under review

ரா.ராகவையங்கார்

From Tamil Wiki
ரா.ராகவையங்கார்

ரா.ராகவையங்கார் (செப்டம்பர் 20, 1870 - ஜூலை 11, 1946) தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் இதழாளர். சேது சமஸ்தான மகாவித்துவான் என அழைக்கப்பட்டார். செந்தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

ரா.ராகவையங்கார் தமிழ்நாட்டில் சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் செப்டம்பர் 20,1870 -ல் ராமாநுஜையங்கார்- பத்மாசனி அம்மையார் இணையருக்கு பிறந்தார். ரா. ராகவையங்காரின் ஐந்தாம் வயதில் தந்தை இறந்தார். தாய்மாமாவும் சேது சமஸ்தான அரசவைப் புலவராக இருந்தவருமான சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் இராமநாதபுரத்தில் வளர்ந்தார். முத்துசாமி ஐயங்காரின் மகன் தமிழறிஞர் மு. இராகவையங்கார். இராமநாதபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றபின் தன் மாமாவிடமிருந்தும், சேதுசமஸ்தான புலவர்களிடத்தும் தமிழும் சம்ஸ்கிருதமும் பயின்றார்.

தனி வாழ்க்கை

ராகவையங்கார் 1888-ம் ஆண்டில் தன்னுடைய 18-வது வயதில் மதுரையில் ராமநாதபுரம் அரசர் உருவாக்கிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டே ஜானகி அம்மாளை மணந்தார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுஜ ஐயங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேஷையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.

இராமநாதபுர சேது சமஸ்தானத்தின் அரசராக இருந்த பாஸ்கர சேதுபதி தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக ரா. ராகவையங்காரை நியமித்தார்.சமஸ்தான அறக்கொடையில் இருந்து ஆண்டுதோறும் 635 ரூபாய் ரா. ராகவையங்காரின் வாழ்நாள் முழுக்க வழங்கும்படி உரிமைப் பத்திரம் ஒன்றைப் பதிவுசெய்து கொடுத்தார்.

ரா.ராகவையங்கார் பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க ராஜராஜேஸ்வர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி என்னும் தாத்தா, தந்தை, பெயரன் ஆகிய மூவரின் அரசவையிலும் புலவராகத் திகழ்ந்தார். இவர் அரசவைப் புலவராக இருந்த காலத்தில் அந்த அரசவைக்கு வருகைதந்த விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு சமய விற்பன்னர்களுடன் கலந்துரையாடினார். விவேகானந்தர் சிகாகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு பாண்டித்துரைத் தேவர் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தார்.

இலக்கிய வாழ்க்கை

ரா. ராகவையங்காரின் முதன்மைப் பங்களிப்பு அகநானூறு (1901, 1920), தொல்காப்பியம்-செய்யுளியல், முத்தொள்ளாயிரம், இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை ஆகியவற்றைப் புத்தகமாகப் பதித்தது. குறுந்தொகை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றிற்கு உரை எழுதினார்.

நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரை

செப்டம்பர் 4, 1901 அன்று, பாலவநத்தம் நிலக்கிழார் பாண்டித்துரைத் தேவர் முயற்சியால், ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதியின் ஆதரவோடு, மதுரையின் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. அதன் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக ரா.ராகவையங்கார் பொறுப்பேற்றார். தமிழ்ச்சங்கம் சார்பில் பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார்.

பார்க்க நான்காம் தமிழ்ச்சங்கம்

செந்தமிழ் இதழ்

தமிழ்ச்சங்கத்தின் சார்பில் டிசம்பர் 7, 1902 அன்று செந்தமிழ் இதழ் தொடங்கப்பட்டது. அந்த இதழின் முதலாவது ஆசிரியராக ரா. ராகவையங்கார் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுரைகளை எழுதி வந்தார்.

