under review

ஞானானந்த புராணம்

From Tamil Wiki
ஞானானந்த புராணம்

ஞானானந்த புராணம் (விசுவாச விளக்கம் என்னும் ஞானானந்த புராணம்) (1874), கிறித்தவ இலக்கிய நூல்களுள் ஒன்று. இலங்கை தெல்லிபழையைச் சார்ந்த தோம்பிலிப்பு நாவலரால் இயற்றப்பட்டது. தொம் தியோகு என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க இப்புராண நூல் இயற்றப்பட்டது.

பிரசுரம், வெளியீடு

ஞானானந்த புராணம், 1874-ல், சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த. ஜெகராவு முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலுக்கு தி. விசாகப் பெருமாளையர், புரசை சபாபதி முதலியார், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, ஆ. இராஜரத்தின முதலியார் உள்ளிட்ட பலர் சாற்றுக்கவி வழங்கியுள்ளனர். இந்நூல் பொ.யு. 1825-க்கு முன்பு இயற்றப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆசிரியர் குறிப்பு

ஞானானந்த புராணத்தை இயற்றியவர், இலங்கை தெல்லிபழையைச் சேர்ந்த தோம்பிலிப்பு நாவலர். கத்தோலிக்கக் திறித்தவராவான இவர் இலக்கண, இலக்கியங்களிலும், வேத நூல்களிலும் புலமை பெற்றவர்.

நூல் அமைப்பு

ஞானானந்த புராணம் உற்பத்தி காண்டம், உபத்திரிய காண்டம், உத்தான காண்டம் என மூன்று காண்டங்களை உடையது. காண்டங்கள், சருக்கங்களால் பகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் 23 சருக்கங்கள் உள்ளன. நூலின் முகப்பில் தற்சிறப்புப் பாயிரம் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கடவுள் வணக்கம், தேவமாதா வணக்கம், சம்மனசுகள் வணக்கம், அப்போஸ்தலர் வணக்கம், பாப்புகள் வணக்கம், குரு வணக்கம், அவையடக்கம், நூற்பயன், ஆக்குவித்தோன் பெயர் ஆகியன இடம் பெற்றுள்ளன. இந்நூலில் 1104 விருத்தப்பாக்கள் உள்ளன.

உற்பத்திக் காண்டம்

உற்பத்திக் காண்டத்தில் பிரதம ஆரம்பச் சருக்கம் , பரிசுத்த மாதாவின் திரு அவதாரச் சருக்கம், மாமிச வயிக்கியச் சருக்கம், தேவப்பிரகாசச் சருக்கம், தரிசனைச் சருக்கம், ஞான ஸ்நானச் சருக்கம், காட்சிச் சருக்கம் என ஏழு சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

உபத்திரிய காண்டம்

உபத்திரிய காண்டத்தில் வீரப்பிரதக்கணச் சருக்கம், பூங்காவனம் புகு சருக்கம், சதிமானச் சருக்கம், நிர்ப்பந்தச் சருக்கம், ஆஸ்தானச் சருக்கம், தீர்வைச் சருக்கம், வழிபடு புலம்பற் சருக்கம், கொலைக்களச் சருக்கம், பிரலாபச் சருக்கம், பிரேதபத்திச் சருக்கம், மகாப்பிரலாபச் சருக்கம் எனப் பதினொரு சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

உத்தான காண்டம்

உத்தான காண்டத்தில் பாதாளகமனச் சருக்கம், பிரத்தியட்ச காட்சிச் சருக்கம், ஆகாசக மனச் சருக்கம், தெய்வீகக் காட்சிச் சருக்கம், பொது நடுத் தீர்வைச் சருக்கம் என ஐந்து சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

பாடல் நடை

குழந்தை இயேசு பிறப்பு

ஈன்றபாலனைச் சம்மனசேந்தியே
சான்றதாகவுந் தாய்கைகொடுத்தனன்
மூன்று காலமு மோசமில்கன்னியுந்
தான்றிருக்கரந் தாழ்வுறவேந்தினாள்.

ஏந்திப்பாலனை யேதமில்கன்னியும்
போந்தமாணிக்கம் பூண்டவறிஞர்போற்
சேர்ந்தளாவித் திருமுகமுத்திக்கொண்
டோர்ந்தசிந்தை யுவகையினோங்கினாள்

கண்ணிலாதவர் கண்ணொளிபெற்றபோ
லெண்ணிலாத களிப்புடனீன்றதாய்
பெண்ணிற்கற்பினள் பேணித்துகிலினாற்
கண்ணியன் றனைப் போர்த்தனளாமரோ.

உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுதல்:
ஆதிதன் புதல்வாபோற்றி யற்புதரூபா போற்றி
கோதிலாக் கன்னியீன்ற குருபரா போற்றிபோற்றி
சோதியின் றிரள்கொண்டோங்கித் தோற்றினாய்போற்றி யென்பாற்

காதிய வினைகடீர்க்குங் கருணையங்கடலே போற்றி
ஆகியிற் றந்தையான வதஞ்செய்த வளவிற்றோட
மோதிய வுலகுக்கெல்லா முற்றதாற் றுறக்கமெய்தாத்
தீதுறு பாதாளத்திற் சிறைப்பட்டோஞ் சிறையுற்றெம்பா

வேதிலாக் காட்சியோடிங் கெழுந்தவா போற்றிபோற்றி
பொன்றிகழ் மாடமின்றிப் புகழுறா மிடிமையொன்றிக்
குன்றினி லாயர்மாட்டுக் குடிலினி தென்றுவுன்னித்
துன்றிய கற்பாடன்பாற் றோன்றியோர் குருசிற்றுஞ்சி
வின்றெமைப் புரக்கவந்த விறைவனே போற்றிபோற்றி.

மதிப்பீடு

விசுவாச விளக்கம் என்னும் ஞானானந்த புராணம், 18-ம் நூற்றாண்டில் தோன்றிய தொன்மையான கிறிஸ்தவ இலக்கிய நூல்களுள் ஒன்று. பாரம்பரிய மரபிலிருந்து விலகாமல் கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கூறும் நூல்களுள் ஒன்றாக ஞானானந்த புராணம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page