under review

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

From Tamil Wiki

காக்கைபாடினியார் நச்செள்ளையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் இயற்றிய 12 பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளன. கரைந்து தலைவனின் வரவை அறிவித்த காக்கையைப் பாடியதால் 'காக்கைபாடினியார்' என சிறப்புப் பெயர் பெற்றார். தன் மகன் போரில் வீர மரணம் அடைந்ததைக்கேட்டு ஈன்ற பொழுதினும் மகிழ்ந்த தாயைப் பாடிய இவரது புறநானூற்றுப் பாடலும் புகழ்பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

காக்கைபாடினியாரின் இயற்பெயர் நச்செள்ளையார். இவரது இயற்பெயர் செள்ளை புலமையினால் நல் என்ற அடைமொழியைப் பெற்றிருக்கலாம். நற்செள்ளை நாளடைவில் நச்செள்ளை எனப்பட்டது. பதிற்றுப்பத்தின் 6-ம் பத்துப் பதிகத்தில் ‘யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்‘ என்பதால் இவர் பெண்பாற்புலர் என்பது தெளிவாகிறது என ரா. ராகவையங்கார் குறிப்பிடுகிறார்[1].

இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயரே அமைந்துவிட்ட சங்காலப் புலவர்களுள் நச்செள்ளையாரும் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

நச்செள்ளையார் பாடியவையாக பதிற்றுப்பத்தில்ஆறாம் பத்தில் பத்துப் பாடல்களும், குறுந்தொகையில்(210) ஓர் பாடலும் , புறநானூற்றில்(278) ஓர் பாடலும் இடம்பெறுகின்றன. பதிற்றுப்பத்தில்ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் மன்னனைப் பற்றி பத்துப் பாடல்கள் பாடி தொள்ளாயிரம் பலம் பொன்னும், நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பதிற்றுப்பத்தில் பாடியுள்ள ஒரே பெண்பாற்புலவர் இவரே. ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். கள்வர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்குதடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது.

அதியமானுக்கு அரசவைப் புலவராய் ஔவையார் அமைந்தது போல, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அவையை நச்செள்ளையார் அணிசெய்தார். பகைவரின் ஒற்றர், ஆடல் மகளிரை அனுப்பி ஒருமுறை வேந்தனை மயக்கக் கருதினர். அதனை உணர்ந்து கொண்ட நச்செள்ளையார், தம் பாட்டுகளால் அக்குறிப்பை உணர்த்தி அவனை உய்வித்தார்.

பொருளீட்டப் பிரிந்து சென்ற தலைவன், தன் மனைவி பிரிவினால் உருகி இளைத்து, துயருற்று இருப்பாள் என எண்ணி திரும்பி வருகிறான். தலைவி மலர்ச்சியுடன் இருப்பதைப்பார்த்து அவளைக் கவனித்துக்கொண்டதற்காக நன்றி சொல்கிறான். தலைவி தன் முற்றத்தில் காக்கை கரைந்ததால் சென்றவர் வருவர் என உறுதி கொண்டு, உடல் பூரித்தாள். உன் நன்றிக்குரியது காக்கையே எனத் தோழியின் கூற்றாக குறுந்தொகையில் (210) காக்கையைப் பாடியதால் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

புறநானூற்றில்(278) தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற செய்தி உண்மையானால் அவன் பாலுண்ட முலைகளை அறுத்தெறிவேன் என்ற அன்னை அவன் வீரமரணம் அடைந்ததைக்கண்டு 'ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே' என்று பாடினார்.

பாடலின் வழி அறிய வரும் செய்திகள்

  • காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் சங்க காலம் தொட்டு நிலவியது.
  • நீத்தாருக்காக காக்கைக்கு சோறளிக்கும் வழக்கம் இருந்தது.
  • போரில் புறமுதுகிடல் மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. புறமுதுகிட்டவனை தாயும் வேண்டாள். வீர மரணம் போற்றப்பட்டது.
  • துணங்கைக் கூத்து ஆடல் வழக்கத்தில் இருந்தது. மன்னனும் மக்களுடன் கைகோர்த்து கூத்தில் பங்குகொண்டான்[2]
  • வழிச்சாலைகளில் இனிய பழமரங்களை வழிப்போக்கர்களின் பொருட்டு வைத்து வளர்ப்பது வழக்கமாக இருந்தது.
  • வானவரம்பன் என்ற மன்னன் தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான். பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை, அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான். வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான். கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

பாடல் நடை

குறுந்தொகை (210)

திணை:முல்லை பிரிந்துவந்த தலைமகன், “நன்காற்றுவித்தாய்” என்றாற்குத் தோழி உரைத்தது.

திண்தேர் நள்ளிகானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே

(வலிய தேரையுடைய நள்ளி யென்னும் வள்ளலின் காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்களின் பாலிலிருந்து கிடைத்த நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றி நன்றாக விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய விரும்பத்தகுந்த சோற்றை, ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு, விருந்தினர் வருவார் என்பதற்கு அடையாளமாகக் கரைந்த காக்கைக்குரிய அப்பலியானது, சிறிதளவே ஆகும்.)

புறநானூறு (278)

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே.

(நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று, வாளைக் கையிலேந்திப் போர்களத்திற்குச் சென்றாள். அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.)

பதிற்றுப்பத்து (ஆறாம் பத்து-முதற்பாடல்)

பதிற்றுப்பத்து (ஆறாம் பத்து பாடல் 1)

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு

துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானல் குட புலம் முன்னி,
வல் துழந்த தடந் தாள் நாரை
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள்
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த
 அந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்;
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம்
வலை விரித்தன்ன நோக்கலை
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.

(சேரலாதா! வண்டு மொய்க்க அடும்பு பூத்திருக்கும் கானலில் நண்டுகள் நடத்து சென்ற தடத்தை ஊதைக்காற்று மணலை இறைத்து தூவி மறைக்கும் நிலத்தில் நீ விறலியரின் பாடலைக் கேட்டுக்கொண்டே மகிழ்வதைப் பார்த்த மற்ற நாட்டு மன்னர்கள் நீ மென்மையானவன் என்று நினைத்தால் அவர்கள் உன்னை அறியவில்லை. இளைஞரின் தண்ணுமை முழக்கத்துடன் நீ போருக்கு வந்துவிட்டால் உன் நோக்கம் கூற்றுவன் வலை விரித்தது போல் இருக்கும். பாம்பைக் கொல்லும் மழைமேகத்து இடி போன்றவன் நீ. உன் படைவீரர் பனைமடல் மாலை சூடிக்கொண்டு செல்வதைக்காணும் கழுகுகள் தமக்கு இரை உண்டு என்ற நம்பிக்கையுடன் வட்டமிடும்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page