கிறிஸ்தாயனம்
கிறிஸ்தாயனம் ( 1865) ஜான் பால்மர் எழுதிய கிறிஸ்தவக் காப்பியம். தமிழில் எழுதப்பட்ட தொடக்கக் கால கிறிஸ்தவக் காப்பியங்களில் ஒன்று.
எழுத்து, வெளியீடு
கிறிஸ்தாயனம் ஜான் பால்மர் எழுதிய காவியம். 1865-ம் ஆண்டு கிறிஸ்தவ கலாவிருத்திச் சங்கத்தாருக்காக நாகர்கோவில் இலண்டன் மிஷன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது.
பாயிரத்தில்
பண்டிறைவன் விதித்தளித்த பழவேற்பாடதில் குறியாய்
விண்டுரைத்த தேவசுதன் விடுத்தாந்த மதுவிரிவாய்
கொண்ட சுவிசேஷமதை கூர்ந்தாராய் தெளிதுணர
தண்டமிழால் இங்கமைத்து தமியேன் உரைக்கலுற்றேன்
என சுவிசேஷத்தின் புதிய ஏற்பாட்டை செய்யுளில் உரைப்பது தன் நோக்கம் என ஜான் பால்மர் குறிப்பிடுகிறார்.
அமைப்பு
கிறிஸ்தாயனம் பெரும்பாலும் விருத்தப்பாவில் எழுதப்பட்ட காவியம். பாயிரம், தெய்வ வணக்கம், நூல் வரலாறு ஆகிய பகுதிகளுடன் தொடங்குகிறது. பாலகாண்டம், கிரியா காண்டம், அவஸ்தா காண்டம், ஆரோகண காண்டம் என்னும் நான்கு காண்டங்களிலாக 842 செய்யுள்கள் கொண்டது. ஒவ்வொருகாண்டத்திற்குள்ளும் துணைத்தலைப்புகள் உண்டு.
பாலகாண்டம்
கிறிஸ்துவின் பிறப்பு முதல் 12 வயது வரையிலான செய்திகளை 55 பாடல்களில் இந்த காண்டம் பாடுகிறது
கிரியாகாண்டம்
யேசு செய்த அற்புதங்களை கொண்ட கிரியா காண்டம் 50 துணைத்தலைப்புகளும் 426 பாடல்களும் கொண்டது.
அவஸ்தா காண்டம்
யேசுவின் பாடுகளை விவரிக்கும் இந்தப் பகுதி 249 பாடல்களும் 24 துணைப்பகுதிகளும் கொண்டது. அவஸ்தாகாண்டம் ஏழு வாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது. ஆதித்தவாரம் (10 பாடல்கள்) சோமவாரம் (3 பாடல்கள்) குசவாரம் (50 பாடல்கள்) ஒஉதவாரம் (4 பாடல்கள்) குருவாரம் (86 பாடல்கள்) சுக்கிரவாரம் (82 பாடல்கள்) மந்தவாரம் (10 பாடல்கள்) உள்ளன.
ஆரோகணகாண்டம்
ஏசு விண்ணேகியதைக் குறிக்கும் ஆரோகண காண்டம் 11 துணைத்தலைப்புகள் கொண்டது. 106 பாடல்கள் அடங்கியது.
இலக்கிய அழகியல்
கிறிஸ்தாயனம் பலவகையிலும் தேம்பாவணி காவியத்துக்கு நிகரானது. விருத்தப்பாவில் எழுதப்பட்டுள்ளது, ஆனால் பண்டிதர்களுக்குரியதாக இல்லாமல் அனைவரும் வாசிக்கும்படி அமைந்துள்ளது.
விதைத்தான் ஓர் உழவனங்கு விதைத்த வித்தில்
சிதைப்பாக வித்து சில தெருக்கண் வீழ
மிதிப்பார் தாள்பட்டு உழல புட்கள்
கதிப்பாய் வந்து அருந்தினவே கண்ணுற்றன்றே
வேறுசில விதை பாறை மீதில் வீழ
கூறுபெற முளைத்து அதற்பின் குளிர்மையற்று
மீறியெழு பரிதியதின் வெப்பத்தாலே
ஊறுபட அதுசால உலர்ந்ததன்றே
இலக்கிய இடம்
தமிழில் எழுதப்பட்ட கிறிஸ்தவக் காப்பியங்களில் யேசுவின் வரலாற்றைச் சொல்லும் தொடக்ககால காப்பியமாக கிறிஸ்தாயனம் கருதப்படுகிறது
உசாத்துணை
- கிறிஸ்தவக் காப்பியங்கள் யோ.ஞானசந்திர ஜான்சன்
- ஞானசந்திர ஜான்சன் இணையப்பக்கம்
- கிறிஸ்தாயனம் - ஆசியவியல் நிறுவனம் வெளியீடு
- இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
- மைலாடி சர்ச் இணையப்பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Jun-2023, 08:18:14 IST