

உதாரணப் பாடல்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

- மேற்காட்டிய கலிவிருத்தத்தில் இலக்கணப் படி நான்கு அடிகள் உள்ளன. சந்த ஒழுங்கில் நான்கடிகளும் அமைந்துள்ளன. உல, நிலை, அல, தலை என அனைத்து அடிகளிலும் ஒரே அடி எதுகை அமைந்துள்ளதால் இது கலிவிருத்தம் ஆகும்.

உசாத்துணை


✅Finalised Page