under review

காக்கைபாடினியம்

From Tamil Wiki
commonfolks.in

காக்கை பாடினியம் (பொ.யு.ஆறாம் நூற்றாண்டு ) செய்யுள் இலக்கணம் கூறும் ஓர் தமிழ் இலக்கண நூல். இந்த நூல் முழுமையான அளவில் தற்காலத்தில் கிடைக்கவில்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். இந்த நூற்பாக்களையெல்லாம் தொகுத்து இது ஒரு தனி நூலாக இருபதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. 89 நூற்பாக்கள் இதில் உள்ளன. யாப்பருங்கலக்காரிகை காக்கைபாடினியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது.

ஆசிரியர்

இந்த யாப்பிலக்கண நூலை எழுதியவர் காக்கைபாடினியார். காக்கைபாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர் இருந்தனர். சங்க காலத்து பெண்கவிஞர் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார். காக்கைபாடினியம் என்னும் இச்செய்யுளிலக்கண நூலை எழுதிய காக்கைபாடினியார் பிற்காலத்தவர். சிறுகாக்கைபாடினியம் என்று இன்னொரு யாப்பிலக்கண நூலும் உண்டு. இந்த நூலை எழுதியவர் சிறுகாக்கைபாடினியார். இந்த இரண்டு செய்யுளிலக்கண நூல்களிலிருந்து சூத்திரங்களைப் பிற்காலத்து உரையாசிரியர் தங்களுடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளனர் (மறைந்து போன தமிழ் நூல்கள். மயிலை. சீனி.வேங்கடசாமி). இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் முழு வடிவம் கிடைக்காத நிலையில் கிட்டிய நூற்பாக்களைத் தொகுத்து காக்கைபாடினியத்தை மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்தார். இரா. இளங்குமரனார் இப்பாக்களை வகைப்படுத்தி நிரலாக்கி, தொகுத்து நூலாக வெளியிட்டார்.

நூல் தொகுப்பு மற்றும் பதிப்பு

இந்த இரண்டு செய்யுளிலக்கண நூல்களிலிருந்து சூத்திரங்களைப் பிற்காலத்து உரையாசிரியர் தங்களுடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளனர். இதந்நூலின் முழு வடிவம் கிடைக்காத நிலையில் கிடைத்த நூற்பாக்களைத் தொகுத்து காக்கைபாடினியத்தை மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்தார். இரா. இளங்குமரனார் இப்பாக்களை வகைப்படுத்தி நிரலாக்கி, தொகுத்து நூலாக வெளியிட்டார். காக்கைபாடினியத்தில் உள்ள பாக்களைத் தொகுக்க பின்வரும் நூல்கள் உதவின.

இந்நூல்களில் இருக்கும் நூற்பாக்களை, இயற்றிய ஆசிரியர் பெயரால் அடைவு செய்து காக்கைப்பாடினியாரின் நூற்பாக்களைத் தனியாக எடுத்து, யாப்பிலக்கணத்தை மட்டுமே வரையறுத்த நூல் என்பதைக் கண்டறிந்து , எழுத்து , அசை, சீர் , தளை, அடி, தொடை, பா , இனம் , ஒழிபு என யாப்பிலக்கண வைப்பின்படி வகைப்படுத்தி உரையெழுதி வ.சுப. மாணிக்கத்தின் அணிந்துரையுடன் வெளியிட்டார்.

இந்நூற் பகுதிகளை யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். இந்நூல் ஆசிரியரை 'மாப்பெரும் புலவர்' என்று யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பாராட்டியுள்ளார். தொல்காப்பியருக்குப் பின்வந்த யாப்பு நூலாருள் இவர் காலத்தால் முற்பட்டவராகக் கூடும் என்பது அறிஞர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றுக்கு காலத்தால் முற்பட்டது இந்நூல்.

பாடல் நடை

எழுத்தறியத் தீரும் இழிதகமை, தீர்ந்தால் மொழித்திறத்தின்
முட்டறுப்பானாரும் – மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்

நூலின் சிறப்புகள்

தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலக்காரிகைக்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. யாப்பருங்கலமும், காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுவதை நாம் காணலாம். முக்கியமாகப் பாவினக் கொள்கைகள் பெரும்பாலும் இன்று கடைபிடிக்கபட்டு, மேலும் வளர்ச்சி அடைவதற்குக் காக்கைபாடினியத்தைப் பின்பற்றிய யாப்பருங்கலமும், காரிகையுமே முக்கிய காரணங்கள் எனலாம்.

விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்திகைப்பன சுற்றுத்தானே”

என்றோர் சூத்திரம் வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியக் கற்றுக் கொடுக்கிறது.

யாப்பருங்கல விருத்தி

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்,
சொற்றார்தம் நூலுள் தொகுத்து.

என்று காக்கைபாடினியாரை சிறப்பிக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page