பார்க்க செந்தமிழ் இதழ்

பிற பணிகள்

1906-ம் ஆண்டு, ரா. ராகவையங்கார் தான் வகித்து வந்த செந்தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை தன் மாமனின் மகனான மு. இராகவையங்காரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து தேவகோட்டைக்குச் சென்று, மெ. அரு. இராமநாதன் செட்டியார் என்பவரின் ஆதரவில் சில காலம் தங்கியிருந்தார். 1910-ம் ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்திற்குத் திரும்பி, இராஜராஜேஸ்வர சேதுபதியின் அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.

1935-ம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் முதன்மை ஆராய்ச்சியாளராக 1935-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்பொழுது தமிழிலக்கிய, இலக்கண ஆய்வில் ஈடுபட்டதோடு முதுகலை மாணவர்களுக்குத் தமிழிலக்கியத்தைக் கற்பித்தார்.

விருதுகள்

  • மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்ற உ.வே.சாமிநாதையர், மகாவித்துவான் என்னும் பட்டத்தை ரா.ராகவையங்காருக்கு வழங்கினார்.
  • வடமொழியில் ரா.ராகவையங்காருக்கு உள்ள புலமையைப் பாராட்டி சம்ஸ்கிருத சமிதி இவருக்கு பாஷாகவிசேகரர் என்னும் பட்டத்தை வழங்கியது.
நாட்டுடைமை

ராகவையங்காரின் படைப்புகள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மறைவு

1941-ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், இராமநாதபுரத்தில் உள்ள தன்னுடைய மாளிகையில் தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழித்தார். ஜூலை 11,1946-ல் மரணமடைந்தார்.

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

ரா.ராகவையங்கார் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகுத்து 1946-ம் ஆண்டு ஆனிமாத செந்தமிழ் இதழை ரா. ராகவையங்கார் நினைவு மலராக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.

நூல்கள்

வ.எண் மு.பதிப்பு ஆண்டு நூல் குறிப்பு
1 1917 வஞ்சிமாநகர் ஆய்வுரை
2 1924 சேதுநாடும் தமிழும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 13 ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்பட்டது
3 1927 புவி எழுபது செய்யுள் நூல்
4 1932 தொழிற்சிறப்பு செய்யுள் நூல்
5 1933 திருவடிமாலை செய்யுள் நூல்
6 1933 நல்லிசைப் புலமை மெல்லியர்கள் ஆய்வு நூல்
7 1934 அண்டகோள மெய்ப்பொருள் ஆய்வு நூல்
8 நன்றியில் திரு செய்யுள் நூல்
9 1937 பாரிகாதை செய்யுள் நூல்
10 1938 அபிஞான சாகுந்தலம் வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட நூல்
11 1941 தமிழ் வரலாறு
12 1949 தித்தன் ஆய்வு நூல்
13 1951 கோசர் ஆய்வு நூல்
14 1983 இராசராசேசுவரசேதுபதி ஒருதுறைக் கோவை செய்யுள் நூல்
15 1985 ஆத்திசூடி உரை
16 1987 ஆராய்ச்சிக் கட்டுரைகள்
17 1992 இனிய இலக்கியம்
18 1994 கம்பர்
19 1994 செந்தமிழ் இன்பம்
20 1994 தமிழக குறுநில வேந்தர்கள்

பதிப்பித்த நூல்கள்

வ.எண் மு.பதிப்பு ஆண்டு நூல்
1 1901 அகநானூறு
2 1902 ஐந்திணை ஐம்பது உரை
3 1902 கனாநூல்
4 1903 வளையாபதிச் செய்யுட்கள்
5 1903 மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை
6 1903 இனியவை நாற்பது மூலமும் உரையும்
7 1903 நேமிநாதம் மூலமும் உரையும்
8 1904 திருநூற்றந்தாதி மூலமும் உரையும்
9 1904 திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும்
10 1904 பன்னிருபாட்டியல்
11 1904 நான்மணிக்கடிகை
12 1905 முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மூலம்
13 1917 தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை
14 1946 குறுந்தொகை விளக்கம்
15 1949 பெரும்பாணாற்றுப்படை
16 1951 பட்டினப்பாலை

உசாத்துணை


✅Finalised Page