under review

நிலைமண்டில ஆசிரியப்பா

From Tamil Wiki

ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே மாற்றமில்லாமல் தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவு பெறுவது நிலைமண்டில ஆசிரியப்பா. ‘மண்டிலம்’ என்பதற்கு வட்டம் என்பது பொருள். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள காதைகள் ஒவ்வொன்றும் ‘என்’ என முடியும் நிலைமண்டில ஆசிரியப்பாக்களாகும்.

நிலைமண்டில ஆசிரியப்பா இலக்கணம்

  • ஆசிரியப்பாவிற்குரிய பொது இலக்கணங்களைப் பெற்று வரும். எல்லா அடிகளிலும் நான்குச் சீர்களைப் பேற்று வரும்.
  • ஈற்றடி இறுதிச் சீர் ‘ஏ’ அல்லது ‘என்’ என்று வரும்.
  • வட்டம் எவ்வாறு தொடங்கிய இடத்திலேயே மறுபடியும் வந்து முடியுமோ அதுபோல நாற்சீரடியாகத் தொடங்கி நாற்சீரடியாகவே மாற்றமில்லாமல் தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவது நிலைமண்டில ஆசிரியப்பா. நிலையாக ஒரே தன்மை கொண்ட பாடலாக அமைவதால் நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படுகிறது.

உதாரணப் பாடல்

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

(குறுந்தொகை-18)

மேற்கண்ட பாடல் ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, எல்லா அடிகளிலும் நான்கு சீர்கள் பெற்று, ஈற்ரடியின் இறுதிச் சீரில் ஏகாரம் பெற்றுள்ளதால் இது நிலைமண்டில ஆசிரியப்பா.

உசாத்துணை


✅Finalised Page